புதுடில்லி, செப். 6- புக்கெட்டிலிருந்து டில்லி வந்த ஏர் இந்தியா விமானத்தின் தலைமைப் விமானி போதைப்பொருள் உட்கொண்டது மருத்துவப் பரிசோதனையில் உறுதியானதைத் தொடர்ந்து, அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இருப்பினும், பயணிகளின் பாதுகாப்பில் ஒன்றிய அரசின் அலட்சியப்போக்கையும், விமானிக்கு முன்னதாகவே சான்றிதழ் அளித்த மருத்துவப் பரிசோதனை நிலையத்தின் நம்பகத்தன்மையையும் இந்நிகழ்வு பெரும் கேள்விகுறியாக்கியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 4 அன்று, 137 பயணிகள் மற்றும் 8 பணியாளர்களுடன் புக்கெட்டி லிருந்து டில்லிக்கு புறப்பட்ட ஏர்பஸ் ஏ320 விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென 300 அடி உயரம் வரை கீழே சரிந்தது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட இந்த திடுக்கிடும் நிகழ்வில், பயணிகள் சிலர் காயமடைந்தனர். நல்வாய்ப்பாக விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.
இந்நிகழ்வு குறித்து விமான விபத்து புலனாய்வுப் பணியகம் நடத்திய விசாரணையின் அடிப் படையில், விமானக் குழுவினருக்குக் கட்டாயப் போதைப்பொருள் பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் இணைப் விமானிக்கு ‘நெகட்டிவ்’ என வந்த நிலையில், தலைமை விமானி நரம்புகளைப் பாதிக்கக்கூடிய ஆபத்தான போதைப்பொருளை உட்கொண்டிருந்தது உறுதியானது.
பாதுகாப்பு விதிகளின்படி ஏர் இந்தியா நிர்வாகம் அந்த விமானியை உடனடியாக பணிநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
ஒன்றிய அரசின் அலட்சியம்: விமானத்தை இயக்குவதற்கு முன்பு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் இந்த விமானிக்கு ‘கிளீன் சிட்’ கொடுத்தது யார்? இந்திய மருத்துவப் பரிசோதனை நிலையத்தின் இந்த மெத்தனப் போக்கு பயணிகளின் உயிரையே ஆபத்தில் தள்ளியுள்ளது. தவறான சான்றிதழ் அளித்து, நூற்றுக் கணக்கான பயணிகளின் உயிரை அடகு வைத்த அந்த மருத்துவப் பரிசோதனை நிலையத்தின் மீது ஒன்றிய அரசு மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?
விமானப் பயண பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்யக்கூடாது என்றும், இதுபோன்ற அலட்சியங் களுக்குக் காரணமான அமைப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
