கருத்துரிமைக்கான களத்தில் ஒன்றிணைந்து முன்னிற்போம்!

இணையவழி கையெழுத்து இயக்கம்

2014 முதல் எத்தனை எத்தனை புத்தகங்களுக்குப் பிரச்சினைகள்?
சோனியா காந்தி அம்மையாரின் தன் வரலாற்று நூலுக்கு நெருக்கடி தருவதா?
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அறிக்கை

 

2014 முதல் எத்தனை எத்தனை புத்தகங்களுக்குப் பிரச்சினைகள்? சோனியா காந்தி அம்மையாரின் தன் வரலாற்று நூலுக்கு நெருக்கடி தருவதா? கருத்துரிமைக்கான களத்தில் ஒன்றிணைந்து முன்னிற்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி அம்மையாரின் தன் வரலாற்று நூலான “பிலாங்கிங்” (Belonging: A Journey of Love) என்ற நூலை இந்தி யாவில் வெளியிட, புகழ்பெற்ற பதிப்பகமான ‘பென்குயின் ராண்டம் ஹவுஸ்’ இந்தியா நிறுவனம் ஒப்புக் கொண்டிருந்த நிலையில், அந் நூலில் சில திருத்தங்களை மேற்கொள்ளச் சொல்லி அந் நிறுவனம் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. அதனை திருமதி. சோனியா காந்தி அம்மையார் ஒப்புக் கொள்ளாத நிலையில், கடந்த ஒரு வாரமாக இது குறித்த விவாதங்கள் நடைபெற்று வந்தன.

சோனியா காந்தி அம்மையார் மறுத்ததால்…

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சோனியா காந்தி ஆகியோரின் அலுவல் சார்ந்த சந்திப்புகளின்போது மோடி குறித்து தான் கொண்டிருந்த கருத்துகள், இந்திய-சீன உறவுகள், அவற்றை அரசாங்கம் கையாண்ட விதம் குறித்த தன்னுடைய மதிப்பீடு, ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்த தன்னுடைய கருத்துகளை அந் நூலின் சில இடங்களில் அவர் எழுதியுள்ளார். ஆனால், இந்தச் செய்திகள் குறித்து பென்குயின்  நிறுவனத்தின் சட்டக் குழு கேள்வி எழுப்பியதாகவும், அதை நீக்க வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. அவற்றை மாற்றவோ, திருத்தவோ சோனியா காந்தி அம்மையார் மறுத்ததால் அப் புத்தகத்தை வெளியிடத் தயங்கி, பின்னர் அதிலிருந்து பின்வாங்கிவிட்டது. இந்தியாவில் தற்போது அதனை ‘ஹார்ப்பர் கோலின்ஸ்’ நிறுவனம் அப்படியே வெளியிடவிருக்கிறது

உலக அளவில், இதே செய்திகளுடன், எந்தத் திருத்தங்களும் இல்லாமல் வெளியிட புகழ்பெற்ற ‘ஆல்பிரெட் ஏ.நாஃப்’ நிறுவனம் ஒப்புக் கொண்ட நிலையில் இந்தியாவில் மட்டும் திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் என்ன?

ஜனநாயக நாட்டில் சரியானதா?

முன்பு வெளியிட ஒப்புக் கொண்ட நிறுவனம், யார் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அல்லது யாரைத் திருப்திப்படுத்த இந்த நடவடிக்கையை எடுத்திருக்கும் என்பதைத் தனியே சொல்லத் தேவையில்லை. இன்னொரு நிறுவனம் வெளியிட ஒப்புக்கொண்டு விட்டாலும், இதே நிலை, மறைமுகமான சென்சார் தொடர்வது, ஒரு ஜனநாயக நாட்டில் சரியானதா? இந்திய அரசியலமைப்புச் சட்டம் தரும் கருத்துரிமைக்கு எதிரான சூழலை நாம் அப்படியே பொறுத்துக் கொள்வதா?

இப்போது மட்டுமல்ல, இதே போல பதிப்பக நிறுவனங்கள் விலகிக் கொண்ட நிகழ்வுகள், பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் தொடர்ந்து நடக்கின்றன. இதே பென்குயின் நிறுவனம் கடந்த பிப்ரவரியில் வெளியிடவிருந்த இந்திய ராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் எம்.எம்.நரவானேவின் ராணுவ அனுபவங்கள் அடங்கிய நினைவுக் குறிப்பு நூல், நாடாளுமன்றத்தில் பெரும் அரசியல் புயலைக் கிளப்பியது. இந்நூலில், 2020 இல் சீனாவுடன் நடைபெற்ற கல்வான் பள்ளத்தாக்கு மோதல் மற்றும் ‘அக்னிபாத்’ ராணுவ ஆட்சேர்ப்புத் திட்டம் தொடர்பாக அரசு, ராணுவத்துக்குள் நடந்த விவாதங்கள் குறித்த மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த, நேரடித் தகவல்கள் இடம்பெற்றிருந்தன. அரசியல் விவாதமாக அது மாறிய பின்னர், அந் நூலை வெளியிடுவதிலிருந்து அந்நிறுவனம் பின்வாங்கிக் கொண்டது.

சில பதிப்பகங்கள் எதிர்விளைவுகளுக்கு
அஞ்சி பின்வாங்குகின்றன!

இதே போல, உலகப் புகழ்பெற்ற கிராபிக் நாவலாசிரியரான ஜோ சாக்கோவின் முர்சாபர் நகர் கலவரம் தொடர்பான ‘தி ஒன்ஸ் அண்ட் ஃப்யூச்சர் ரயட்’ (The Once and Future Riot) என்ற புத்தகத்தை வெளியிடுவதிலிருந்தும் கடந்த ஜூன் மாதத்தில் இந் நிறுவனம் வெளியேறியது. 2014 இல் உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர் வெண்டி டோனிகர் எழுதிய “இந்து மதத்தின் மாற்றுப் பண்பாட்டு வரலாறு” (Alternative Cultural History of Hinduism) என்ற புத்தகத்திற்கு ஏற்படுத்தப்பட்ட பிரச்சினைதான் இவற்றுக்கெல்லாம் முன்னோடி. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த இந்த 12 ஆண்டு காலத்தில், ஆர்.எஸ்.எஸ்.சை, வலதுசாரிகளை எதிர்த்துப் புத்தகம் வெளியிட்ட சில பதிப்பகங்கள் மூடப்பட்டுவிட்டன. சில பதிப்பகங்கள் எதிர்விளைவுகளுக்கு அஞ்சி பின்வாங்குகின்றன.

ஆர்.எஸ்.எஸ்.சையும், பா.ஜ.க.வையும், அதன் பாசிசத்தையும், கார்ப்பரேட் பாசத்தையும் கேள்வி கேட்டால் ‘திமாகி நக்சல்’ (அறிவாளி நக்சல்கள்) என்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

ஒன்றிணைந்து போராடுவோம்!

கருத்துச் சுதந்திரம் என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை. அதைப் படிப்படியாக மிரட்டல்கள், வழக்குகள், அலைக்கழிப்புகள், பன்சாரே, கவுரி லங்கேஷ் போன்றோரின் கொலைகள் என உச்சக்கட்டத்திற்குக் கொண்டு சென்று நசுக்கப் பார்க்கிறது சங் பரிவார். இது ஒவ்வொருவருக்குமான அச்சுறுத்தல்! கருத்துரிமைக்காகவும், எழுத்து – பேச்சுரிமைக்காகவும் ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள ஒவ்வொருவரும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்கவேண்டும்.

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை        

6.9.2026         

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *