காபூல், ஆக.26- ஆப்கானிஸ் தானில் உயிருக்கு ஆபத்தான ஊட்டச்சத்து குறைபாட்டால் 10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அய்.நா. எச்சரித்துள்ளது.
ஆப்கன் முழுவதும் 37 லட்சம் குழந்தைகள் மிகவும் மோசமான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என
அய்.நா.வின் குழந்தைகள் அமைப் பான யுனிசெஃப் தெரிவித்துள்ளது. அதில், 10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான கடுமையான தீவிர ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு அவதிப்படுவதாக யுனிசெஃப் அமைப்பின் ஆப்கன் பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “அவர்களுக்குத் தேவையான சிகிச்சை வழங்காமல், விரைவான நடவடிக்கை எடுக்காமல் விட்டால் 10 லட்சம் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்” என்றும் அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில் தெரிவித்தார். கடுமையான உடல் மெலிவு மற்றும் மருத்துவச் சிக்கல்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர் ஆறு மாதங்களுக்கும் குறைவயதுடைய பச்சிளம் குழந்தைகள் என்று அவர் கூறினார்.
உடல் மோசமாக நலிவடைந்து, உடலில் குறைபாடுகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளில் 40% பேர் 6 மாதங்களுக்கு குறைவான வயதுடைய பச்சிளம் குழந்தைகளே. இரு வயதுக்குட்பட்ட குழந்தைகள் 80% பேர் ஆப்கனில் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படுகின்றனர். குழந்தைகள் பலியாவதில் அதிக பங்கு ஊட்டச் சத்து குறைபாடு பிரச்னையால் ஏற்படுவதாக அய்.நா. தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இந்த நிலைமை மிகவும் மோசமாகி வருகின்றது.
கடந்த ஜூலை 2025இல் 6,000 குழந்தைகள் இந்தப் பிரச்னையால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டனர். இது கடந்த மாதத்தில் 8,000 ஆக அதிகரித்துள்ளது. தெற்கு ஆப்கனில் சில மருத்துவமனைகளில் குழந்தைகள் வார்டில் 3, 4 குழந்தைகள் என ஊட்டச்சத்து குறைபாடு பாதிப்பால் தொடர்ந்து அனுமதிக்கப்படுவதாக அய்.நா. பிரதிநிதி தெரிவித்தார்.
