கல்வி என்பது மனிதனை பகுத்தறிவுள்ளவனாகவும், சமத்துவ சிந்தனை கொண்டவ னாகவும் மாற்றுவதற்கான ஒரு உன்னதக் கருவி.
ஆனால், பள்ளிப் பாடப் புத்தகங்களில், குறிப்பாக சிபிஎஸ்இ ஒன்பதாம் வகுப்பு போன்ற வளர் இளம் பருவத்தினருக்கான சமூக அறிவியல் பாடங்களில், இந்தியாவின் பண்டைய ஜாதி மற்றும் வர்ணாசிரம முறைகள் (பார்ப்பனர், சத்திரியர், வைசியர், சூத்திரர்) விவரிக்கப்படும்போது, அது மாணவர்கள் மத்தியில் எந்த மாதிரியான உளவியல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது தீவிரமாக விவாதிக் கப்பட வேண்டிய ஒன்றாக மாறியுள்ளது.
வரலாற்றுப் பதிவும்,
மாணவர்களின் மனநிலையும்!
சிபிஎஸ்இ 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்பகுதியில், வர்ணங்களின் அடிப்படையில் தொழில்கள் எவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தன என்பது விவரிக்கப்பட்டுள்ளது.
அறிவைப் பரப்புபவர்கள், நாட்டை ஆள்பவர்கள், வணிகம் செய்பவர்கள் என்ற வரிசையில் இறுதியாக ‘வேலையாட்கள் மற்றும் சேவகர்கள்’ என சூத்திரர்கள் குறிப்பிடப்படுகிறார்கள்.
தாழ்வு மனப்பான்மைக்கான விதை
இந்த அடுக்குமுறையை இன்றைய நவீனச் சூழலில் வாழும் ஒன்பதாம் வகுப்பு குழந்தை படிக்கும்போது, தங்களின் குடும்பப் பின்னணியோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தூண்டப்படலாம்.
உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த அல்லது ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை, தான் பிறப்பாலேயே “சேவகம் செய்யப் பிறந்தவன்” என்ற வரலாற்றுச் சித்திரத்தைப் பார்க்கும்போது, அறியாமலேயே அவனுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை உருவாகும் அபாயம் உள்ளது.
சமத்துவக் கொள்கைக்கு
எதிரான முரண்பாடு!
நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம் “அனைவரும் சமம்” என்ற சமத்துவக் கொள்கையை (Equality) வலியுறுத்துகிறது. பள்ளிக்கூடங்களும் ஜாதி, மத பேதமற்ற ஒரு சமத்துவப் பூங்காவாகவே செயல்பட வேண்டும் என நாம் விரும்புகிறோம். ஆனால், அதே வகுப் பறையில் அமர்ந்து கொண்டு, சமுதாயம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, அதில் ஒருவர் உயர்ந்தவர், மற்றொருவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாட்டைப் படிக்கும்போது, அது குழந்தைகளின் மனதில் ஒரு தார்மீகக் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ‘நாம் ஏன் இப்படி பிரிக்கப்பட்டிருக் கிறோம்?’ என்ற கேள்வி அவர்களின் சுயமரியாதை யைக் காயப்படுத்தக்கூடும்.
கல்வியாளர்கள் மற்றும்
ஆசிரியர்களின் கடமை!
வரலாற்றை மறைக்க முடியாது என்பது உண்மை தான்; கடந்த காலத்தில் நடந்த தவறு களையும், கட்டமைப்பு களையும் மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஆனால், அதை எப்படிக் கற்றுக்கொடுக்கிறோம் என்பதில் தான் ஆசிரியர்களின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது.
இத்தகைய வர்ணாசிரம முறைகள் ஒரு காலத்தில் நிலவிய சமூகக் கொடுமை என்றும், இது மனித நேயத்திற்கு எதிரானது (வரலாற்றுப் பிழைகள்) என்றும் பாடத்தோடு சேர்த்து ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும்.
அன்று உழைப்பால் ஒடுக்கப் பட்டவர்கள் இன்று கல்வியாலும், திறமையாலும் அனைத்துத் துறைகளிலும் சாதித்து வருகிறார்கள் என்பதை சமகால உதாரணங் களுடன் விளக்க வேண்டும்.
திறமையே தகுதி
ஒருவருடைய பிறப்போ அல்லது ஜாதியோ அவரது தகுதியைத் தீர்மானிப்பதில்லை, மாறாக அவரது உழைப்பும் திறமையுமே அவரை உயர்த்தும் என்பதை மாணவர்களின் மனதில் ஆழப் பதிக்க வேண்டும்.
பள்ளிப் பாடப்புத்தகங்கள் வெறும் தகவல்களைத் திணிக்கும் காகிதங்களாக இருக்கக் கூடாது. அவை மாணவர்களின் மனதைச் செப்பனிடும் கருவிகளாக இருக்க வேண்டும் வர்ணமுறை கற்பிக்கும் பாடப்பகுதிகள் மாணவர்களிடையே தாழ்வு மனப்பான்மையையோ, உயர் குல மனப் பான்மையையோ விதைக்காத வண்ணம், “கடந்த கால சமூகப் பிளவு — இன்றைய சமத்துவப் பாடம்” என்ற கண்ணோட்டத்தோடு கற்பிக்கப் வேண்டும். அப்போதுதான் கல்வி, மாணவர்களை பாகுபாடுகளிலிருந்து விடுவித்து, ஆரோக்கியமான எதிர்காலச் சமுதாயத்தை உருவாக்கும்.
