முதலமைச்சர் எம்.ஜி.ஆர். கொண்டுவந்த 9,000 ரூபாய் வருமான வரம்பை எதிர்த்துப் போராடி, அவரையே திரும்பப் பெற வைத்தோம்!
திராவிடர் கழகம், எந்த அரசை ஆதரித்தாலும், அதனுடைய பார்வை,
கொள்கைப் பார்வையே தவிர, தனிப்பட்ட முறையில் விருப்பு, வெறுப்பு கிடையாது!
தாம்பரம், செப்.1 முதலமைச்சர் எம்.ஜி.ஆர். கொண்டுவந்த 9,000 ரூபாய் வருமான வரம்பை எதிர்த்துப் போராடி, அவரையே திரும்பப் பெற வைத்தோம்!திராவிடர் கழகம், எந்த அரசை ஆதரித்தாலும், அதனுடைய பார்வை, கொள்கைப் பார்வையே தவிர, தனிப்பட்ட முறையில், விருப்பு, வெறுப்பு கிடையாது! அன்றிலிருந்து இன்று வரையில், நாளைக்கும் இதுதான் எங்களுடைய கொள்கை என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
இருசக்கர வாகனப் பரப்புரை – நிறைவு விழாப் பொதுக்கூட்டம் – தமிழர் தலைவர் சிறப்புரை!
‘நீட்’ தேர்வு, உயர் ஜாதியினருக்கான EWS இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி இருசக்கர வாகனப் பரப்புரை தமிழ்நாடு, புதுச்சேரி தழுவிய அளவில் 22.8.2026 முதல் 25.8.2026 ஆகிய நான்கு நாள்கள், ஆறு குழுக்களாக நடைபெற்றது. இருசக்கர வாகனப் பரப்புரையின் முதல் குழுவின் பிரச்சாரப் பயண நிறைவு விழா தாம்பரம் மாவட்டக் கழகம் சார்பில், கடந்த 25.8.2026 அன்று மாலை மேற்குத் தாம்பரம் பாரதி திடல், சண்முகம் சாலை, பெரியார் நகரில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குத் தலைமை வகித்து, பயணக் குழுவினரைப் பாராட்டி சிறப்புரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
நீட் தேர்வினால், இதுவரையில் இந்தியா முழுவதும் தற்கொலை செய்து கொண்ட பிள்ளைகள், பெற்றோர்கள் உள்பட 150 அய் தாண்டும். இதை இல்லை என்று மறுக்க முடியுமா?
குஜராத் பார்ப்பனரான
நீதிபதி அனில் தவே!
ஊழல் இருக்காது என்று சொன்னார்கள். இப்பொழுது ஊழல் எப்படி போயிருக்கிறது தெரியுமா? எல்லாம் உயர்ஜாதிக்காரர்கள். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவர்கள்தான் ஊழல் செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஊழல் நடைபெற்று இருக்கிறது. இத்தனை ஆண்டுகள் நீட் தேர்வு நடந்திருக்கிறது; நீட் தேர்வே முதலில் செல்லாது என்று தீர்ப்பு வந்தாயிற்று. அதில், நீட் தேர்வுத் தேவை என்று, யார் மைனாரிட்டி ஜட்ஜ்மெண்ட் கொடுத்தாரோ, அவர் குஜராத் பார்ப்பனரான நீதிபதி அனில் தவே என்பது அவருடைய பெயர்.
நீட் தேர்வுத் தேவையில்லை என்று தீர்ப்புக் கொடுத்த தலைமை நீதிபதி ஓய்வு பெற்றுவிட்டார். உடனே குஜராத் ஆளுநர், நீதிபதி அனில் தவே அவர்களைத் தன் விருப்பமாகக் கொண்டு போய், அந்த வழக்கைக் கொண்டு வந்து, இவ்வளவு திட்டத்தைச் செய்திருக்கிறார்கள். அதை ஒவ்வொரு கட்டத்திலேயும் ‘விடுதலை’ தலையங்கம் எழுதி அம்பலப்படுத்தி இருக்கிறது; ஒவ்வொரு கட்டத்திலேயும் திராவிடர் கழகம் சொல்லியிருக்கிறது. அந்த நீட் தேர்வினுடைய விளைவு ஊழல் இல்லாதது இல்லை. எங்கே பார்த்தாலும் கோச்சிங் சென்டர். அந்தப் பயிற்சி மய்யங்களில் படிப்பதற்கு 5 லட்சம் ரூபாய், 10 லட்சம் ரூபாய் செலவழித்துப் படிக்கவேண்டும்.
