‘நீட் எதிர்ப்புப் போராளி’ அனிதா 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
ஒரு தத்துவப் போருக்கானச் சுடர் – கல்வி மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும்!
சென்னை, ஆக. 2 நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த அரியலூர் மாணவி அனிதாவின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, தமிழ்நாடு மாணவர் இளைஞர் கூட்டமைப்பு (TSYF) சார்பில் நேற்று மாலை சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அங்கே நிகழ்ச்சி நடத்த, காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், அந் நிகழ்வு சென்னை பெரியார் திடலுக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன் படி, நேற்று (செப்டம்பர் 1) மாலை 5 மணியளவில் பெரியார் திடலில் பல்வேறு கட்சித் தலைவர்களும், தோழர்களும், மாணவர்களும் குவியத் தொடங்கினர்.
பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் சிலை முன் நீட் எதிர்ப்புப் போராளி அனிதாவின் படம் நினைவேந்தலுக்காக வைக்கப்பட்டிருந்தது. தொடக்கத்தில் நீட் எதிர்ப்பு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அதனைத் தொடர்ந்து அனிதாவின் படத்துக்குத் தலைவர்களும், மாணவர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, இனமுரசு நடிகர் சத்யராஜ், திமுக மாநில மருத்துவ அணிச் செயலாளரும் மேனாள் சட்டப்பேரவை உறுப்பினருமான மருத்துவர் எழிலன், மனிதநேய மக்கள் கட்சி மாநிலப் பொதுச் செயலாளர் அப்துல் சமது, மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தலைமை நிலையச் செயலாளர் நிஜாமுதின், எஸ்.டி.பி.அய்.மாநில துணைத் தலைவர் அசா உமர் பாரூக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் ரஜினிகாந்த், தேமுதிக தலைமை நிலையச் செயலாளர் பார்த்தசாரதி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, விடுதலை இராஜேந்திரன், அற்புதம்மாள், விவேகானந்தன், தமிழர் விடியல் கட்சி இளமாறன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களும், தோழர்களும் கலந்து கொண்டனர்.
நினைவேந்தல் உரையாற்றிய தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டதாவது:-
அவரது நினைவேந்தல் உரை வருமாறு:
உணர்த்தி, உதவியவர்களுக்கு நன்றி!
நீட் தேர்வு என்ற கோரக் கொடுவாள் எப்படியெல்லாம் மாணவ உலகத்தை, அவர்களின் எதிர்காலக் கனவுகளைச் சிதைத்து வாழ்வையே பறிக்கக்கூடிய மிகப்பெரிய ஓர் ஆபத்தான ஆக்டோபஸ் போன்ற கொடுமையான ஒரு மிருகம் போன்ற இதயம் இல்லாத ஓர்ஏற்பாடு என்பதை உலகத்திற்கே வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்காக, தன்னையே பலி கொடுத்துக் கொண்ட நம்முடைய அருமைச் செல்வம் இங்கே இருக்கக்கூடிய அனிதாவினுடைய படத்திற்கு வீர வணக்கம் செலுத்துவது என்பது, எந்தத் திடலிலே முதல் முதலில் இந்த நீட் தேர்வு எதிர்ப்பு உணர்வு உருவானதோ, அதே திடலில்தான் மீண்டும் இதனை நடத்துவதுதான் பொருத்தம் என்பதை மீண்டும் உணர்த்தி மறைமுகமாக உதவியவர்களுக்கு நன்றி!

