பேராசிரியர் மருத்துவர்
க.கார்த்திகேயன்,
முதண்மையர்(கல்வி) மணக்குளவிநாயகர் மருத்துவக் கல்லூரி, தலைமை தோல்நோய் துறை, மதகடிப்பட்டு, புதுச்சேரி.
தோலின் நிறமிழப்பு நோய்கள் (depigmented disorders) பலவகைப்படும். இவைகளினால் அல்பைனிஸம் (Albinism)வெண்மைத்தோல் (leukoderma), வெண்படை (vitiligo)ஆகியவை முக்கியமானவை.
முழு வெண்மை நோய் (Albinism)
இது பரம்பரை நோய். தோல்பரப்பு, முடி, கண்ணின் கருமணி இவைகள் நிறமற்று வெளுத்திருக்கும். இந்த நோய் உள்ளவர்கள் நிறம் வாழ்நாள் முழுவதும் வெண்மையாக இருக்கும். இவர்களால் சூரிய ஒளியின் தாக்கத்தை தாங்க முடியாது. வெயிலில் சென்றால் தோல் சிவந்து எரிச்சல் ஏற்படுத்தும்.

வெண்மைத்தோல் (leukoderma)
தோலின் மேற்பரப்பில் சில இடங்களில் நிற இழப்பு ஏற்பட்டு வெண்மையாக தோன்றும். இதன் காரணங்கள் வெளிப்படையாகத் தோன்றும். இதன் காரணங்கள் வெளிப்படையாக தெரியும். இது இடைக்காலத்தில் (acquired) வரும் நோய்.
வெண்படை (vitiligo)
இதுவும் இடைக்காலத்தில் acquird வரும் நோய். முற்காலத்தில் வெண்குஷ்டம் என்பது இந்த வியாதிக்கு பெயர். இது தவறான பெயர். ஏனென்றால், இந்த வியாதி குஷ்டமே அன்று. குஷ்டத்திற்கும் இதற்கும் தொடர்பே இல்லை. இது இப்பெயரினால் மக்களிடையே ஒரு பீதியை உண்டாக்கி இருக்கிறது. வெண்குஷ்டம் நாம் பார்க்கும் குஷ்ட நோய் போல் ஒட்டுவார் ஒட்டி இல்லை. இது தோலில் ஏற்படும் சாதாரண நிறமாற்றமே ஆகும். வெண்படை என்பது சருமத்தில் சில இடங்களில் நிறம் நீங்கி வெள்ளை வெளேரென்று இருக்கும் இடங்களை குறிக்கும். இந்த வெள்ளை இடங்கள் கருமை நிறம் உள்ள மக்களுக்கு பளிச்சென்று தெரியும். இந்த நோய் சராசரி ஜனத்தொகையில் ஒரு சதவீத மக்களை பாதிக்கிறது. எந்த வயதினரையும் இருபாலரையும் பாதிக்கிறது.
நோயின் காரணங்கள்
இந்த நோயின் காரணம் இன்னும் திட்டவட்டமாக அறியப்படவில்லை… ஆனால் இது ஒரு பரம்பரை நோய் என்று கருதப்படுகிறது. ஏனென்றால் சிலரைத்தான் இது பாதிக்கிறது. இந்த நோய் வர பல காரணங்கள் உள்ளன. அவை:
- தன் தடுப்பாற்றல்:நிறமிகளுக்கு எதிர்ப்பாக வெள்ளை அணுக்கள் தாக்கி வெண்மை நிறம் ஏற்படுத்தல்.
- நச்சுத்தன்மை உள்ள பொருட்களால் நிறமிகள் பாதிக்கப்படும்.
- நரம்புகளில் ஏற்படும் பாதிப்பு.
சில நோய்களுடன் சேர்ந்து காணப் படுவதால் அதனுடன் ஏதாவது தொடர்பு இருக்க ஏதுவாகிறது.
- சர்க்கரை வியாதி
- தைராய்டு சுரப்பி சரிவர இயங்கா திருத்தல்.
- பெர்னீசியஸ் அனிமியா போன்ற ரத்த சோகை நோய்.
