புதுடில்லி, ஆக. 26 நாடு முழுவதும் இதுவரை 2 கோடி பள்ளி மாணவர் களின் ஆதார் பயோ-மெட்ரிக்கை புதுப்பித்துள்ளதாக ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச் சகம் தெரிவித்துள்ளது.
மேலும், வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதி வரை, குழந்தைகளின் பயோ-மெட்ரிக்களை இலவசமாகப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு ஒளிப்படம் மற்றும் அடிப்படை விவரங்கள் மட்டும் கொண்டு ‘பால் ஆதார் அட்டை’ (Baal Aadhaar) வழங்கப்படுகிறது. இவர்களுக்கு கைரேகை மற்றும் கருவிழி பதிவு செய்யப்படுவதில்லை.
இவர்கள் 5 வயதைக் கடக்கும்போது ஆதார் மய்யங்களுக்கு நேரடியாகச் சென்று கைரேகைகள், கருவிழிகள் மற்றும் பிற பயோமெட்ரிக் விவரங் களைப் பதிவு செய்வது அவசியம். பின்னர், 15 வயதில் மீண்டும் பயோ-மெட் ரிக்கை அப்டேட் செய்ய வேண்டும்.
இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 2025-ஆம் ஆண்டு, பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று மாணவர்களின் பயோ-மெட்ரிக்களை அப்டேட் செய்யும் பணிகளை ஒன்றிய அரசு தொடங்கியது. மாநில அரசுகளுடன் ஒன்றிணைந்து இதுவரை 1.56 லட்சம் பள்ளிகளில் ஆதார் புதுப்பிப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, இதுவரை 2 கோடி மாணவர்களுக்கு ஆதார் பயோ-மெட்ரிக் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
5 வயது முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கு, செப்டம்பர் 30-ஆம் தேதி வரை பயோமெட்ரிக்கை புதுப்பிக்க இலவசம். கடந்த செப்டம்பர், 2025 முதல் ஓராண்டுக்கு பயோ-மெட்ரிக் புதுப்பிப்பு கட்டணத்தை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. குழந்தைகள் பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பித்து வைத்திருப்பது, அவர்கள் உயர்கல்வி நிலைகளை அடையும் போது, ஆதார் அட்டை தேவைப்படும் சூழலில் ஏற்படும் அங்கீகாரச் (authentication) சிக்கல்களைக் குறைக்க உதவும். அரசின் கல்வித் தொகை, கல்வி தொடர்பான திட்டங்கள் மற்றும் சலுகைகளைப் பெறுவதற்கும், நீட், ஜேஇஇ, க்யூட் போன்ற நுழைவுத் தேர்வுகளை எழுதும்போதும் ஆதார் அட்டை கட்டாயம் தேவை.
ஆதார் பயோமெட்ரிக் புதுப்பிப்பை இணையவழியாகச் செய்ய முடியாது. குழந்தைகளைப் பெற்றோர் ஆதார் மய்யத்துக்கு அழைத்துச் சென்றுதான் புதுப்பிக்க முடியும். அருகிலுள்ள ஆதார் மய்யத்தை ‘புவன் ஆதார் போர்டல்’ (Bhuvan Aadhaar Portal) மூலம் கண்டறியலாம்.