காரணம், எதையும் தடுத்தால், தடுக்கத் தடுக்க அது ஓங்கும்; ஒரு தலைமை நீதிபதி இளைஞர்கள்பற்றிச் சில வார்த்தைகள் சொன்னதால், இளைஞர்களை ஒன்று திரட்டி ஓர் இயக்கமே வடநாட்டிலே தோன்றக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறது. ஆகவேதான், எதை எப்போது தெளிவாகச் செய்ய வேண்டுமோ, அதைச் செய்ய நம்முடைய மாணவப் பட்டாளங்கள் தயாராக இருக்கின்றன. இந்த மாணவர் கூட்டமைப்பினுடைய இந்த சிறப்பான நிகழ்ச்சியை ஓரிடத்திலே நடத்த வேண்டும் என்று அனுமதிகேட்டபோது, ‘‘அந்த இடத்தைத் தர முடியாது; அதற்குக் காரணம் திருவிழாக்கள் இருக்கின்றன’’ என்றனர். திருவிழாவை விட மிக முக்கியமானது என்று நீட் தேர்வினால், தன்னை பலி கொடுத்துக் கொண்ட அனிதாவிற்காக இங்கே மெழுகுவத்தியைக் கொளுத்தி நினைவேந்தல் நடத்த இருக்கிறார்கள். இது வெறும் மெழுகுவத்தி வணக்கம் அல்ல; மாறாக, ‘‘மெழுகுவத்தியாய் நாங்கள் எரிந்து, மற்றவர்களுக்கு ஒளி கொடுப்போம் எங்களுடைய தியாகத்தினால். உயிர்த் தியாகமானாலும், மாணவ சமுதாயத்துக்காக நாங்கள் அத்தனை பேரும் எங்களையே இழக்கத் தயாராக இருக்கிறோம்’’ என்று உறுதியேற்றிருக்கிற ஆயிரம் அனிதாக்களை உருவாக்கக் கூடியதாக இருக்கிறது இந்த நீட் தேர்வு என்ற கொடுமை. அதுபற்றிய ஒரு தீர்மானத்தை இங்கே தெளிவாகப் படித்து நிறைவேற்ற இருக்கிறார்கள்.
பெரியார் மண்ணிலிருந்து
தயாரிக்கப்பட்ட பட்டாளம்
அதிகம் பேசவேண்டிய நேரம் அல்ல இது; பேச வேண்டிய காலமும் அல்ல இது; செயல்பட வேண்டிய ஒரு காலம். எனவேதான், இந்தப் போராட்டம் என்பது எங்கோ நடக்கிறது என்று நினைக்காதீர்கள் அல்லது யாரோ சொல்லியோ அல்லது சொந்தமாகச் சிந்தித்தோ இதை அடக்கி விடலாம் என்று நினைக்காதீர்கள். அதுவும் தமிழ்நாட்டிலே இருக்கிற மாணவப் பட்டாளம் இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய அறிவுப்பூர்வமான பெரியாரின் மண்ணிலிருந்து தயாரிக்கப்பட்ட ஒரு மாணவப் பட்டாளம். இதனுடைய சக்தி என்ன என்பதைப் பற்றி பெரிய பொதுக்கூட்டம் போட்டு விளக்க வேண்டிய அவசியமும், தேவையும் இல்லை. அதன் காரணமாகத்தான் யார் இந்த மாணவர்களை அலட்சியமாக நினைத்தார்களோ அவர்கள், 55 ஆண்டுகளாக ஆட்சியைப் பற்றியே நினைக்க முடியாத அளவிற்கு, எங்கேயாவது உள்ளே நுழைந்து கொள்ளலாமா? என்று நினைக்க வேண்டிய கட்டத்திற்கு அவர்கள் பாடம் பெற வேண்டிய ஒரு நிலையை, மாணவ சமுதாயம்; மொழிப் போராட்டத்தின்போது 1965 ஆம் ஆண்டிலே இந்தத் தமிழ்நாட்டில் உருவாக்கியது. அதேபோலத்தான் இந்தியா முழுவதும் இன்றைக்கு அந்த சூழ்நிலை இருக்கிறது. உலகம் முழுவதும் மாணவர்களால் சாதிக்க முடியாதது எதுவும் கிடையாது என்ற காரணத்தினாலே, மாணவர்கள் சிறப்பானவர்கள் என்பதில் எவ்வித அய்யமும் இல்லை.
ஆனால், தமிழ்நாட்டு மாணவர்கள், பகுத்தறிவு கூர்மையோடு சிந்திப்பதில், மற்ற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களைவிட ஒரு கட்டம் தாண்டியவர்கள். ஒன்றை எடுத்துச் சொல்கிறேன்; டில்லியில், அவ்வளவு பெரிய கிளர்ச்சியை நடத்திய மாணவர்கள், திசை திருப்பப்பட்டார்கள். எப்படி திசை திருப்பப்பட்டார்கள் என்று சொன்னால் நண்பர்களே, தமிழ்நாட்டில் இருக்கிற தெளிவும் ,தமிழ்நாட்டில் இருக்கிற கூர்மையான பார்வையும் இல்லாத காரணத்தால் தான், வெறும் அமைச்சரை மாற்ற வேண்டும் என்று தான் வற்புறுத்திச் சொன்னார்களே தவிர, அமைச்சர்களை மாற்றுவதினாலே நீட் தேர்வு ஒழிந்து விடாது; நீட் தேர்வே ஒழிய வேண்டும் என்பது தான் அடிப்படை. அதை விட்டுவிட்டு, செய்கிற ஆளை மாற்றினால் என்ன பிரயோஜனம்? என்ன பயன்? இதைச் சுட்டிக்காட்டி அதற்குரியத் தெளிவை உண்டாக்கக்கூடிய மண் இந்தப் பகுத்தறிவு மண் – சுயமரியாதை மண் – பெரியார் மண் – திராவிட மண்.
