கிரீமிலேயர் குழப்பங்களைச் சரிசெய்யவே இனியும் கால அவகாசம் வேண்டுமாம்! பா.ஜ.க.வின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது!
பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை கிரீமிலேயர் பெயரால் இனியும் மறுப்பதா?
கிரீமிலேயர் குழப்பங்களைச் சரிசெய்யவே இனியும் கால அவகாசம் வேண்டுமாம்! பா.ஜ.க.வின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது! பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை கிரீமிலேயர் பெயரால் இனியும் மறுப்பதா? கிரீமிலேயர் முறை ஒழிக்கப்படுவதே சமூகநீதிக்கான சரியான திசை! என்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள கண்டன அறிக்கை வருமாறு:
ஒன்றிய அரசின் அதிகாரமிக்க பணியிடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்குக் (OBC) கிடைத்த இடஒதுக்கீடு என்பது, ‘கைக்குக் கிட்டியது வாய்க்கு எட்டவில்லை’ என்ற நிலையிலேயே தொடக்கம் முதலே இருந்து வருகிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லாத, மண்டல் அறிக்கையிலும் இல்லாத கிரீமிலேயர்!
இந்தியா என்ற நாடு அமைந்து 46 ஆண்டுகள் கழித்து, பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற மண்டல் அறிக்கையின் பரிந்துரை ஏற்கப்பட்டாலும், அதை முதல்முறையாகச் செயல்படுத்தும்போதே, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லாத, மண்டல் அறிக்கையிலும் இல்லாத ‘‘கிரீமிலேயர்’’ என்ற பிரிவினையை, இந்திரா சஹானி வழக்கின் தீர்ப்பில் செருகி மறைமுகத் தடைக்கு வழிவகுத்தது இந்திய உச்சநீதிமன்றம். பொருளாதார அளவிலும், சமூக அளவிலும் முன்னேறிய பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் இருந்து விலக்கு (Creamy Layer Exclusion) என்ற பாகுபாட்டைத் திணித்தது.
இடஒதுக்கீட்டின் பலனை நுகர்ந்திடாத, அதிகா ரங்களில் அமர்ந்திடாத, ஆனால் கடின உழைப்பால், கடும் போட்டிகளுக்கும் நெருக்கடிகளுக்கும் மத்தியில் ஓரளவு சில படிகளில் ஏறியிருந்த பிற்படுத்தப்பட்டோரைத் தடுப்பதன் மூலம், உடனடியாக இடஒதுக்கீட்டின் பலனை அனுபவிக்க வாய்ப்பிருந்தவர்களைத் தடுத்து நிறுத்தி, சமூகநீதியை அடைவதை இன்னும் இயன்ற வரை அந்தத் தீர்ப்பு காலதாமதப்படுத்தியது.
தானாக ஓரளவு முன்னேறி வந்தவரை, எந்த வித இடஒதுக்கீட்டு உரிமையையும் அனுபவித்திராத ஒருவரை, தொடக்கத்திலேயே முறித்துப் போட்ட இந்த அநீதியைத் திணித்த ‘உச்சநீதி’மன்றத்தின் தீர்ப்பை அப்போது முதலே நாம் கடுமையாகக் கண்டித்ததுடன், அது குறித்து அறிவார்ந்த நியாயமான கேள்விகளையும் எழுப்பிக் கொண்டே இருந்தோம். 1993 ஆம் ஆண்டு அந்த கிரீமிலேயர் அளவு, ஒரு லட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் உடையோரை, இடஒதுக்கீட்டின் பலனை அடைய முடியாமல் தடுத்தது. பின்னர் ரூ.2.5 லட்சமாகவும், 2008 இல் ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சமாகவும், 2013 இல் ரூ.6 லட்சமாகவும் உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.8 லட்சமாக உள்ளது.
குழப்பங்களை ஏற்படுத்தும் 2004 ஆம் ஆண்டு அலுவலகக் குறிப்பாணை!