ரத்த நோயின் அறிகுறிகள்
சருமம் நிறத்தில் வெள்ளை நிறம் மாறுதல் அடைகிறது. இது நம் உடலில் கண்ணுக்கு அருகிலும், அக்குளிலும், மார்பகங்களுக்கு கீழும், பால் உறுப்புகளிலும் காணப்படுகிறது. இதிலிருந்து இது சருமத்தில் தளர்ந்த பாகங்களை சுலபமாகப் பாதிக்கிறது என்பது தெரிகிறது. ஆனால் மற்ற பாகங்களையும் பதிக்கலாம். கை, கால் பாதம், உள்ளங்கை, தலை, மார்பு, முதுகு போன்ற பாகங்களிலும் காணலாம். சிலருக்கு உதடுகள், உரோமம் உள்ள இடங்களில் இந்நோய் ஏற்பட்டால் ரோமமும் வெள்ளை நிறம் அடைகிறது. இது இந்த நோய் பற்றுக்கள் காணும் இடத்தை சுற்றி அதிக நிறம் தோன்றும். இந்த நோயினால் சருமத்தின் அழகு கெடுவதைத் தவிர வேறு எந்த சிரமமும் இருக்காது. வலியோ அரிப்பு எதுவுமே இருக்காது. இது முதலில் சிறிய புள்ளியாக தோன்றி பிறகு சிறிது சிறிதாக பெரியதாகலாம். சிலருக்கு உடலில் உள்ள சருமத்தில் பல பாகங்கள் பாதிக்கலாம். தோலில் காயம்பட்ட இடங்களில் இந்த நோய் தோன்றும். மேலும் இது முடியையும் மென்மையாக மாற்றும்.
மூன்று நேர அறிகுறி
வெண்படையில் மூன்று நிறங்கள் காணப்படும். அவை தோலின் நிறம், மங்கிய நிறம் மற்றும் வெண்மை நிறம் இதை மூன்று நேர அறிகுறி என்பர்.
வெண்படை தொற்றுநோயா?
இவை தொற்று நோய் அல்ல. இவை எவருக்கும் வரலாம். வெண்படை 10 வயது முதல் 50 வயது வரை ஆண், பெண் என இரு பாலருக்கும் வரலாம்.
வெண்படை நோய் பரம்பரை நோயா?
வெண்படை நோய்க்கும் பரம்பரைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வெண்படை நோய் வந்தவர்களை கணக்கிட்டால் அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு அவரது பரம்பரை காரணங்களால் இந்நோய் வந்திருக்கும்.
உணவுக் கட்டுப்பாடு தேவையா?
இந்நோய்க்கு உணவுக் கட்டுப்பாடு தேவையில்லை. வெண்படையால் உடலுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. வெண்படை உள்ளவர்களுக்கு திருமணம் ஒரு தடையில்லை. வெண்படை நோயைக் குணப்படுத்த முடியும்.
இந்நோய்க்கு பூவா தெரபி (ஊதா ஒளிக்கதிர்) என்ற சிறப்பு சிகிச்சை உண்டு.
இந்தச் சிகிச்சையின் மூலம் உடலில் ஏற்பட்ட வெண்படையை போக்கி இயல்பான நிறத்தினை கொண்டு வர முடியும்.
இந்த நோய்க்குச் செய்யப்படும் பரிசோதனை முறைகள்:
- மருத்துவப் பயனாளியின் மற்ற உறுப்புகளை பரிசோதித்தல், காது, மூக்கு தொண்டை, பல், ஈறு, மலம், சிறுநீர் முதலிய பரிசோதித்தல், வயது வந்தவர்களுக்கு ரத்தப் பரிசோதனை, பால்வினை நோய்க்கு, நீரழிவு வியாதிக்கு பரிசோதித்தல் அவசியம். மேலும் நீரழிவு, தைராய்டு சுரப்பி நோய்களுக்கு பரிசோதனை செய்ய வேண்டும்.