தத்துவப் போருக்கானச் சுடர்
ஆகவேதான் நண்பர்களே, அனிதாவின் உருவம் என்பது ‘‘நாம் முதல் பலியாக ஆகியாவது, இதை ஒழிப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன்’’ என்று உறுதி. சொல்லக்கூடிய ஓர் அற்புதமான, வெறும் ஒரு பெண் உருவம் என்று மட்டும் நினைக்காதீர்கள். ஒரு தத்துவப் போருக்கானச் சுடர். மிகப்பெரிய அளவிற்கு அந்த ஒரு சுடரை நாம் ஏந்திக் கொண்டு, ‘தீ பரவட்டும்’ என்று சொல்லக்கூடிய உணர்வோடு வருகிற போது, அந்தச் சுடர்தான் இந்த அனிதா! எனவே, அனிதாக்களுடைய உயிர், அது சாதாரணமாகப் போகவில்லை; மிகப்பெரிய அளவிற்கு வழிகாட்டியாக இருந்து, ஆயிரக்கணக்கான, கோடிக்கணக்கான எதிர்கால மாணவ உலகத்திற்கு, அவர்களுடைய கனவை நினைவாக்கிச் செயல்படுத்துவோம் என்பதற்கான மிகப்பெரிய ஒரு சின்னம்.
எனவேதான், சொல்லிக் கொள்கிறோம், ஒன்றிய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் அவர்கள் சுவரெழுத்துக்களைப் படிக்கத் தவறக்கூடாது; என்ன நிலவரம் என்பதை கணிக்கத் தவறக்கூடாது. எங்கேயோ உட்கார்ந்து கொண்டு, யாரோ சில அதிகாரிகளோ அல்லது மற்றவர்களோ எதையோ சொல்லுகிறார்கள் என்பதற்காக, இதை அடக்கி விடலாம் என்று நினைக்காதீர்கள்; அடக்க அடக்க இது வளரும்; அது மட்டுமல்ல, அடிக்க அடிக்க பந்து உயரும் என்பதைப் போல – தயவுசெய்து தெளிவான முடிவெடுங்கள்.
ஒரு பக்கத்திலே தமிழ்நாடு சட்டமன்றத்திலே நீட் எதிர்ப்புத் தீர்மானம் நிறவேற்றியதை வலிமைப்படுத்துவதுதான் இந்த விவாதக் கிளர்ச்சிகள். எனவே, அதற்கு விரோதம் அல்ல; ஆகவே, தெளிவானப் பார்வை வேண்டும்; சுதந்திரமானப் பார்வை வேண்டும். மேலே இருக்கிற ஆட்சித் தலைமை சுதந்திரமாகச் சிந்திக்க வேண்டும். மற்றவர்களுடைய திசை திருப்பல்களுக்கு ஆளானால், அதிக விலை கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படும். சுருக்கமாகவும், நாகரிகமாகவும் இதை நாம் சொல்லுகிறோம். ஆகவேதான், அனிதாவைப் போன்றவர்களுக்கு வீர வணக்கத்தைச் செலுத்துவது நம்முடைய கடமை. நீட் தேர்வை ஒழிக்காமல், நமக்கு வேலை இல்லை.