ஆனால், இந்த வருமான அளவைக் கணக்கிடுவதில், ஊதியத்தையும் சேர்க்க வேண்டும் என்று 2004 ஆம் ஆண்டு விளக்கங்கள் என்ற பெயரில் சில குழப்பங்களைப் பரிந்துரைத்தது ஒன்றிய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (Department of Personnel and Training – DoPT). இது 1993 இல் ஊதியம் அல்லது விவசாய வருமானத்திற்கும், இதர வருமானங்களுக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கி, கிரீமிலேயர் அளவைக் கணக்கிடுவதற்கு, ஜஸ்டிஸ் ராம்நந்தன் கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையில் விடுக்கப்பட்ட குறிப்புக்கு (OM No. 36012/22/93-Estt.SCT) மாறானதாகும்.
அக்டோபர் 14, 2004 இல் வெளியிடப்பட்ட அக் கடிதத்தில், அரசுப் பதவிகளுக்கு இணையான பதவி நிலை எதுவென்று முறைப்படி நிறுவப்படாத பட்சத்தில், பொதுத்துறை மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பள வருமானத்தையும், பிற்படுத்தப்பட்டோரில் கிரீமிலேயரை அடையாளம் காணும் வருமானம் / சொத்து வரம்புக் கணக்கீட்டில் சேர்க்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் விளைவாக, அரசு ஊழியர்களின் குழந்தை களுக்குச் ஊதிய வருமானக் கணக்கீட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டாலும், சில பொதுத்துறை அல்லது தனியார் துறை ஊழியர்களின் குழந்தைகளுக்கு, அவர்களின் பெற்றோரின் ஊதியமும் கணக்கில் சேர்க்கப்பட்டது. இது ஒரு திட்டமிட்ட பாகுபாடாகும்.
கோப்புகளைக் காணவில்லையாம் –
கைவிரித்த ஒன்றிய அரசு!
குழப்பத்தைத் திட்டமிட்டே உருவாக்கியது டன் மட்டுமல்லாமல், அது குறித்து பிற்படுத்தப்பட்டோ ருக்கான நாடாளுமன்ற நிலைக்குழு 2019 இல் விளக்கம் கேட்கும்போதும், 2004 ஆம் ஆண்டு குறிப்பிட்ட விளக்கக் கடிதம் வழங்குவது தொடர்பான கோப்புகளில் உள்ள குறிப்புகளை வழங்குமாறு கேட்டபோதும், ‘அந்தக் கோப்புகளைக் காண இயலவில்லை’ என்று ஒன்றிய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை கைவிரித்து விட்டது. என்னே சூழ்ச்சி பார்த்தீர்களா? இதனால், அதன் பின்னே உள்ளவர்கள் யார்? எதன் அடிப்படையில், பொதுத்துறை, தனியார் நிறுவன ஊழியர்களின் சம்பளத்தையும் சேர்த்துக் கணக்கிடும் முறை ‘கிரீமிலேயர் கணக்கீட்டில்’ இணைக்கப்பட்டது? என்பது குறித்து விளக்கம் பெற முடியவில்லை.
பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு மூலம் கிடைக்க வேண்டிய உரிய இடம் கிடைக்காமல் போனது!
