
மருத்துவர் தங்கவேல்
குழந்தைகள் நல மருத்துவர்,
திருச்சி
- குழந்தை பிறந்தவுடன் சர்க்கரைத் தண்ணீர் கொடுக்கலாமா?
சர்க்கரைத் தண்ணீர் மட்டுமல்ல; தாய்ப்பாலை தவிர்த்து, வேறு எந்த உணவும் கொடுக்க கூடாது.
- குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் குறைவாக வருகிறது வேறுபால் கொடுக்கலாமா?
குழந்தை பிறந்தவுடன் தாயின் மார்பில் சீம்பால் சுரக்கும். அதன் அளவு குறைவாகத்தான் இருக்கும் ஆகவே அதுவே போதுமானது.
- குழந்தைக்கு பால் பத்தவில்லை என்றால் பவுடர் பால் கொடுக்கலாமா?
குழந்தைக்கு பால் பத்தவில்லை என்றால் குழந்தைகள் நல மருத்துவரிடம் தொடர்பு கொண்டு தாய்க்கும், சேய்க்கும் உள்ள பிரச்சினைகளை சரி செய்ய வேண்டுமே ஒழிய புட்டிப் பால், பவுடர் பால், மாட்டுப் பால் உள்ளிட்ட வேறு எந்தப் பாலும் கொடுக்கக் கூடாது.
- குழந்தை பிறந்து எத்தனை மாதத்திற்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்?
முதல் ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். ஆறு மாதத்திற்கு பிறகு இணை உணவோடு சேர்த்து தாய்ப்பாலை இரண்டு வயது வரை கொடுக்கலாம்.
- குழந்தைக்கு வயிறு வீக்கம் இருந்தால் கிரேப் வாட்டர் கொடுக்கலாமா?
குழந்தைக்கு வயிறு வீக்கம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கிரேப் வாட்டர் சுடுவான் வசம்பு உள்ளிட்ட எந்த பொருட்களும் குழந்தைக்கு கொடுக்கக் கூடாது அவ்வாறு கொடுத்தால் குழந்தைக்கு வயிறு பாதிப்புகள் அதிகமாகி குழந்தையின் நலம் பாதிக்கப்படும்
- குழந்தைகளுக்கு பிறந்தவுடன் என்னென்ன தடுப்பூசி போட வேண்டும்?
மஞ்சள் காமாலை, காசநோய் மற்றும் போலியோ ஆகிய நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகளை போட வேண்டும்.
- தாய்ப்பால் குடிக்கும் குழந்தை தொடர்ச்சியாக அழுது கொண்டே இருந்தால் தாய்ப்பால் பத்தவில்லை என்று அர்த்தமா?
குழந்தை தொடர்ச்சியாக அழுவதற்கு பல காரணங்கள் உள்ளன அதில் ஒன்றுதான் தாய்ப்பால் பத்தாமல் அழுவது. ஆகவே குழந்தைகள் நல மருத்துவரிடம் பரிசோதித்து எதனால் அழுகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
- குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள் யாவை?
நோய் எதிர்ப்பு சக்தி உடல் வளர்ச்சி அறிவு வளர்ச்சி ஆகிய பல்வேறு நன்மைகள் கிடைக்கும்
- தாய்ப்பால் கொடுக்காமல் விட்டால் குழந்தைக்கு என்னென்ன தீமைகள் ஏற்படும்?
சளி, இருமல், வாந்தி, வயிற்றுப் போக்கு, காதில் சீழ் வடிதல் போன்ற நோய் தொற்று அடிக்கடி ஏற்படுதல்
உடல் எடை குறைந்து குழந்தைக்கு சவலை நோய் ஏற்படுதல்
- தாய்ப்பால் தவிர பிற விலங்கின் பால்கள் கொடுப்பதால் குழந்தைக்கு என்னென்ன தீமைகள் ஏற்படும்?
வாந்தி, வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, வயிறு வீக்கம் உடம்பில் கால்சியம் அளவு குறைந்து வலிப்பு ஏற்படுதல் சிறுநீர் செயலிழப்பு ஆகிய தீய விளைவுகள் ஏற்படும்.