கல்வி மாநிலப் பட்டியலுக்கு
வர வேண்டும்
எனவேதான் நிச்சயமாக, அமைச்சர்களை மாற்றுவது மட்டுமல்ல; மூன்று, நான்கு தெளிவான திட்டங்கள் நமக்கு இருக்கின்றன. மிக நீண்ட காலத்துக்கு முன்பு கல்வி மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும் என்று தோழர் எழிலன் போன்றவர்கள் போட்ட அந்த வழக்கு, இன்னமும் ஊறுகாய் ஜாடியிலே ஊறிக்கொண்டிருக்கிறது. அதுவும் நெருக்கடி காலத்திலே, அந்த நிலை யாருக்கும் தெரியாமல் வந்து, பிறகு எல்லா கட்டத்தையும் தாண்டிய நிலையிலே அது நிலைத்திருக்கிறது. ஆகவேதான் மிக முக்கியமான ஓர் எழுச்சி படலம் இப்போது – இந்தியாவுக்கே அது விடுதலைப் பட்டாளம். ஆகவேதான், அருள் கூர்ந்து எல்லோரும் இதற்கு ஒத்துழைக்கக்கூடிய அளவிற்கு வாய்ப்பு ஏற்படுத்தியமைக்கு நன்றி! இந்த மெழுகுவத்தி இன்றைக்கு கொளுத்தப்படுவது – இது ஒரு சிறிய மெழுகுவத்தியாக இருக்கலாம். அந்த முதல் மெழுகுவத்தி தான் அனிதா. அந்த மெழுகுவத்தி தன்னைத்தானே அழித்துக்கொண்டு, மற்றவர்களுக்கெல்லாம் அது பெரிய தொடராக வரக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறது. எனவேதான், இந்த மெழுகுவத்தி என்பதை நீங்கள் ஓர் அடையாளமாகக் கொள்ள வேண்டும். புரிந்து கொள்ள வேண்டும். எவ்வளவு காலத்துக்கு நீட் தேர்வு தொடரும் என்று நீங்கள் நினைக்காதீர்கள்.
நுழைவு தேர்வு 21 ஆண்டுகள் இந்த மண்ணிலே இருந்தபோது, தொடர்ந்து போராடி அதிலே வெற்றி கண்ட மண், இந்த மண் என்பதை மறந்துவிடக்கூடாது. புதிய ஆட்சியாளர்களாக இருந்தாலும், பழைய ஒன்றியத் தோழர்களாக இருந்தாலும், அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டு.
வீர வணக்கம்! வீர வணக்கம்! வீர வணக்கம்!
ஓய மாட்டோம்! ஓய மாட்டோம்! ஒருபோதும் ஓய மாட்டோம்!
நாங்கள் எங்கள் உயிரையும் பலி கொடுப்பதற்குத் தயாராக இருக்கிறோம்!
முதல் அச்சார உணர்வுதான், அச்சார நிலைதான், அந்தத் தியாகம்தான், உயிர்ப்பலிதான், அனிதா என்ற எங்கள் குடும்பத்துச் செல்வம்.
ஆயிரம் அனிதாக்கள் தயார்!
அந்த அனிதாக்கள் தொடரக்கூடாது; அனிதாக்கள் தொடர்ந்தால்தான், நீங்கள் கொடுப்பீர்கள், எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவீர்கள் என்றால், ஆயிரம் அனிதாக்கள் இங்கே தயாராக இருக்கிறார்கள். அவர்கள் எங்கோ ஓடிவிட மாட்டார்கள். ஆனால், ஆட்சிகள் அப்போது இருக்காது.
எனவே, ஒன்றிய ஆட்சிக்குச் சொல்லுகிறோம், தெளிவாகச் சொல்லுகிறோம், புரிந்து கொள்ள வேண்டும்.
ஒழிப்போம், ஒழிப்போம்!
நீட் தேர்வை ஒழிப்போம்!
ஒழிப்போம், நீட் தேர்வை ஒழிப்போம்!
எங்களை, எங்கள் பிள்ளைகளை
பலிவாங்கக்கூடிய,
எங்கள் உரிமைகளை
பலிபீடத்தில் நிறுத்தக்கூடிய நீட் தேர்வை
இந்த மண்ணிலிருந்தும்,
தமிழ்நாட்டிலே மட்டுமல்ல,
இந்தியா முழுவதும்
வேலையில்லை நீட்தேர்வுக்கு
மாநில அரசுக்குதான் உரிமை தேர்வு நடத்த
அரசியலமைப்புச் சட்டப்படி மாநில அரசுக்கும்
பல்கலை கழகங்களுக்குமே உரிமை
அரசியலமைப்புச் சட்ட உரிமைகளைக் காப்பாற்ற
அரசியலமைப்புச் சட்ட விரோத நீட் தேர்வை ஒழிப்போம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அனிதா நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றினார்..