சிகிச்சை முறைகள்
- முதல்முதலில் எந்த நோயாளிக்கும் இந்த நோயினால் ஏற்பட்டிருக்கும் மனவேதனையை குறைப்பது இதற்கு மருத்துவப் பயனாளியிடமும், அவரது உறவினரிடமும் நோயின் தன்மையை தக்கபடி எடுத்துக் கூறி இந்நோய் குஷ்டம் அன்று, இது மற்றவர் யாருக்கும் பரவாது என்று எடுத்துக் கூறுவது நல்லது.
- நிற அணுக்கள் இல்லாத மருத்துவப் பயனாளிகளுக்கு இந்த பற்றுடன் வாழ சில உபாயங்களாக பொது நிறத்திற்கு ஏற்ப சில செயற்கை நிறங்கள் வாங்கி நாம் வெளியே செல்லும்போது மற்றவர்களுக்கு தெரியாமல் இருப்பதற்கு பூசிக்கொள்ளலாம்.
- உடலில் வேறு எங்கு கோளாறு இருந்தாலும் அதைக் கண்டறிந்து அதனை குணப்படுத்துதல். இது மிகவும் அவசியம். ஏனெனில், பலருக்கு இதனால் இந்த வெண் நிறப்பற்று மறையலாம்.
- நிற அணுக்கள் சரிவர இயங்காதவர்களுக்கு அதனை இயங்க வைத்து சில மருந்துகள் கொடுக்கலாம். அவை. மேற்பூச்சு மருந்துகள்.
தோலின் வெண்படை குறைவாக காணப்பட்டால் மேற்பூச்சு மருந்து பயன்படுத்தலாம்.
- கார்டிகோஸ்டிராய்டு மருந்து (Corticosteroids)
- டாக்ரோலிம்மஸ் (Tacrolimus)
- பிமிக்ரோலிம்மஸ் (Pimecrolimus)
- சோரலன் (psoralen)
முதலியன பயன்படும்.
உள்ளே சாப்பிடும் மருந்துகள்
உடலில் இரும்புச் சத்து இன்றி சோகையுடன் காணப்படுபவர்களுக்கு இரும்பு மாத்திரை மற்றும் வைட்டமின் மாத்திரை அவசியம். சோரலன் (psoralen), நியூ மியூசுவரர் (neopsoralen) முதலியவற்றை நாள்தோறும் ஒரு மாத்திரை வீதம் காலையில் கொடுத்து பூவா அறையில் ஊதா கதிர்வீச்சு அளிக்கலாம். அது மட்டுமின்றி யூவிபி புற ஊதாகதிர் வீச்சு பயன் அளிக்கும்.
வெண்படை உண்மையில் குஷ்டம் அன்று. நம் தமிழ்நாட்டில் இந்த வியாதி வந்தவுடன் மனச் சோர்வடைகின்றனர். இது முக்கியமாக திருமண வயதில் உள்ள இளம் பெண்களுக்கு மிகவும் மன வேதனை அளிக்கிறது. மருத்துவமனையில் இருந்து மருத்துவப் பயனாளிகளை அதிகமாக ஊக்கமளிக்க வேண்டும். திருமணம் செய்து கொள்ள விரும்பும் மருத்துவப் பயனாளிகளுக்கு மருத்துவர்கள் சரிவர நோயின் தன்மையை கூறி திருமணம் செய்து கொள்ள ஊக்குவிக்கலாம். வெண்படைக்கு பல விதமான வைத்தியம் செய்யலாம். சிலருக்கு இந்த வெண்படை பரவாமல் இருந்தால் அதை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும். அதை சரி செய்ய பல வகை முறைகள் உள்ளன. அவை:
- குத்தி ஒட்டுதல் (punch grafting)
- பிளவுதோல் ஒட்டுதல் (split skingrafting)
- கொப்புள் தோல் ஒட்டுதல் (blistergrafting)
- தன்னியக்க கருமை நிறமி பரிமாற்றம் (melanocyte transfer)
இவ்வகை சிகிச்சை சிறிய இடங்கள் உதடு இமை முதலிய இடங்களில் பயன் அளிக்கும்.
