
சொந்த உழைப்பில் வாழ முடியாதவர்களுக்கும், பிழைப்புத் தேடுபவர்களுக்கும் ஆன்மிகமும் பக்தியும்தான் மிகச் சிறந்த புகலிடமா? இந்தியா மட்டுமல்ல, உலகெங்கிலும் ‘ஆன்மிகம்’ என்ற பெயரில் நடக்கும் பித்தலாட்டங்களை அம்பலப்படுத்தும் வகையில் மற்றொரு நிகழ்வு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
2023ஆம் ஆண்டு காங்கோவிலிருந்து சட்டவிரோதமாக இத்தாலிக்குச் செல்ல முயன்று மாலி நாட்டு ராணுவத்திடம் பிடிபட்ட நபர் ஒருவர், சிறையில் மதபோதனை செய்து தப்பித்து, பின்னர் “ஒற்றை மேகத்தில் இயேசு செல்கிறார்”, “உலகம் அழியப்போகிறது, கப்பல் கட்டப் போகிறேன்” எனப் பொய் உரையாற்றி கோடிகளைக் குவித்த ஏமாற்று நிகழ்வை உலகம் பார்த்தது. அதே பாணியிலான ஒரு உண்மை நாடகம் தற்போதும் அரங்கேறியுள்ளது.
போதையால் போனது வேலை…
பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி விட்டு, ராணுவ முகாம் வழியாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காவலராகச் சேர்ந்தவர் கிர்வர் சிங் தோமர். பணிக்காலத்தில், குடிப்போதையில் உயரதிகாரியின் காரில் மிதிவண்டியால் மோதிய குற்றச்சாட்டின் கீழ், பணி நேரத்தில் மது அருந்தியதற்காக இவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
வேலை பறிபோனதும் பிழைப்பிற்கு வழியின்றி அரித்வாரில் உள்ள சாமியார் மடங்களில் எடுபிடி வேலைகளைப் பார்த்து வந்த தோமர், அங்கு ஆன்மிகச் சந்தையின் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார். ‘தானே ஏன் சாமியாராகக் கூடாது?’ என்ற எண்ணம் உதிக்க, மத்தியப் பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊருக்குத் திரும்பி, தன்னைத் தீட்சை பெற்ற ‘பாபா கிர்வர் தாஸ்’ ஆக அறிவித்துக் கொண்டார்.
ராணுவத்தில் மாதம் ஒருமுறைதான் ஊதியம் கிடைக்கும். ஆனால், சாமியார் அவதாரம் எடுத்தவுடன் ஊர் மக்களின் மூட நம்பிக்கையைப் பயன்படுத்தி நாளெல்லாம் பண மழை பொழிந்தது; சமூகத்தில் மரியாதையும் கூடியது.
ஆனாலும், கையில் பணம் சேர்ந்த பிறகு இந்த ‘போலிச் சாமியார்’ வாழ்க்கையும் அவருக்குச் சலித்துப் போனது. இதையடுத்து, தனது பணி நீக்கத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஆன்மிகத் துறவறத்திற்கு முழுக்கு!
சுமார் 38 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில், நீதிமன்றம் இறுதியாகக் கருணை அடிப்படையில் அவருக்கு மீண்டும் வேலை வழங்க உத்தரவிட்டது. தீர்ப்பு வந்தவுடனேயே, இத்தனை ஆண்டுகள் கொண்டாடிய ‘ஆன்மிகத் துறவறம்’ காற்றோடு காற்றாகப் பறந்து போனது. நேராக டில்லியில் உள்ள ஒரு சலூனுக்குச் சென்று நீண்ட தாடியையும் முடியையும் மழித்து, ராணுவப் பாணியில் கிராப் செய்துகொண்டார். சாமியார் உடைகளைக் கழற்றி தலையைச் சுற்றி வீசிவிட்டு, உயரதிகாரியிடம் உத்தரவைக் காட்டி மீண்டும் காக்கிச் சீருடையை அணிந்து கொண்டார். சாமியாரிலிருந்து காவலராக மாறிய தன் ஒளிப்படங்களை அவரே சமூக வலைதளங்களிலும் பெருமையோடு பகிர்ந்துள்ளார்.
இப்போது அவருக்கு நிலையான அரசு ஊதியம் உறுதி செய்யப்பட்டுவிட்டது. இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெற்று, வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியமும் (Pension) பெறப்போகிறார். வேலை இருக்கும் வரை சீருடை; வேலை போனால் காவி உடை; மீண்டும் வேலை கிடைத்ததும் காவியைக் கழற்றி எறியும் சீருடை!
இந்த வியப்பான நிகழ்வு ஒரு கசப்பான உண்மையை மீண்டும் நிரூபித்துள்ளது: ஆன்மிகம் என்பது மெய்ஞானத் தேடலோ, உலகப் பற்றற்ற துறவறமோ அல்ல. அது வெறும் தற்காலிகப் பிழைப்புக்கான மாற்று வழியும், சுயநலத்திற்கான போர்வையும்தான்!
