அத்துமீறும் தேர்தல் ஆணையம்: அதிகாரிகளை மாற்றலாம் – வாக்காளர்களை மாற்ற முடியுமா?

2 Min Read

அதிகாரிகளை மாற்றலாம் – வாக்காளர்களை மாற்ற முடியுமா? என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கேள்வியெழுப்பி அறிக்கை விடுத்துள்ளார்.

பா.ஜ.க.வுக்குச் சார்பான காவல்துறை அதிகாரியின் நியமனம் திரும்பப் பெறப்பட்டது

சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறும் அய்ந்து மாநிலங்களில் தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய இரு மாநிலங்கள் மீது ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அரசு குறிவைத்துச் செயல்பட்டுக் கொண்டி ருக்கிறது. நடுநிலைமைக்குப் ‘பேர் போன’ தேர்தல் ஆணையமோ, இந்த இரு மாநிலங்களில் மட்டும் தொடர்ந்து அதிகாரிகளை மாற்றிக் கொண்டே இருக்கிறது. முதலில் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் என்று தொடங்கி, டி.அய்.ஜி, ஏ.டி.ஜி.பி, என்று வரிசையாக மேலேறி, டி.ஜி.பி., உள்துறைச் செயலாளர், தலைமைச் செயலாளர் என்று மாற்றிக் கொண்டே இருந்தார்கள். இதில் தி.மு.க. சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட பின்னர், தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட பா.ஜ.க.வுக்குச் சார்பான காவல்துறை அதிகாரியின் நியமனம் திரும்பப் பெறப்பட்டது.

இந்த இந்த அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று எங்கிருந்தெல்லாம் ஆணை வருகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மைதான்! பார்ப்பன ‘இனமலர்’ பத்திரிகையொன்று ஒரு காவல்துறை அதிகாரியை மாற்றவில்லையே என்று எழுதுகிறது – மறுநாளே அவர் மாற்றப்படுகிறார்.

முதலமைச்சரின் தனிச் செயலர் உமாநாத் அய்.ஏ.எஸ். போன்ற துடிப்புமிக்கவர்கள் மீது தேர்தல் விதிமீறல் என்று குற்றம் சாட்டினார்கள். அவ்வழக்கு இன்று (22.4.2026) உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அதிகார அத்துமீறல் இல்லையா?

தலைமைச் செயலாளரை மாற்றுவதற்கெல்லாம் அதிகாரமே இல்லாத தேர்தல் ஆணையம், அதிகாரி களை மாற்றுவதை நிறுத்தவில்லை. இது அதிகார அத்துமீறல் இல்லையா?

நாம் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டங்களில் குறிப்பிட்டதை இங்கும் நினைவுகூர விரும்புகிறோம்.

தேர்தல் ஆணையம் அதிகாரிகளை மாற்றலாம். வாக்காளர்களை மாற்ற முடியுமா? குஜராத்திலிருந்தும், பீகாரிலிருந்தும் வாக்காளர்களைக் கொண்டு வந்து இறக்குவார்களா?

அரசு இயந்திரத்தை இன்னலுக்கு
உள்ளாக்குவோர் யார்?

அதிகார வரம்புகளை மீறுவோர் யார்? அரசு இயந்திரத்தை இன்னலுக்கு உள்ளாக்குவோர் யார்? என்பதையெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

அனைத்துக்கும் சேர்த்துத் தான் நாளை (23.4.2026) தீர்ப்பளிப்பார்கள், காத்திருப்போம்!

 

 கி.வீரமணி

     தலைவர்,

     திராவிடர் கழகம்

 

சென்னை

21.4.2026

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *