தி.மு.க. மீது முதலமைச்சர் ஜோசப் விஜய் குற்றச்சாட்டு: பதில் கூற அனுமதி மறுக்கப்பட்டதால், தி.மு.க. வெளிநடப்பு!

4 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

காவல்துறை மானியக் கோரிக்கை:

சென்னை, செப்.7 திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசிய நிலையில், அதற்கு பதில் அளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதலமைச்சர் ஜோசப் விஜய்யும் பேரவைத் தலைவரிடம், ‘வாய்ப்பு கொடுங்கள்’ என்று கூறினார். ஆனால், திமுகவினர் பதில் அளிக்க அனுமதி அளிக்க முடியாது என பேர வைத் தலைவர் திட்டவட்டமாகக் கூறியதால், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. முதல மைச்சர் ஜோசப் விஜய்யின் பொறுப்பில் உள்ள காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் கடந்த 3 ஆம் தேதி நடைபெற்றது. இன்று (7.9.2026) அதற்கான பதிலுரையை முதலமைச்சர் ஜோசப் விஜய் பேரவையில் ஆற்றினார்.

முதலமைச்சர் ஜோசப் விஜய் பேச்சு

முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசும்போது, திமுகவினரின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தார்.  சர்க்காரியா கமிஷன் அறிக்கை, அமலாக்கத்துறை கடிதம் என திமுக ஆட்சியில் ஊழல்கள் நடைபெற்றதாகவும் பேசினார் முதலமைச்சர் ஜோசப் விஜய்.

திமுக கடும் எதிர்ப்பு

இதற்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. முதலமைச்சர் ஜோசப் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் பேசிக்கொண்டிருந்தபோதே திமுக சட்டமன்ற உறுப்பினர்கள்  இருக்கையில் இருந்து எழுந்தனர். ஆனாலும் தொடர்ந்து முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது பதிலுரையைப் பேசி முடித்த நிலையில், திமுக தரப்பில் பேச வாய்ப்பு கோரப்பட்டது. திமுகவினரைப் பேச அனுமதிக்க முடியாது என்று பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுகவினர் அவையில் முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். மேலும், பேரவைத் தலைவர் இருக்கைக்கு முன் அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். பேரவைத் தலைவர் இருக்கைக்கு முன்பாக நின்று, முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் பேச்சுக்குப் பதில் அளிக்க வாய்ப்பு தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

‘‘முதலமைச்சர் பேசும்போது, நீங்கள் அமைதியாக இருந்திருந்தால் நான் வாய்ப்பு கொடுத்திருப்பேன். ஆனால், அவர் பேசுவதைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டுமே நீங்கள் வந்ததாக எனக்குத் தோன்றியது. அதனால் நீங்கள் பேச நான் அனுமதிக்க மாட்டேன்’’ என்று தெரிவித்து அனுமதி மறுத்தார்.

அவை முன்னவரும், அமைச்சருமான செங்கோட்டையன் பேசுகையில், ‘‘திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் காலையிலிருந்து முதலமைச்சர் பேசுவதற்குத் தடையாகவும், தொடர்ந்து சட்டமன்ற விதிகளுக்கு மாறாகவும் நடந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.

பேரவைத் தலைவரிடம் சொன்ன
முதலமைச்சர் ஜோசப் விஜய்

இதைத்தொடர்ந்து, பேரவைத் தலைவர் இருக்கை முன்பு கூடியிருந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் முதலமைச்சர் ஜோசப் விஜய்யி டமே பேச அனுமதி அளிக்க வலியுறுத்துமாறு கேட்டுக் கொண்டனர். முதலமைச்சர் ஜோசப் விஜய், பேரவைத் தலைவரிடம் ‘‘திமுகவினர் பேச வாய்ப்பு கொடுங்கள்’’ என்று கூறினார்.

ஆனால், முதலமைச்சர் ஜோசப்விஜய் முன் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க அனுமதி அளிக்க முடியாது என திட்டவட்டமாக கூறினார் பேரவைத் தலைவர். அனுமதி அளிக்க முடியாது என பேரவைத் தலைவர் கூறியதை அடுத்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

திமுக மீது பொய்யான குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின்

பின்னர் சட்டமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது;

பொய் குற்றச்சாட்டு

‘‘தவெகவின் 114 நாட்கள் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதை ஆதாரத்துடன் கூறினோம். முதலமைச்சர் இன்று (7.9.2026) மொத்தம் 45 நிமிடங்கள் பேசினார். 10 நிமிடங்கள் காவல்துறை சார்ந்து கூறினார். அதன் பின்னர் எந்தவித ஆதாரமுமின்றி எங்கள் மீது குற்றச்சாட்டுகளை முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்வைத்தார். நானும், சட்டமன்ற உறுப்பினர்களும் எழுந்து, ‘எங்களுக்குப் பதில் கூற வாய்ப்பு வழங்குங்கள்’ என பேரவைத் தலைவரிடம் கூறினோம். ஆனால் எங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

அதனால் எங்களின் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் வெளிநடப்பு செய்துள்ளோம். எங்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் பதில் கூறவில்லை. மூன்று நாள்கள் நேரமிருந்தது. மனப்பாடம் செய்துவிட்டு, ஒப்புவித்தல் போட்டி மாதிரி முதலமைச்சர் பேசியுள்ளார். பஞ்ச் டயலாக், சினிமா வசனம் போன்றவைதான் அதில் இருந்தது.

முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் உதவியாளர் விஷ்ணு கனிமவளங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதனை விரைவில் வெளியிடுவேன்.

திமுக ஆட்சியில் வழக்கு இருப்பதைக் கூறு கிறார். சென்னையில் பட்டப்பகலில் கொலை நடந்துள்ளது. இதற்கெல்லாம் பதில் கூறாமல் 1970–க்கு சென்றுவிட்டார். மிசாவைப் பற்றி, சர்க்காரியா கமிஷன் பற்றி இவருக்கு ஏதாவது தெரியுமா?

அமலாக்கத்துறை கூறியது வெறும் குற்றச்சாட்டுகள் மட்டுமே! அவை இன்னும் நிரூபிக்கப்படவில்லை. சர்க்காரியா கமிஷனுக்கு பிறகு திமுக மூன்று முறை ஆட்சிக்கு வந்துள்ளது. நாங்கள் பயந்துவிடுவோம் என்பதற்காக முன்னாள் அமைச்சர் நேரு வீட்டில் சோதனை நடந்தது. 6 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த சோதனையில் அங்கு ஒன்றும் சிக்கவில்லை. மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டோம். தற்போதைய அமைச்சர்கள் மீதும் வழக்குகள் உள்ளது.”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *