சென்னை, செப்.2- தமிழ்நாடு, சுகாதாரத்துறை செயலாளர் தாரேஸ் அகமது வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
சிவங்கை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் செல்வகராஜன் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராகவும், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் கலைவாணி, சிவங்கை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராகவும், சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை முதல்வர் மணி, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராகவும் இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.
வேலூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் ரோகிணி தேவி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராகவும், தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்து சித்ரா, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராகவும், விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெயசிங், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இ.எஸ்.இ.சி. மருத்துவமனையின் முதல்வராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
இதேபோல, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அமுதா ராணி, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராகவும், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மோகன் காந்தி, நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராகவும், நாகப் பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் காயத்ரி, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கரகத்தின் கூடுதல் இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை இயக்குநராக கண்ணன், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக செல்வாம்பிகை, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக எட்வின் வஸந்தா, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராக பாலாஜி, ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக செந்தில்குமார் ஆகியோருக்கு பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைக்குப் பூட்டு பொதுமக்கள் போராட்டம்!
செஞ்சி, செப்.2- விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பாலப்பாடியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்துவோர் பொதுமக்களைத் தொந்தரவு செய்வதுடன், மாணவிகளை கேலி செய்து வந்தனர். இதையடுத்து கடையை மூடக்கோரிய மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காததால், நேற்று (1.9.2026) கிராம மக்கள் மற்றும் பா.ம.க.வினர் கடைக்கு திடீர் பூட்டுப் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல்றிந்து வந்த அதிகாரிகள், இன்னும் 15 நாட்களில் கடை மூடப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டாலும், மதியம் காவல்துறை பாதுகாப்புடன் டாஸ்மாக் கடை திறந்து வைக்கப்பட்டு வழக்கம் போல் மது விற்பனை நடைபெற்றது.
அ.தி.மு.க.வும், த.வெ.க.வும் ஒன்று தானாம்
சட்டசபையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
சென்னை, செப்.2- அதிமுகவும் நாமும் ஒன்றுதான் என்று சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசினார். சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தலைமையில் செப்டம்பர் 1ஆம் தேதி காலை அவை கூடிய நிலையில், கேள்வி நேரம் நடைபெற்றது. அப்போது, பூவிருந்தவல்லி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாசம் பேசுகையில், “பூவிருந்தவல்லி தொகுதியில் செவ்வாய்பேட்டை ரயில்வே மேம்பாலம் பல ஆண்டுகளாகக் கிடப்பில் உள்ளது. அதை விரைவில் முடித்துத் தருமாறு பேரவைத் தலைவர் வாயிலாகக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “திருவள்ளூர் நமது மாவட்டம், அங்கு 10-க்கு 10 வென்றுள்ளோம், சட்டப்பேரவை உறுப்பினரின் கோரிக்கை நிறைவேற்றப்படும்” என்றார்.
இதனிடையே, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணியில் அதிமுக வென்றுள்ளது என எதிரில் இருந்த எதிர்க்கட்சி தரப்பிலிருந்து குரல் எழுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “10-ல் 9 தொகுதிகளை வென்றோம், அதுவும் நம்முடையதுதானே, அதிமுகவும் நாமும் ஒன்றுதானே. நமக்கும் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கும் இருக்கும் உறவைக் கூறினேன்” எனத் தெரிவித்தார். அவர் பேசியதைக் கேட்டுப் பேரவைத் தலைவர் உள்பட அவையில் பரபரப்பு ஏற்பட்டது!