ஊழலின் ஊற்றுக் கண்ணாக
நீட் தேர்வு இருக்கிறது!
பீகாரில், முதல் முதலில் ஊழல் வந்த போது, முதல் இடத்தை பீகார் பெண் ஒருவர் பெற்றார். ஆனால், அந்தப் பெண் பள்ளிக்கூடத்திற்குச் செல்லாமல், பயிற்சி மய்யத்திற்குச் செல்லாமல், முதலிடம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பெண்ணிற்குப் பதிலாக வேறொருவர் தேர்வு எழுதியிருக்கிறார். அதில் ஆரம்பித்த ஊழல், இன்றைக்கு ஊழலுடைய ஊற்றுக் கண்ணாக நீட் தேர்வு இருக்கிறது. எந்த அளவுக்கு, கேள்வித்தாள் வெளியாகியிருக்கிறது என்றால், நேற்று முன்தினம் ‘இந்து’ பத்திரிகையில் ஒரு கருத்து வெளியிடப்பட்டு இருக்கிறது. நன்றாகக் கவனியுங்கள், ஆதாரத்தோடு சொல்கிறேன். சொல்வதற்கே வெட்கமாக இருக்கிறது. அதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
எப்படி கேள்வித்தாள் வெளியாகிறது என்றால், ஒவ்வொரு இடத்திலேயேயும், ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு முறையில் வெளியாகிறது. கேள்விகளைத் தயார் செய்கிறவர்களே, வெளியிடுகிறார்கள்.
உங்களுக்கெல்லாம் தெரியும், நம் வயிற்றில் உள்ள குடலைப் பரிசோதனை செய்வோம். அந்தப் பரிசோதனைக்குப் பெயர் கொலோனோஸ்கோபி (Colonoscopy). எண்டாஸ்கோப்பி வைத்து சோதனை செய்வார்கள். முன்பெல்லாம், பெரிய கம்பியை உள்ளே விடுவார்கள். இப்பொழுது அறிவியல் வளர்ந்ததினால், மருத்துவ துறை வளர்ந்ததினால், ஒரு சிறிய கேமரா மலக்குடல் வரைக்கும் போகும். பிறகு, மலம் வெளி யாகும்போது, அந்தக் கேமரா பொத்தென்று கீழே விழும். அதை அவர்களே எடுத்து, உடனே கழுவி, அதில் இருக்கின்ற ரீடிங்கைப் பார்ப்பார்கள். அதுதான் சரியான முடிவாகும். உங்களுக்குப் புற்றுநோய் இல்லை; வேறு நோய் இல்லை என்று மருத்துவர்கள் சொல்வார்கள்.
ஆரியத்தினுடைய யோக்கியதை இதுதான்!
அதே போன்றுதான் கேள்வித்தாளை வெளி யிட்டிருக்கிறார்கள். நீங்கள் நன்றாக நினைத்துப் பாருங்கள்; கற்பனை செய்து பார்க்க முடியுமா? இதுதான் தகுதி, திறமை யோக்கியதை – இதுதான் ஆரியத்தினுடைய யோக்கியதை. எல்லோரும் ஆம்புலன்ஸ் வாகனத்தை உயிரைக் காப்பாற்றுவதற்காகப் பயன்படுத்தினால், நம்மாட்கள் நோட்டுக் கட்டுகளை அடுக்கி வைத்துச் செல்வதற்குப் பயன்படுத்துகிறார்கள். பிறகு,சோபா அரசியல் வந்திருக்கிறது.
எனவே, சோபாவைப் பார்த்தால் சந்தேகம், ஆம்புலன்சைப் பார்த்தால் சந்தேகம். அது வேறு செய்தி, நான் அங்கே போக விரும்பவில்லை. ஆகவே, தகுதி, திறமை மோசடி என்பதுகுறித்து ‘இந்து’ பத்திரிகையில் வந்திருக்கின்ற செய்தியைச் சொல்கிறேன்.
