எது அறிவுடைமை – குருப்பெயர்ச்சியா? அறிவு வளர்ச்சியா?

பூமிக்கும் வியாழன் கோளுக்குமான தொலைவு  71.5 கோடி கிலோமீட்டர். நமது சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களில், ஜூபிடர் எனப்படும் வியாழன் கோள்தான் மிகப்பழையதும் மிகப்பெரியதும் ஆகும். அது பெரும்பாலும் வெள்ளிக் (வீனஸ்) கோளுக்குப் பிறகு இரவில் பிரகாசமாகத் தோன்றும் இரண்டாவது கோள் இதுதான். எளிய தொலைநோக்கிகளை உருவாக்க ஆரம்பித்த பின்னர் இந்த நெகிழ்வான வாயுக்களைக் கொண்ட கோளை விஞ்ஞானிகள் நீண்ட நாள்களாகக் கண்காணித்து வருகின்றனர்.

1610ஆம் ஆண்டு, கலீலியோ கலிலி தனது தொலைநோக்கிக் கருவியின் மூலம் வியாழனைத் தொடர்ந்து ஆய்வு செய்து வந்தபோது தான், நான்கு பெரிய துணைக் கோள்களை அவர்  கண்டறிந்தார். இந்தக் கண்டுபிடிப்பு மேலும் பல முக்கியச் செய்திகளை விணவெளி ஆய்வாளர்கள் விவாதிக்கக் காரணமாயிற்று. கடந்த நூற்றாண்டில் வியாழன் குறித்த ஆய்வுகள் மிக விரிவாக நடத்தப்பட்டுள்ளன. இவ்வாண்டு மார்ச் வரை மொத்தம் 101 நிலாக்கள் வியாழனைச் சுற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்னும் பல்லாயிரம் விண்வெளிப் பொருட்கள் வியாழனைச் சுற்றி வந்துகொண்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் ஆய்வு செய்துவருகின்றனர் அறிவியலாளர்கள்.

சூரியக் குடும்பத்தில், சூரியனுக்கு அடுத்து பெரும் ஈர்ப்பு ஆற்றல் கொண்டதன் காரணமாக வியாழன், ஒரு ‘பெரிய அண்ணன்’ போல முக்கியத்துவம் கொண்டது. மற்றபடி உலகில் வசிக்கும் 800 கோடி மக்கள் மீதும் தனித்தனியாக, அவர்களின் பிறந்தநாளை நினைவு வைத்துக் கொண்டெல்லாம் வினையாற்றும் ஆற்றல் கொண்டதல்ல.

இந்தியாவின் தொடக்க கால வானியலாளர்களும், தெளிவாகத் தெரியும் இக் கோளைக் கண்டுகொண்டனர். அக்கோளுக்கு குரு என்றும், பிரகஸ்பதி என்றும் பெயரிட்டனர். ஆனால் மதவாதிகளோ அத்தோடு விடவில்லை; கதை கட்டினர். குரு என்ற பெயர் வைத்ததனால் இவர் (இக்கோள் தான்) எல்லோருக்கும் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் – ‘குரு’ என்றனர். வேதங்களில் சிறந்து விளங்கும் ‘பிரகஸ்பதி’ என்றனர். இவர் ஆங்கீரச ரிஷிக்கும், சிரத்தாதேவிக்கும் பிறந்த பிள்ளை என்றனர். பிருஹத் பிரம்மா, பிருஹன் மனஸ், பிருஹத் ஜோதிஸ், பிருஹன் மந்திர, பிருஹத்பாஸ் என்னும் அய்வரும் இவரது உடன்பிறந்தவர்கள் என்றனர். இவருக்குத் தாரா, சங்கினி என்று இரண்டு மனைவிகளைக் கட்டிவைத்தனர். ‘எட்டு குதிரைகள் பூட்டிய தேரில் வலம் வருபவர்; அட்ச மாலை அணிந்தவர்; கொண்டைக் கடலையை விரும்பிச் சாப்பிடுபவர்’ என்று கதையளந்தனர். பல இடங்களில் ‘அவரைச் சென்று வழிபட்டால் நன்று’ – ‘குரு பார்வை பட்டால் வாழ்க்கை சிறக்கும்’ என்று கூறி கோயில்களில் ஆட்களைச் சேர்த்தனர்.

