கொல்கத்தா, மே 11- மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரியின் ஆலோசகராக ஓய்வுபெற்ற அய்ஏஎஸ் அதிகாரியான சுப்ரதா குப்தா நியமிக்கப்பட்டிருப்பது மேற்கு வங்கத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது.
பிஜேபி, மம்தாவின் கோட்டையாகக் கருதப்பட்ட பபானிபூர் தொகுதியிலேயே அவரை வென்ற சுவேந்து அதிகாரி, மாநிலத்தின் முதலமைச்சராக நேற்று (10.5.2026) பதவியேற்றார். இந்த நிலையில், முதலமைச்சர் சுவேந்து ஆலோசகராக ஓய்வுபெற்ற அய்ஏஎஸ் அதிகாரியான சுப்ரதா குப்தா நியமிக்கப்பட்டிருப்பது மேற்கு வங்கத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. புதிய அரசு, முதலமைச்சர் அலுவலகத்தையும் முக்கிய நிர்வாகப் பதவிகளையும் மறுசீரமைத்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக நடைபெற்ற சிறப்பு வாக்காளர் பட்டியல் (எஸ்அய்ஆர்) பணிக்காக, தேர்தல் ஆணையத்தால் சிறப்புப் பட்டியல் கண்காணிப்பாளராகப் பணியமர்த்தப் பட்டவர்தான் இந்த சுப்ரதா குப்தா.
