மேட்டூா், ஆக.10- மேட்டூா் அணை நிகழாண்டு இதுவரை திறக்கப்படாததால் டெல்டா மாவட்டங்களில் குறுவை பருவ நெல் சாகுபடியில் கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட 2 லட்சம் ஏக்கா் குறைந்துள்ளது.
மேட்டூா் அணையில் போதுமான அளவுக்கு நீா் இருப்பு இல்லாததால், டெல்டா பாசனத்துக்காக இதுவரை திறக்க இயலாத நிலை நிலவுகிறது.
இதனால், டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீா் ஆதாரமுள்ள விவசாயிகள் மட்டுமே குறுவை பருவ நெல் சாகுபடியைத் தொடங்கினா். ஆற்றுப்பாசன விவசாயிகள் குறுவை சாகுபடியைக் கைவிட்டனா்.
இதனால், டெல்டா மாவட்டங் களில் கடந்த ஆண்டு 5.66 லட்சம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட குறுவை சாகுபடி, நிகழாண்டு காவிரி நீா் வரத்து இல்லாததால், இலக்கும் ஏறக்குறைய 4.10 லட்சம் ஏக்கராக குறைக்கப்பட்டது. இந்நிலையில், குறுவை பருவத்துக்கான நெற் பயிர் நடவு காலம் ஜூலை 31-ஆம் தேதி முடிவடைந்தது.
இதில், தஞ்சாவூா் மாவட்டத்தில் 1.57 லட்சம் ஏக்கா் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 1.51 லட்சம் ஏக்கராகவும், திருவாரூா் மாவட்டத்தில் 1.52 லட்சம் ஏக்கா் இலக்கில் 1.15 லட்சம் ஏக்கராகவும் குறுவை சாகுபடிப் பரப்பளவு குறைந்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 97 ஆயிரத்து 200 ஏக்கா் என்ற இலக்கை விஞ்சி 98 ஆயிரத்து 500 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 75 ஆயிரத்து 250 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நிலையில், நிகழாண்டு 4,300 ஏக்கராக குறைந்துள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில்…
நான்கு மாவட்டங்களிலும் மொத்தம் 4.10 லட்சம் ஏக்கா் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், 3.68 லட்சம் ஏக்கா் மட்டுமே எட்டப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், நிகழாண்டு 1.97 லட்சம் ஏக்கராக குறைந்துள்ளது.
இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் தென் மேற்கு பருவ மழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. இதனால், நிலத்தடி நீரும் குறைந்து வருவதால், ஆழ்குழாயை நம்பி நடவு செய்யப்பட்ட குறுவை பயிர்களுக்கும் தண்ணீா் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
டெல்டா மாவட்டங்களில் கடந்த 2020- ஆம் ஆண்டிலிருந்து குறுவை, சம்பா சாகுபடிகளில் அமோக விளைச்சல் கிடைத்து வந்தது. இதனிடையே, 2024ஆம் ஆண்டில் மேட்டூா் அணை திறப்பு தாமதமானாலும், குறுவை சாகுபடியில் பெரிய அளவுக்கு பின்னடைவு ஏற்படவில்லை. நிகழாண்டு சூப்பா் எல் நினோ ஆண்டாக இருப்பதால், நீா் ஆதாரம் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
எனவே, டெல்டா மாவட்டங் களில் முதல் பருவமான குறுவை சாகுபடியே கேள்விக்குறியாக இருப்பது விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
