கேள்வி 1: தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து கொண்டிருக்கிறீர்களே.. தந்தை பெரியாரின் சிந்தனைகளும், கருத்துகளும் இன்றைய இளைய தலைமுறை இளைஞர்களிடம் எந்த அளவுக்கு ஊடுருவியுள்ளன என்பதை அறிய முடிகிறதா ஆசிரியர் அவர்களே…?
– மு.அய்யூப்கான், மேலக்காவேரி, கும்பகோணம்
பதில் 1: நிச்சயமாக, பளிச்சென்று தெரிகிறது. இளைஞர், மாணவர், பாலின வேற்றுமை தாண்டி – தந்தை பெரியாரை வெகுவாகப் புரிந்து, பதவி, புகழ் நாடாது போராட்டத்தையே தமது ரத்த ஓட்டமாகக் கருதி இயங்கும் நமது இயக்கத்தின் கொள்கைக்கு வருகிறார்கள்.
காரணிகள்:
- பல ஊர்களில் நடக்கும் பெரியாரியல் பயிற்சி முகாம்களில் காணும் மாணவ, இளைஞர்களின் ஆர்வமும், உள்வாங்கும் தெளிவும்.
- போராடத் தயார் என்ற பட்டியலில் தங்களது பெயர்களைப் பதிவு செய்யும் கைமாறு கருதாத கடமையாற்ற முந்திடும் வற்றாத ஆர்வம் – போதுமா தோழர் அயூப்!
- • • •
கேள்வி 2: நாட்டில் குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர், ஒன்றிய, மாநில அமைச்சர், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதி ஆகியோர் மிக மிக எளிதாக நியமிக்கப்படும்போது பல்கலைக்கழகத்திற்கு மட்டும் துணைவேந்தர் நியமிக்க முடியவில்லையே ஏன்?
– மன்னை சித்து, மன்னார்குடி-1

பதில் 2: அவ்வப்போது ஆளும் பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ்., ஒன்றிய அரசு, மாநில அரசின் உரிமையைப் பறித்து வருகின்றது, கல்வியை – நெருக்கடி நிலை காலத்தில் அபகரிக்கப்பட்ட கல்வி உரிமையை மாநிலப் பட்டியலுக்கு சட்டப்பூர்வமாக மாற்ற விடாமல் தடுத்து வைத்துள்ளதோடு, ஒத்திசைவுப் பட்டியலில் கல்வி உள்ளதையும் திட்டமிட்டு மறுத்து, மாநிலக் கல்வியை முற்றாகக் ‘கபளீகரம்’ செய்யும் திட்டமிட்டத் திணிப்பின் காரணமாகவே இந்தச் சிக்கல்?
- • • •
கேள்வி 3: சென்னையில் தொடர்ந்து போராடி வருகின்ற தூய்மைப் பணியாளர்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க தமிழ்நாடு அரசு அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லையே – முதலமைச்சர் ஜோசப் விஜய், அமைச்சர்கள் யாரும் அவர்களைச் சந்திக்கவில்லையே?
– கி.மாசிலாமணி, மதுராந்தகம்
பதில் 3: முந்தைய தி.மு.க. ஆட்சியை (இதற்காக அவர்கள் எவ்வளவோ செய்தும்) ஏற்காது ‘மாற்றம்’ என்று வாக்களித்தவர்கள், புரிந்துகொள்ளும் தருணம் நெருங்குகிறது போலும்! “உருட்டைக்கு நீளம்; புளிப்பில் அதற்கு அப்பன்” என்ற கிராமியப் பழமொழிதான் நினைவுக்கு வருகிறது!
- • • •
கேள்வி 4: பெரியார், தமிழ் மொழியைக் காட்டுமிராண்டி மொழி என்றும், தமிழைக் கற்றால் பிச்சையெடுக்கத்தான் முடியும் என்றும் தூற்றியுள்ளாரா?
– முனைவர் மூ.தவமூர்த்தி, தஞ்சை
பதில் 4: இந்தக் கேள்விக்கு எத்தனை முறைதான் பதில் சொல்வது? வேடிக்கைதான்! முந்தையது தமிழ் மொழியின் மீதான அக்கரையில் சொன்னது: வளர்ச்சிக்கான வேகத்திற்காகச் சொன்ன உரிமையின், உணர்வின் வெளிப்பாடு. இரண்டாவது, ஒரு தமிழ் கற்ற புலவர் பாடிய பாட்டினை ஒரு நேரத்தில் மேற்கோள் காட்டுகிறார்.
திட்டமிட்டே திசைதிருப்பும் திரிபுவாதத் திருட்டுப் புரட்டர்கள் முன்பு, பதில் சொல்ல வேண்டியதை இனி நிறுத்திக் கொள்ளுவது என்ற முடிவையே எடுக்கத் தோன்றுகிறது.
- • • •
கேள்வி 5: பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளை இன்றைய சமூக ஊடக காலத்துடன் எவ்வாறு தொடர்புபடுத்திப் பார்க்கலாம்?
