தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை குறிப்பேட்டில் இருந்து தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், ஜவகர்லால் நேரு பெயர்கள் நீக்கமா? சமூகநீதி வரலாற்றைத் திட்டமிட்டு மறைப்பதா?

3 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை குறிப்பேட்டில் இருந்து தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், பண்டித நேரு பெயர்கள் நீக்கமா? சமூகநீதி வரலாற்றைத் திட்டமிட்டு மறைப்பதா? என்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள கண்டன அறிக்கை வருமாறு:

தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மானியக் கோரிக்கையின் கொள்கைக் குறிப்பேட்டில் கடந்த ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் வெளி யிடப்பட்டபோது இடஒதுக்கீட்டின் வரலாறு குறித்த குறிப்புகளில் இடம்பெற்றிருந்த தந்தை பெரியார், பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு ஆகியோரின் பெயர்கள், இவ்வாண்டு த.வெ.க. ஆட்சியில் வெளியிடப்பட்ட மானியக் கோரிக்கை கொள்கைக் குறிப்பேட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இது கடுமையான கண்ட னத்திற்குரியதாகும்.

இடஒதுக்கீடு காப்பாற்றப்பட்டது!

1921 ஆம் ஆண்டு முதல் நீதிக்கட்சி ஆட்சியில் முதலமைச்சர் பானகல் அரசர் ராமராய நிங்கர் தொடர்ந்து முயற்சி செய்து, பின்னர் 1928 முதல் அமலானது வகுப்புவாரி உரிமை (இடஒதுக்கீடு)  வழங்கிய அரசாணை (கம்யூனல் ஜி.ஓ). 1950 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டம் அமலானதும், உச்சநீதிமன்றத்தின் மூலம் இடஒதுக்கீட்டை ஒழிக்கச் செய்த சூழ்ச்சிகளுக்கு எதிராகத் தந்தை பெரியார் போராடி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தத்தைக் கொண்டு வந்தார். அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு, அன்றைய சட்ட அமைச்சர் பாபாசாகேப் பி.ஆர்.அம்பேத்கர் ஆகியோரின் பங்களிப்புடன் இடஒதுக்கீடு காப்பாற்றப்பட்டது.

இந்த வரலாற்றைக் கூறிய கொள்கைக் குறிப்பேட்டிலிருந்த வரிகளிலிருந்து, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பிரதமர் நேரு ஆகியோரின் பெயர்கள் ஏன் இப்போது நீக்கப்பட்டுள்ளன?

இதன் பின்னணியில் இருப்போர் யார்?

தந்தை பெரியாரை, பாபாசாகேப் அம்பேத்க ரைக் கொள்கைத் தலைவர்கள் என்று கூறும் அரசின் கொள்கைக் குறிப்பேட்டில் பெயர்க ளும், வரலாறும், அவர்களின் பங்களிப்பும் இருட்டடிக்கப்படுவது ஏன்? இதன் பின்ன ணியில் இருப்போர் யார்? யாருடைய தூண்டுதல் அல்லது ஆணை இதற்குப் பின்னால் இருக்கி றது? மற்றவர்களைக் கேள்வி கேட்கும் முன், தங்கள் ஆட்சியில் வெளியிடப்படும் கொள்கைக் குறிப்பேட்டில் தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் இருப்பதை உறுதி செய்துகொண்டார்களா?

பிற்படுத்தப்பட்டோர் மானிய கோரிக்கை – கொள்கை குறிப்பேட்டில்
‘தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர்’ பெயர்கள் நீக்கம்!

ஆசிரியர் அறிக்கை

ஆசிரியர் அறிக்கை

தமிழ்நாடு சமூகநீதிக்கான சமர்க்களம். ஒவ்வொரு நகர்வையும் கவனத்துடன் எடுத்து வைத்து, சமூகநீதிக்காகப் பெரும்போர் செய்து உரிமையைக் காத்து வைத்திருக்கிறோம். இதற்காகப் பங்களித்தவர்கள் யாரானாலும், இந்திய அளவில் உள்ள அனைத்துத் தலை வர்களையும் கூட, தமிழ்நாட்டில் நினைவு கூர்ந்து நினைவுச் சின்னங்கள் எழுப்பிக் கொண்டாடு கிறோம்.

உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்!

ஆனால், சமூக நீதியின் ஆணிவேர்களான தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் பெயர்களை நீக்கியிருப்பதும், பிரதமர் நேருவின் பெயரை நீக்கியிருப்பதும் மிகுந்த சந்தேகத்தை எழுப்புகின்றது. உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து, கொள்கைக் குறிப்பேட்டில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, சமூகநீதி வரலாறும், தலைவர்களும் இருட்டடிக்கப்படாமல் வெளி யிடப்பட வேண்டும்.

தமிழ்நாடு தந்தை பெரியார் மண்,
சமூகநீதி மண்!

நுணுக்கமாக, பல இடங்களில், இத்தகைய செயல்பாடுகள் நடந்துகொண்டிருப்பதை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருப்போர் உணர்ந்தி ருக்கிறார்களா, இல்லையா என்று தெரியாது. ஆனால், தமிழ்நாடு தந்தை பெரியார் மண், சமூகநீதி மண்! எல்லா நேரமும் விழிப்புடன் இருக்கும் திராவிட மண்! அரசியல் ரீதியாக சில மாற்றங்கள் ஏற்படலாம். ஆனால், எந்தப் பார்ப்பனியத் தந்திரங்களும் இங்கு எடுபடாது! தமிழ்நாடு அனுமதியாது என்பதை ஆட்சியாளர்களும், அவர்களுக்குப் பின்னால் இருந்து செயல்படும் அதிகாரிகளும் உணர்ந்துகொள்ள வேண்டும்!

கி.வீரமணி

            தலைவர்,

திராவிடர் கழகம்

 

 

29.8.2026       

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *