நீதி விசாரணை தேவை!

இணையவழி கையெழுத்து இயக்கம்

கருநாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் ஹனூர் அருகேயுள்ள காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில் ஆகஸ்ட் 15-ஆம் நாள் அதிகாலையில் அந்தோணிசாமி, ஜான் ரோஸ் பீட்டர், லாசர் டேவிட் குமார் ஆகிய மூன்று தமிழர்கள் கருநாடக வனத் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால், கருநாடக வனத்துறையோ ‘மான் வேட்டையாடச் சென்ற மூவரும் வனத்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வனத்துறையினர் திருப்பிச் சுட்டதால் மூவரும் உயிரிழந்தனர்’ என்று தெரிவித்தது. இது வழக்கமாக என்கவுண்டர்களுக்குச் சொல்லப்படும் ஒரு சாக்குப் போக்குதான்! இந்தத் துப்பாக்கிச் சூட்டில் மகிமைதாஸ் என்பவர் உயிர்தப்பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கெனவே காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பாகக் கொதிநிலையில் இருந்த தமிழ்நாடு – கருநாடக எல்லைப் பகுதியில் நடந்த இந்தக் கொடுமை கருநாடகத் தமிழர்கள் மத்தியிலும் கொதிப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டிலும் திராவிடர் கழகம் உள்ளிட்ட எல்லா அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன.

“மான்களை வேட்டையாட வந்தார்கள் என்று சொல்லி மனிதர்களை வேட்டையாடும் உரிமையை கருநாடக வனத் துறைக்கு யார் கொடுத்தது? யாரைத் திருப்திப்படுத்த இந்தக் கொடுமை? இதற்குக் காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்” என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் வலியுறுத்தியிருந்தார். இதுகுறித்து விசாரணை நடத்த கருநாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் உத்தரவிட்ட நிலையில், கருநாடக வனத்துறையினர் 7 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இது அப்பட்டமான படுகொலைதான் என்பதை உறுதி செய்யும் வகையில் இப்போது சான்றுகள் கிடைத்துள்ளன; சில கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

கொல்லப்பட்ட மூவரின் உடற்கூராய்வு கடந்த 16-ஆம் தேதி மைசூருவில் உள்ள கே.ஆர். அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்டது. அந்த அறிக்கையில், “இறந்த 3 பேரும், 10 அடிக்குக் குறைவான தூர‌த்தில் இருந்து சுடப்பட்டுள்ளனர்” என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஜான் ரோஸ் பீட்டரின் இடது காது பகுதியில் இருந்து மார்புப் பகுதி வரை சுமார் 28 செ.மீ. நீளத்துக்கு ஆழமான காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அந்தோணிசாமி, லாசர் டேவிட் குமார் ஆகியோரின் வலது மார்பு, தொடை ஆகிய இடங்களில் ப‌லத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், லாசட் டேவிட் குமார் உடலில் வல‌து மார்புப் பகுதியில் 8.5 செ.மீ. வலது தொடையில் 13 செ.மீ. ஆழத்துக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மிக அருகாமையில் இருந்து சுடப்பட்டது உறுதியாகிறது” என்றும் உடற்கூராய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அம் மூவரும் சுட்டுக்கொல்லப்பட்ட ஷாக்யா வனப்பகுதியில், காவல்துறையினரும் வனத்துறை அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டு, அங்கு சிதறிக் கிடந்த பொருட்களைச் சேகரித்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையின் போது, கொல்லப்பட்ட மூவரிட‌ம் இருந்தும் இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள், மூன்று கத்திகள், இரண்டு செல்பேசிகள், குறடு, திருப்புளி, இரண்டு பைகள், வெங்காயம், தக்காளி, சமையல் பாத்திரங்கள், இரண்டு பைகளில் மான் இறைச்சி, ஒரு ஜோடி ஹவாய் செருப்பு ஆகியவற்றைக் கைப்பற்றியதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், வனத்துறை வெளியிட்ட புகைப்படத்தில் இடம்பெற்ற, ஸ்டிக்கர் பிரிக்காத புதிய காலணி பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தோணி சாமியின் மனைவி லூர்து மேரி, ‘இரவெல்லாம் காட்டில் அலைந்தவரின் செருப்பில் மண் கூட ஒட்டி இருக்காதா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். சுடப்பட்டுத் தப்பித்தவரும் நேரடி சாட்சியுமான, மகிமை தாஸ், “வனத்துறையினர் மிகவும் அருகில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.  மலைப் பகுதியில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினேன். என்னை வனத்துறையினர் விசாரணைக்கு அழைத்து, சாட்சி சொல்ல வைக்க முயற்சிக்கின்றனர். அவர்கள் சொல்வதைப் போல சொல்லாவிட்டால், என்னை வழக்கில் சிக்க வைத்து விடுவார்களோ என்று அச்சமாக இருக்கிறது. எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது” என்று காணொலி வெளியிட்டுக் கோரிக்கை விடுத்தார்.

வனப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வனத் துறையினரால் இத்தகைய ஆபத்துகள் ஏற்படுவதும், அவர்கள் மீது கொள்ளை, கடத்தல், சட்டமீறல், வேட்டை என்று குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு, இந்தக் கொலைகள் நியாயப்படுத்தப்படுவதும் தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது. வனப் பகுதிகளில் நடந்த இத்தகைய கொடுமைகள் குறித்த வழக்குகள் வனத் துறை, காவல்துறையினர் நிகழ்த்திய மனிதநேயமற்ற அத்துமீறல்களை வெளிக்கொண்டு வந்திருக்கின்றன. ஆனாலும், கைகளில் ஆயுதங்கள், கேட்க ஆளில்லாத அதிகாரம், அதிகம் வெளித் தொடர்புகளோ, சட்ட ரீதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளும் அளவு தொடர்புகளோ இல்லாத பழங்குடியினரை எப்படியும் அத்துமீறலாம் என்ற அதிகார மமதை தான் இத்தகைய கொடுமைகளுக்குக் காரணம்!

இந்த வழக்கு கருநாடகாவில் வசிக்கும் தமிழர் மூவர் கொலை என்ற அளவிலும், மனித உரிமை அடிப்படையிலும் முக்கியமான வழக்காகும். இதனைக் கருநாடக சி.பி.சி.அய்.டி விசாரணைக்கு மாற்றி கருநாடக டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார். ஆனால், அது போதுமானதல்ல. உரிய நீதிவிசாரணை  நடத்தப்பட வேண்டும்.

“கடந்த வாரம் தென்மண்டல மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக கருநாடக முதலமைச்சர் தமிழ்நாடு வந்தார். அப்போது நேரிலாவது தமிழ்நாடு அரசு தனது கண்ட னத்தை தெரிவித்துள்ளதா? கருநாடக மாநில காவல்துறைக்கு பதிலாக ஒரு மேல்மட்ட நீதி விசாரணை செய்ய தமிழ்நாடு வலியுறுத்த வேண்டும்” என்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பதையும், தொடர்ந்து பலரும் உரிய விசாரணைக்கு வேண்டுகோள் விடுத்து வருவதையும் கருத்தில் கொண்டு, மூன்று தமிழர்களின் மரணத்துக்கு நீதி கிடைக்கத் தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். அந்தக் குடும்பங்களுக்குத் தேவையானால், சட்ட உதவியையும் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்பது முக்கியம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *