சீரிய தமிழ் உணர் வாளரும், பெண்ணுரிமைச் சிந்தனையாளரும், கவிஞரும், நாடக ஆசிரி யரும், எழுத்தாளரு மாகிய மதுரையைச் சேர்ந்த பேராசிரியர் முனைவர் நளினிதேவி அம்மையார் (வயது 82) நேற்று (29.08.2026) காலை மறைவுற்றார் என்பதை அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.
பெரியாரியப் பார்வையுடன் தமிழ் இலக்கி யங்களை ஆய்ந்து எழுதக்கூடிய ஆற்றலாளர்; படிக்கும் காலத்திலேயே ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும், பின்னர் ஈழத் தமிழர் ஆதரவு போராட்டங்களிலும் பங்கேற்றவர். தமிழ் இலக்கியம், தமிழர் அறம், தமிழ் இலக்கிய வரலாறு சார்ந்து ஏராளமான நூல்களை எழுதியவர்.
தமிழுணர்வு என்பதிலும், பெருமிதங்களுக்குள் சிக்கிக் கொள்ளாமல் தமிழர்களின் இயற்கை வாழ்வையும்,அறவுணர்வையும் ஆய்வு செய்து தன்னுடைய எழுத்துகளில் பதிவு செய்தவர்; போற்றியவர் மதுரைக்கு நாம் வரும் போதெல்லாம் நம்மைச் சந்தித்து மகிழக் கூடியவர். ஓர் அறுவை சிகிச்சையால் தன்னுடைய செவித் திறனையும், பேச்சுத் திறனையும் இழந்தாலும், எழுத்தாற்றலால் உலகுடன் உரையாடியவர்; பேச வைத்தவர்.
அதிகம் வெளித் தெரியாத, விளம்பர வெளிச் சத்தை விரும்பாத ஆற்றலாளர். அவரது மறைவு தமிழ் இலக்கிய ஆய்வுலகிற்குப் பெரிய இழப்பாகும். அவருக்கு நமது வீர வணக்கம்!
அவரது குடும்பத்தினர், நண்பர்கள், தமிழ் உணர்வாளர்கள் அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங் கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
30.8.2026