ஆகவேதான், நீட் தேர்வில், ‘‘ஊழல், ஊழல், ஊழல்’’ என்று எங்கும் ஊழல் நிறைந்திருக்கிறது. உங்களுக்குத் தேர்வு நடத்துகி்னற அதிகாரம் இல்லை. ஆனால், தகுதி, திறமை என்று சொன்னீர்கள். இந்த நிலைமை இது ஒரு பக்கம்.
சிலர் புரியாமல் கேட்கிறார்கள்!
இன்னொரு பக்கம், EWS என்று சொல்லக்கூடிய 10 சதவிகித இட ஒதுக்கீடு. சிலர் புரியாமல் கேட்கிறார்கள், ‘‘என்னங்க, ஏழைக்குக் கொடுக்கிறார்கள், அதை ஏங்க, நீங்கள் தடுக்க வேண்டும்’’ என்று கேட்பார்கள். உச்சநீதிமன்றத்தில், நரசிம்மராவ் அவர்கள் பொதுவாக 10 சதவிகித இட ஒதுக்கீட்டை பொருளாதார அளவுகோல் அடிப்படையில் என்று கொடுத்தார். அது செல்லாது என்று அதே உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கொடுத்தது.
நமக்கு 27 சதவீதம், மண்டல் ஆணையத்தின் பரிந்துரை செல்லும் என்று சொல்லப்பட்ட அதே வழக்கில், மிக முக்கியமாக அந்த வழக்கிேலயே ஒரு பகுதியில் வருகிறது; மிக முக்கியமான அடிப்படையில் நீதிபதி என்ன சொல்கிறார் என்று சொன்னால், ‘‘இந்த 10 சதவீதம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதம். அரசியலமைப்புச் சட்டத்தில், பொருளாதார அளவுகோல் கிடையாது’’ என்று உறுதிப்படுத்தினார்.
முதலமைச்சர் எம்.ஜி.ஆர். கொண்டு வந்த 9 ஆயிரம் ரூபாய் வருமான வரம்பு!
இதற்கிடையில் ஒன்றைச் சொல்கிறேன். எம்ஜிஆர் அவர்கள் ஆட்சிக்கு வந்த உடனே, 9,000 ரூபாய் வருமான வரம்பைக் கொண்டுவந்தார். பிற்படுத்தப்பட்டவர்கள் என்று சொன்னால், 9,000 ரூபாய்க்கு கீழே ஆண்டு வருமானம் வாங்குகிறவர்களாக இருக்க வேண்டும். 9,000 ரூபாய்க்கு மேலே ஒரு ரூபாய் வாங்கினாலும், அவர்கள், முன்னேறியவர்கள் என்று அர்த்தம். அந்த உத்தரவை எதிர்த்து முதன்முதலில் குரல் கொடுத்தது திராவிடர் கழகம்தான். பிறகு, தி.மு.க.வும் சேர்ந்தது. அதற்குப் பிறகு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் சேர்ந்துகொண்டது. ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இதற்கு எதிராக இருந்தது.
ஜனதா கட்சியில் ரமணிபாய் என்று ஒருவர் இருந்தார். நாங்கள் ஓராண்டு தொடர்ந்து பிரச்சாரம் செய்தோம். தோழர் தா.பாண்டியன் போன்றவர்கள் பிரச்சாரம் செய்தோம். அதற்குப் பிறகு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்லில் எம்ஜிஆர் அவர்களின் கட்சியான அ.தி.மு.க. இரண்டே இடங்களில்தான் வெற்றி பெற்றது. அப்போதுதான் உணர்ந்தார் அவர். ஏன், தோற்றோம்? என்று காரணம் கேட்டார், அமைச்சர்களை அழைத்து.
நீங்கள், கையை வைக்கக்கூடாத இடத்தில், கையை வைத்தீர்கள்; அது மின்சார தாக்கு என்றார்கள் அவர்கள்.
சரி, அப்படி என்றால் என்ன செய்யலாம்? என்று கேட்டார் எம்.ஜி.ஆர். அவர்கள்.