– பி.முத்துக்குமாரபதி, தஞ்சாவூர்
பதில் 5: எக்ஸ்ரேதான். ‘ஸ்கேன்’ போல் பார்த்தால் தந்தை பெரியாரின் விஞ்ஞான முன்னோக்கு எவருக்கும் தெளிவாகப் புரியும்!
- • • •
கேள்வி 6: தந்தை பெரியார் மறைந்து 53 ஆண்டுகள் கடந்தபோதும், அவரின் கருத்துகளையும், போராட்டங்களையும், திராவிடக் கொள்கைகளையும் உயிர்ப்புடன் எங்களிடம் கொண்டு சேர்க்கும் அரிய பணிக்கு இன்றைய இளைய தலைமுறை உங்களை தலைவணங்கி நிற்கின்றது. ஆனால், எங்களிடம் தந்தை பெரியாரைக் கொண்டு சேர்த்த முன்னெடுப்புகள்படி, இன்றைய GenZ தலைமுறையினர்க்கு அவர்கள் விரும்பும் வழியில் கொண்டு சேர்க்க தங்களின் ஆலோசனைகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்…?
– டாக்டர் ஜி.ரோஜா, தஞ்சை
பதில் 6: GenZ – இளைஞர்களுக்கு ஏற்ப அதே கருவிகள், முறைகளை நமது இயக்கத் தகவல் ஊடகப் பிரிவும், இயக்கத் தலைமைப் பொறுப்பாளர்களும் புதிய நல்ல திட்டங்களை விரைவில் அறிவித்து செயலில் இறங்குவார்கள். இந்த பெரியாராண்டு 148-லேயே காண்பீர்கள்!
- • • •
கேள்வி 7: சமூக மாற்றம் ஏற்பட சட்டங்கள் மட்டும் போதுமா? அல்லது மக்களின் சிந்தனை மாற்றமும் அவசியமா?
– லா.விவேக்நிஜந்தன், தஞ்சை
பதில் 7: சமூக மாற்றத்திற்கு 60 விழுக்காடு சிந்தனை மாற்றம் ஏற்படுத்தும் பல முயற்சிகள், எழுத்து, பேச்சு மூலம் தேவை. 40 விழுக்காடு சட்டம் மூலம். இரண்டும் சேர்ந்த கலவையால்தான் வெற்றி கிட்டும்! உதாரணம் சுயமரியாதைத் திருமணச் சட்டம்..
- • • •
கேள்வி 8: என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் 347 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 1060 ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நீக்கம் செய்ய உள்ளனர். தமிழ்நாடு அரசு எதைச் செய்தால் அவர்கள் பணிப் பாதுகாப்பு உறுதியாகும்?
– மா.கலைவாணன், சென்னை-39

பதில் 8: தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக வற்புறுத்தி ஒன்றிய அரசிடம் இவர்களுக்கு மறுவாழ்வு பெற்றுத் தரவேண்டும். நீதிமன்றத் தீர்ப்புகளை மதித்து ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணியாளர்களாக ஆக்கக் கெடு வைத்து வற்புறுத்த வேண்டும். மாநில அரசு கிள்ளுக் கீரையல்ல, மண்ணின் உரிமைகளைக் காக்கும் கடமை கொண்டது என்பதை ஒன்றிய அரசுக்கு உணர்த்தி உரிமைகளுக்காகப் போராடத் தயங்கக் கூடாது!
- • • •
கேள்வி 9: “போதிய அளவு நீர் நிறைந்து இல்லாத நிலையில், கால்வாய்கள் சீரமைப்பும் செய்யப்படாமல் மேட்டூர் அணையைத் திறக்கலாமா?” என்று விவசாயிகள் எழுப்பிய குரலுக்குச் செவி சாய்க்காமல் முதலமைச்சர் ஜோசப் விஜய் மேட்டூர் அணையைத் திறந்துள்ளாரே?
– பி.கந்தசாமி, மேட்டூர்
பதில் 9: அனுபவப்படி விவசாயிகள் கூறும் கருத்தை அலட்சியப்படுத்தினால் பிறகு கடும் விலையை இதே அரசு தர வேண்டி இருக்கும்! முந்தைய பல அனுபவங்கள், டெல்டா விவசாயிகளது கூற்றே உண்மை என்று நிரூபிப்பதாக உள்ளதே!
- • • •
கேள்வி 10: ஆந்திர மாநிலம், தமிழ்நாட்டிலிருந்து சிறு – குறு தொழில் நிறுவனங்களை ஈர்த்து வருவதாகத் தொடர்ந்து குறை கூறப்பட்டு வருகின்றதே – முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு இதற்குரிய நடவடிக்கை எடுப்பதாக இல்லையே – ஏன்?
– கு.கார்த்திக், மதுரை
பதில் 10: அது மட்டுமல்ல, வரவேண்டிய வெளிநாட்டுத் தொழில் முதலீடுகளில் தயக்கம், வந்தவர்களின் மயக்கம் – எல்லாம்தான் இப்படிப்பட்ட நிலைக்குக் காரணம் என்பதை மறைத்தால் நோயை மறைத்தக் குற்றம் ஆகும்!