2004 இல் இருந்தே இந்தப் பிரச்சினை இருந்தாலும், பெரும்பாலும் 2013 வரை (அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருக்கும்வரை), அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். உள்ளிட்ட பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளில் சம்பளத்தைக் கிரீமிலேயருக்குக் கணக்கி டும் நடைமுறை பின்பற்றப்படவில்லை. 2015 முதல் தீவிரமாக, இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டது. இதனிடையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரோஹித் நாதன், சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தேறிய போதும், அவரது தந்தை ஒரு தனியார் நிறுவனத்தில் வாங்கும் ஊதியத்தைக் கணக்கிட்டு, அவருக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு மூலம் கிடைக்க வேண்டிய உரிய இடம் கிடைக்காமல் போனது. இதை எதிர்த்து, மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம், சென்னை உயர்நீதிமன்றம், பின்னர் உச்சநீதிமன்றம் வரை சென்ற வழக்கில், கடந்த 2026 மார்ச் 11 இல் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதே போல, நூற்றுக்கும் மேற்பட்டோர், ஒன்றிய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் குழப்பமான அலுவலகக் குறிப்பானை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய இடம் மறுக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதத்தில் இவ் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஆர்.மகாதேவன் அமர்வு, கிரீமிலேயர் என்பதை வரையறுக்க வருமானம் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட முடியாது என்று குறிப்பிட்டதுடன், “ஒரே நிலையில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை (OBC) சமமற்ற முறையில் நடத்துவது சட்டப்படி தவறானது மட்டுமல்ல, அரசியலமைப்புச் சட்ட ரீதியாகவும் அனுமதிக்க முடியாதது. அதன் கூறுகள் 14, 15, 16 ஆகியவற்றுக்கு முரணானது” என்றும் கூறி, வருமானத்தை மட்டும் கணக்கிட்டு இடஒதுக்கீட்டை மறுக்கும் முறையை ரத்து செய்து, மிக முக்கியமான திருப்புமுனைத் தீர்ப்பை வழங்கியது. மேலும், பதவிகளின் தன்மை அடிப்படையில் (குரூப் ஏ, பி, சி, டி), 1993 இல் வகுக்கப்பட்ட விதிமுறைகளின் படி, எந்தெந்த பதவிகள் இணையாகக் கருதப்பட்டு, இடஒதுக்கீட்டில் இருந்து விலக்கப்பட வேண்டியவை என்பதையும், ஆறு மாத காலத்திற்குள் (செப்டம்பர் 11) இறுதி செய்யுமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டது.
பா.ஜ.க. அரசின் உண்மை முகத்தை வெளிச்சமிட்டுக் காட்டிவிட்டது!
இந்தக் கெடு நெருங்கும் நிலையில் தான், கடந்த வாரம் (ஆகஸ்ட் 25 அன்று) உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வை நாடிய ஒன்றிய அரசின் தலைமை வழக்குரைஞர், மிக விரிவாக ஆய்வுகள் செய்யப்பட்டு, இந்த முடிவை எடுக்க வேண்டியுள்ளதால், பிற்படுத்தப்பட்டோருக்கான கிரீமிலேயர் அளவுகோல்களை வரையறுக்க இரண்டு ஆண்டுகள் அவகாசம் வேண்டும் என்று கோரியுள்ளார். இதுதொடர்பாக, ஆகஸ்ட் 31 அல்லது செப்டம்பர் 1-இல் விசாரிப்பதாகத் தலைமை நீதிபதியும் அறிவித்துள்ளார்!
இது குறித்து நேற்று முன் தினம் (28.8.2026) கருத்துக் கூறியிருந்த பா.ஜ.க.வைச் சேர்ந்தவரும், நாடாளுமன்ற பிற்படுத்தப்பட்டோர் நலக் குழுவின் தலைவரான கணேஷ் சிங் எம்.பி. அவர்கள், ஒன்றிய அரசின் இரு அமைச்சகங்களிடையே (பணி யாளர், ஓய்வூதியம் மற்றும் பொதுக் குறைதீர்ப்பு அமைச்சகத்திற்கும் (Ministry of Personnel, Pensions, and Public Grievances), சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்திற்கும் (Ministry of Social Justice and Empowerment) இடையே) சிக்கியிருப்பதாகத் தெரி வித்துள்ளார். பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு விவகாரத்தில் ஒன்றிய அரசு எவ்வளவு மெத்தனப் போக்குடன் இருக்கிறது என்பதற்கு இதுவே அடையாளம் ஆகும். இதில் முதல் துறைக்கு பிரதமர் நரேந்திர மோடியே அமைச்சர் ஆவார். பா.ஜ.க.வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான கணேஷ் சிங்கே, இந்த உண்மையைப் போட்டுடைத்த நிலையில், அது உண்மை நிலவரத்தை வெளிச்சமிட்டுக் காட்டிவிட்டது. நாட்டின் பெரும்பான்மை OBC களுக்கு ஏற்பட்ட அவல நிலை இதுதான்.
