சென்னை, செப். 4– சென்னை, மதுரை, பழநியில் உள்ள பிரபல கருத் தரிப்பு மய்யங்களில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்றது.
தமிழ்நாட்டில் அண்மைக்கால மாக வரிஏய்ப்பு புகார்களுக்கு உள்ளாகும் தனியார் நிறுவனங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, சென்னை மற்றும் மதுரையில் செயல் பட்டுவரும் பிரபல கருத்தரித்தல் மய்யங்களில் நேற்று (3.9.2026) வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னையில் கீழ்ப்பாக்கம், மதுரவாயல், மாதவரம், சேத்துப் பட்டு, பெரம்பூர், அடையாறு, தரமணி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பிரபல கருத்தரிப்பு மய்யங்களில் இந்தச் சோதனை நடந்தது. இதேபோல் மதுரையில் உள்ள இந்த மய்யங்களின் கிளை களிலும் அதிகாரிகள் ஆய்வு மேற் கொண்டனர். ஒட்டுமொத்தமாக சென்னை மற்றும் மதுரையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
செயற்கைக் கருத்தரிப்பு மய் யங்கள், அதனுடன் இணைந்த பரிசோதனைக்கூடங்கள் மற்றும் ஆராய்ச்சி மய்யங்களில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதுமட்டுமின்றி, அந்த நிறுவனங்களின் உயர் அதி காரிகள், முக்கிய மருத்துவர்கள் மற்றும் நிறுவனர்களின் வீடுகளிலும் சோதனை விரிவுபடுத்தப்பட்டது.
அசம்பாவிதங்களைத் தவிர்க்க சோதனையின்போது துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சில தனியார் கருத்தரிப்பு மய்யங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கிடைத்த ரகசியத் தகவல்களின் அடிப்படையிலேயே தற்போதைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட கருத்தரிப்பு சிகிச்சைகள் எத்தனை, அதற்காகப் பெறப்பட்ட கட்டணங்கள் எவ்வளவு, வசூலிக்கப்பட்ட தொகைக்கு முறையாக வருமான வரி செலுத்தப்பட்டுள்ளதா, சிகிச்சைக்கு வரும் நபர்களுக்கு முறையான ரசீதுகள் வழங்கப்படுகின்றனவா என்பன போன்ற பல்வேறு கோணங் களில் அதிகாரிகள் ஆவணங்களைச் சரிபார்த்தனர்.
இதேபோல், பழநியில் உள்ள திண்டுக்கல் சாலையில் செயல்பட்டு வரும் தனியார் கருத்தரிப்பு மய்யத்துக்கு நேற்று காலை வந்த வருமான வரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மாலை வரை தொடர்ந்த இந்தச் சோதனையில் சில ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.
இந்தச் சோதனைகளின்போது கணக்கில்வராத பெருமளவிலான ரொக்கப் பணம், முக்கிய நிதிப்பரி வர்த்தனை ஆவணங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் கணினி, ஹார்ட் டிஸ்க்குகள் உள்ளிட்ட டிஜிட்டல் சான்றுகளை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சோதனைகள் முழுமை யாக நிறைவடைந்த பின்னரே, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் வரிஏய்ப்பு குறித்த முழு மையான விவரங்கள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
