காத்மண்டு, செப்.2 நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உயிரி ழந்த வெளிநாட்டுப் பயணிகளின் உடல்களை அடையாளம் கண்டு, அவர்களின் உறவினர்களிடம் முறைப் படி ஒப்படைப்பதற்கான 9 கட்ட வழிகாட்டுதல்களை அந்நாட்டு அரசு வகுத்துள்ளது. இது தொடர்பான ஒருங்கிணைப்பு நடைமுறைகளைக் காத்மண்டுவில் உள்ள இந்தியத் தூதரகமும் வெளியிட்டுள்ளது.
நேபாள அரசின் 9 கட்ட நடை முறைகள் உடல்களைப் முறைப் படி ஆவணப்படுத்துதல். உடற்கூராய்வு மேற்கொள்வது, கைரேகை மற்றும் டி.என்.ஏ (DNA) மாதிரிகளைச் சேகரித்துத் துல்லியமாகப் பதிவேற்றுவது, கடவுச்சீட்டு சரிபார்ப்பு, தூதரக ஒருங்கிணைப்பை உறுதி செய்வது, உறவினர்கள் உடல்களை அடையாளம் காண்பதற்காக நேபாளக் காவல்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஒளிப்படங்களைப் பதிவேற்றுவது.
இத்தகைய துல்லியமான தொழில் நுட்ப நடைமுறைகள் மூலம், எதிர்காலத்தில் “இன்னும் 100 ஆண்டுகள் கழித்து யாரேனும் வந்து என் உறவினர் எங்கே?” என்று கேட்டாலும், டி.என்.ஏ சான்றோடு பதில் அளிக்கக்கூடிய தொலைநோக்குப் பார்வையுடன் நேபாளம் தயாராகியுள்ளது.
டிஜிட்டல் இந்தியாவின் அவலம்
சிறிய நாடான நேபாளம் காட்டும் இந்தத் துல்லியமான அணுகுமுறை, இந்தியாவின் பேரழிவு மேலாண்மை மற்றும் ஆவணப்படுத்தல் சார்ந்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது:
கரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பான துல்லியமான மற்றும் முழுமையான தரவுகளை இந்தியா இன்னமும் வெளிப் படையாக முழுமையாக வழங்கவில்லை என்ற விமர்சனம் நிலவுகிறது. 2013-இல் கேதர்நாத் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட பேரழிவில் பலியானவர்கள் மற்றும் காணாமல் போமானவர்கள் பற்றிய முழுமையான தகவல்கள் இன்றளவும் தெளிவுபடுத்தப்படவில்லை. மத்தியப் பிரதேசம் இந்தூரைச் சேர்ந்த ஒரு குடும்பம், 2013 ஜூலை மாதம் கேதர்நாத் சென்ற தங்களது பெற்றோர் உயிருடன் இருக்கிறார்களா அல்லது இறந்துவிட்டார்களா என்பதை அறிய முடியாமல், கடந்த 14 ஆண்டுகளாக அரசிடம் பதிலை எதிர்பார்த்துத் தொடர்ந்து போராடி வருகிறது.
தொழில்நுட்பத்தில் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா, இதுபோன்ற இயற்கை பேரிடர்களின் போது உயிரிழப்போரின் ஆவணங்களை நேபாளத்தைப் போலத் துல்லியமாகப் பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை சமூக ஆர்வலர்களிடையே வலுத்துள்ளது.