கவுரவம் பார்க்கவில்லையென்றால், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டலாம். அதன்மூலம் ஆட்சி யைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்றனர்.
செய்தியாளர்களின் கேள்வியும் –
கலைஞரின் பதிலும்!
எம்ஜிஆர் அவர்கள் அனுபவசாலி. தவறு செய்வது முக்கியமல்ல; ஒரு மனிதன் அந்தத் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வதுதான் மிக முக்கியமானதாகும். அந்த வகையில, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார்கள். நாங்களும் அந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றோம். அதற்கு முன்பாக, செய்தியாளர்கள், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கலைஞரிடம் கேள்வி கேட்டார்கள். ‘‘முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அனைத்துக் கட்சிக் கூட்டம் போட்டிருக்கிறாரே, அந்தக் கூட்டத்திற்கு நீங்கள் போவீர்களா?’’ என்று.
கலைஞர் சொன்னார், ‘‘நாங்கள் போகமாட்டோம்’’ என்று தி.மு.க.வின் நிலைப்பாட்டைச் சொன்னார்.
நாங்கள், அந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்வோம்!
கலைஞர் சொன்னது எனக்குத் தெரியாது. செய்தியாளர்கள் என்னிடம் வந்து கேள்வி கேட்டார்கள். ‘‘கலைஞர், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று சொல்லியிருக்கிறாரே, உங்களுடைய நிலைப்பாடு என்ன?’’ என்று கேட்டனர்.
‘‘நாங்கள், அந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்வோம். முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் என்னென்ன ஆபத்து இருக்கிறது என்று விளக்கிச் சொல்லுவோம்’’ என்றேன்.
உடனே செய்தியாளர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கலைஞரிடம் சென்று, ‘‘நீங்கள் இரண்டு பேரும், முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் கொண்டு வந்த 9 ஆயிரம் ரூபாய் வருமான வரம்பை எதிர்த்து ஒன்றாகதான் போராடினீர்கள்; ஆனால், இப்போது திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்கள், முதலமைச்சர் கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பேன் என்று சொல்கிறார். நீங்கள், கூட்டத்தில் பங்கேற்கமாட்டேன் என்று சொல்கிறீர்களே, உங்கள் இரண்டு பேருக்கும் கருத்து வேறுபாடா?’’ என்று கேட்டனர்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், திராவிடர் கழகம் பங்கேற்பதுதான் சரி: கலைஞர்!
கலைஞர், ஈரோட்டு குருகுலத்தில் பயின்றவர் அல்லவா. உடனே அவர் சொன்னார், ‘‘நான் சட்டப்பேர வைக்குள் சென்று பேச முடியும்; ஆனால், திராவிடர் கழகத்துக்காரர்கள் சட்டப்பேரவைக்குள் வரமாட்டார்கள். அதனால், அவர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பதுதான் சரி’’ என்றார்.
எம்.ஜி.ஆர். கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்று, ஒரு மணிநேரம் விளக்கிச் சொன்னோம்.
ஓகோ, இவ்வளவு விஷயம் இருக்கிறது என்று எனக்குத் தெரியாதே என்றார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள். உடனே , 9 ஆயிரம் ரூபாய் வருமான வரம்பு ஆணை ரத்து செய்யப்படுகிறது என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், 31 சதவிகிதமாக இருந்த இட ஒதுக்கீட்டை 50 சதவிகிதமாக ஆக்குகிறேன் என்று சொன்னார்.
அதுவரையில் எம்.ஜி.ஆருடைய ஆட்சியை எதிர்த்து வந்தோம். செய்தியாளர்கள் என்னிடம் வந்து கேள்வி கேட்டார்கள்.
தனிப்பட்ட முறையில், விருப்பு, வெறுப்பு என்பது கிடையாது!