‘அந்த குருவின் மனைவிகளில் ஒருவரான தாராவுக்கு, குருவின் மாணவர்களில் ஒருவரான சந்திரன் (நிலா) மீது கண். அவனை வசியம் செய்வதற்காக அவனுக்கு எண்ணெய்க் குளியல் செய்வித்தார்’ என்று ஆபாசக் கதை கட்டி, புராணம் எழுதி, ‘தாராசசாங்கம்’ நாடகம் நடத்தி வியாபாரம் செய்தனர். பூமியின் சந்திரனுக்கும் வியாழனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாத போதே ‘கள்ளக் காதல்’ கதை விட்டவர்கள், கலீலியோவுக்குப் பிறகு என்றால் எத்தனை கதை எழுதி இருப்பார்கள், இப்போதுவரை கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் 101 துணைக் கோள்கள் (சந்திரன்கள்) கணக்கு தெரிந்தால்… நினைத்துப் பார்க்கவே அருவருப்பாக இருக்கிறதே!

“இன்று (ஜூன் மாதம் 2-ஆம் தேதி) ‘குரு’ 12 ராசிகளில் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குக் குடி பெயர்கிறார். கடக ராசியில் உச்சம்பெறும் அவரைச் சென்று வழிபட்டு திருமண யோகம், தொழில் முன்னேற்றம் பெறுங்கள்’’ என்று கோயில்கள் முதல் ஊடகங்கள் வரை ஏராளமான விளம்பரங்கள், வியாபாரங்கள். எல்லாக் கோள்களும் எல்லா நொடியிலும் நகர்ந்து கொண்டேயிருக்கின்றன. இதில் பின்னணியில் தெரியும் நட்சத்திரங்களைக் கணக்கில் கொண்டு நகர்வைக் கணிக்கலாமே தவிர, மனிதர்களுக்கு என்ன நடக்கும் என்று கணிக்க என்ன இருக்கிறது? பின்னணியில் இருக்கும் நட்சத்திரங்கள் எத்தனை ஆயிரமாயிரம் கோடி கிமீ தொலைவில் இருக்கின்றன. அவற்றுக்கும் மனித வாழ்வுக்கும் என்ன தொடர்பு?

2020 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து வியாழன் கோளை ஆய்வு செய்ய செயற்கைக்கோள் ஒன்று அனுப்பும் திட்டம் இருந்தது. பின்னாளில் கைவிடப்பட்டது. அய்ந்தாம் வகுப்புப் பிள்ளைக்குக் கூட தெரியும் –வியாழன் கோள் பற்றிய அறிவியல் செய்திகளை –  இஸ்ரோ (அய்எஸ்ஆர்ஓ) இந் நாட்டின் பொது மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டாமா? குருப் பெயர்ச்சி என்றும், சனிப் பெயர்ச்சி என்றும் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் நேரத்தையும் உழைப்பையும் பணத்தையும் செலவு செய்து மடமையில் விழுந்து கிடக்கும் நிலையிலிருந்து அவர்களை மீட்க வேண்டாமா? அறிவியல் செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் இந்த மூடநம்பிக்கைகளையும் பரப்பி அதற்கு ராசி பலன்கள் புத்தகத்தையும் வெளியிட்டு காசு பார்ப்பது அறிவு நாணயம் கொண்டதா? எது அறிவுடைமை –  குருப்பெயர்ச்சியா? அறிவு வளர்ச்சியா?

அறிவியலை பரப்புவதற்கு என்று அமைக்கப்பட்டுள்ள துறையை ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிட்டது ஒன்றிய அரசு. தமிழ்நாடு அரசு அறிவியல் மனப்பான்மை பரப்புரைக்கும், ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கவும் தனி அமைச்சகத்தை உருவாக்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 21 அன்று திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழக மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முன்னோடித் தீர்மானம் செயல்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை இத்தகைய மூடநம்பிக்கைகள் நாளும் உணர்த்துகின்றன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *