மாஸ்கோ, ஆக. 31- உக்ரைன் போர் நீடித்து வரும் சூழலில், போருக்கான நிதியைத் திரட்ட ரஷ்ய அரசு தங்களது வங்கிச் சேமிப்புகளை ரகசியமாகப் பறிமுதல் செய்துவிடும் அல்லது முடக்கிவிடும் என்ற அச்சத்தால் ரஷ்ய மக்கள் தங்களது வங்கிக் கணக்குகளில் இருந்து பில்லியன் கணக்கான ரூபிள் பணத்தை அவசர அவசரமாகத் திரும்பப் பெற்று வருகின்றனர்.
2026-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை இல்லாத அளவாக மக்கள் வங்கிகளில் இருந்து பணத்தை வெளியேற்றி வருவதால், ரஷ்ய வங்கித் துறை கடுமையான நிதிப் பற்றாக்குறையில் சிக்கியுள்ளது. ரஷ்ய மத்திய வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின்படி, தொடர்ந்து ஏழாவது மாதமாக வங்கிகளில் தீவிர பணப் பற்றாக்குறை நிலவுகிறது.
ஆகஸ்ட் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் மட்டும் சுமார் 286.4 பில்லியன் ரூபிள்கள் (சுமார் 3.4 பில்லியன் டாலர்) அளவுக்கு ரொக்கம் பெறப்பட்டுள்ளது. இது 2022-இல் போர் தொடங்கியபோது இருந்த வேகத்தை விட இருமடங்காகும்.
பொதுமக்கள் மட்டுமன்றி, நிறுவனங்களும் தங்களது சொத்துகளைப் பாதுகாக்க கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் ஆர்மீனியா போன்ற வெளிநாடுகளுக்கு பணத்தை மடைமாற்றம் செய்து வருகின்றன. பணப்புழக்கம் இல்லாததால் ரஷ்ய நிதி அமைச்சகம் திட்டமிட்டிருந்த அரசுப் பத்திரங்கள் விற்பனையை ரத்து செய்துள்ளது.
வணிக நிறுவனங்கள் மற்றும் தனிநபர் சொத்துகள் பறிமுதல் செய்யப்படுவதாக வெளியான செய்திகளால் “பணத்தை வங்கியில் வைப்பதை விட வீட்டி லேயே வைப்பது பாதுகாப்பானது” என்ற எண்ணம் ரஷ்ய மக்களிடையே அதிகரித் துள்ளது. நிதிப் பற்றாக்குறையுடன் உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்களால் ஏற்பட்ட உள்கட்டமைப்பு இழப்புகளும் சேர்ந்து, அதிபர் புடின் அரசுக்குப் பெரும் பொருளாதாரச் சவாலை ஏற்படுத்தியுள்ளன.