(நேற்று இரவு மீண்டும் அவரே, 2004 அலுவலகக் குறிப்பானை வழங்கிய காலத்தில் இருந்த காங்கிரஸ் அரசே இந்த தாமதத்திற்குக் காரணம் என்றும், பா.ஜ.க. அரசுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலனில் அக்கறை உள்ளதாகவும் புதிதாக ஒரு சப்பைக் கட்டு விளக்கம் அளித்துள்ளார். அதைப் பொருட்படுத்தத் தேவையில்லை.)
சிவில் சர்வீஸ் தேர்வுகளில் மட்டுமே நூற்றுக்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்டோரின் வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது என்றால், மற்ற துறைகளில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு எவ்வளவு என்று கணக்கிட முடியுமா?
33 ஆண்டுகளாக, இடஒதுக்கீட்டை அனுபவிக்க முடியாமல் இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறோம்!
மண்டல் அறிக்கைக்காக மக்கள் மன்றத்தில் போராடி, சட்டமியற்றும் நாடாளுமன்றத்தில் (Legislature) போராடி, இரண்டு பிரதமர்களைக் கடந்து, மூன்றாவது பிரதமராக வந்த சமூகநீதிக்காவலர் வி.பி.சிங் அவர்கள் காலத்தில் வென்றாலும், நீதிமன்றத்தில் (Judiciary) போராட வேண்டியிருந்தது. நீதிமன்றத்தில் வெற்றி பெற்ற பின்னாலும், அதிகார வர்க்கத்தில் (Executive) அமர்ந்திருக்கும் பார்ப்பன உயர்ஜாதியினரின் சூழ்ச்சி யால் 33 ஆண்டுகளாக, இடஒதுக்கீட்டை அனுபவிக்க முடியாமல் இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறோம். அதை மேலும் ஒன்றிய பா.ஜ.க. அரசு தாமதப்படுத்திக் கொண்டிருக்கிறது.
பிற்படுத்தப்பட்டோரில் யார் இடஒதுக்கீட்டுப் பயனாளிகள் என்பதைத் தீர்மானிக்க, இனியும் இரண்டு ஆண்டுகள் என்று காலம் தாழ்த்துவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதிக்கக் கூடாது. அப்படி காலம் தாழ்த்துவதாக இருந்தால், அதுவரை, கிரீமிலேயர் பாகுபாட்டை இடஒதுக்கீட்டில் அனுமதிக்க கூடாது; குறைந்தபட்சம், 1993 ஆம் ஆண்டின் நடைமுறையே பின்பற்றப்பட வேண்டும்.
இமை மூடாப் பணி செய்ய வாருங்கள்!
ஒரு புறம் இடஒதுக்கீட்டை ஒழிக்கும் ஆர்.எஸ்.எஸ்.சின் சூழ்ச்சி, இன்னொரு புறம் இருக்கும் இடஒதுக்கீட்டிலும் பிற்படுத்தப்பட்டோருக்கான் கிரீமிலேயரில் குழப்பம் ஏற்படுத்துதல், ஒடுக்கப்பட்டோரான பட்டியல் பிரிவின ருக்கும் கிரீமிலேயரைக் கொண்டுவர வேண்டும் என்ற குரல்கள் என்று பல முனைகளிலிருந்தும் சமூகநீதிக்குச் சவால்கள் தொடர்ந்து எழுந்துள்ளன. அனைத்தையும் எதிர்கொண்டாக வேண்டிய கட்டாயச் சூழல் சமூக நீதியாளர்களுக்கு எழுந்துள்ளது. ஒன்றிணைந்து போராடுதலும், சமூகநீதி தொடர்பாக இளைஞர்களுக்கு விழிப்புணர்வூட்டுதலும் இன்றைய உடனடித் தேவை! தேவை!
உறங்காதீர்கள்! ஓய்வெடுக்காதீர்கள்! உரிமைக்காகப் போராடி, நியாயமான சமூகநீதியைக் காப்பாற்ற இமை மூடாப் பணி செய்ய வாருங்கள்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
30.8.2026