‘‘எம்.ஜி.ஆரை முழுக்க முழுக்க நாங்கள் ஆதரிக்கிறோம். இதற்காக எம்ஜிஆரை எதிர்த்தால், அவருடைய அரசுக்கு நாங்கள் ஆதரவு கொடுப்போம். ஏனென்றால், திராவிடர் கழகம், எந்த அரசை ஆதரித்தாலும், அதனுடைய பார்வை, கொள்கைப் பார்வையே தவிர, தனிப்பட்ட முறையில், விருப்பு, வெறுப்பு என்பது கிடையாது. அன்றிலிருந்து இன்று வரையில், நாளைக்கும் இதுதான் எங்களுடைய கொள்கை’’ என்று செய்தியாளர்களிடம் பதில் கூறினேன். இதை நன்றாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், 9,000 ரூபாய் வருமான வரம்பை ரத்து செய்ய வைத்தோம். அதுதான் இப்போது EWS என்று ‘புதிய அவதாரம்’ எடுத்து வந்துள்ளது. இதை நன்றாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
உயர்ஜாதிக்காரர்களில் என்ன ஏழைகள்? ஏழைகளில் என்ன உயர்ஜாதிக்காரர்கள்? ஏழை களுக்குக் கொடுங்கள் என்று சொன்னால்கூட, அதில் கொஞ்சம் நியாயம் இருக்கும்.
அரசியலமைப்புச் சட்டத்தில்
இடம் இல்லை!
அது மட்டுமல்ல, உச்சநீதிமன்ற தீர்ப்பிலே என்ன சொல்லியிருக்கிறார்கள், Reservation is not a poverty alleviation scheme. ஸ்காலர்ஷிப் கொடுக்கிறீர்கள், ஏழைகளுக்குக் கொடுங்கள். அதில் ஒன்றும் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால், இட ஒதுக்கீடு என்று சொன்னால், பொருளாதார அளவுகோலுக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் இல்லை.
நம்முடைய வீரமர்த்தினி இங்கே சொன்னார்கள், EWS இல் ஏழை என்பதற்கு ஒன்றிய அரசின் டெபனி ஷன் என்ன தெரியுமா? நாள் ஒன்றுக்கு, 2,500 ரூபாய் சம்பாதிக்கிறவர் ஏழையாம். இதற்கு என்னய்யா, அர்த்தம்? இந்தப் புத்தகத்தில், மிகத் தெளிவாக விளக்கி இருக்கக்கூடிய ஒரு செய்தியை உங்களுக்குச் சொல்றேன்.
நம் ஊரில், ஆண்டு ஒன்றுக்கு வருமான வரி எவ்வளவு கட்டணும் என்றால், அதற்கு சலுகை கொடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசு, பட்ஜெட் போடுகிறது. அப்படி பட்ஜெட் போடும்போது, சலுகைகள் கொடுக்கிறார்கள். சலுகை என்னவென்றால், வயதானவர்கள், மூத்தவர்கள் என்ற அடிப்படையில், ஆண்டிற்கு மூன்றரை லட்சம் ரூபாய் என்றால், அவர்கள் அறவே வருமான வரி கட்ட வேண்டி யதில்லை. சரி, 5 லட்சம் ரூபாய் என்றால், ஃபர்ஸ்ட் ஸ்லாப். அதற்கு இவ்வளவு ரூபாய் இருக்கவேண்டும், அவ்வளவுதான்.
ஏழை யார், யார் உயர்ஜாதி,
இவர்கள் கணக்கில்?
எனவே, அவர்களே ரூ.5 லட்சத்தைக் கூட தாண்டவில்லை. 5 லட்சம் ரூபாய் வந்தாலும் கட்ட வேண்டும். அப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒன்றிய அரசின் வருமான வரி கணக்குப்படி, ஆண்டு ஒன்றுக்கு இரண்டரை லட்சம் ரூபாய்; பிறகு மூன்று லட்சம் ரூபாய் என்று ஆக்கினார்கள். அந்த அளவிற்கு வருமானம் வந்தால், அவரிடம் வருமானவரி செலுத்துங்கள் என்று ஆணையிட உரிமை உண்டு. இப்போது உள்ள வருமானம் எட்டு லட்சம் ரூபாய். யார்? உயர்ஜாதி ஏழைகள் – ஓராண்டிற்கு எட்டு லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறவர்கள். அப்படியென்றால், ஏழை யார், யார் உயர்ஜாதி, இவர்கள் கணக்கில்?
(தொடரும்)
