செருப்புத் தோரணம் கட்டிய ஸநாதனிகள் வெட்கும்படியாகப் பேசிய பெரியாரின் தனித்தன்மையைச் சுட்டிக்காட்டி கழகத் தலைவர் ஆசிரியர் உரை!

8 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சிவகங்கையில் பெற்ற செருப்புத் தோரண வரவேற்பு சிறப்பானது!
இந்த செருப்பென்ன சாதாரண செருப்பா?
14 ஆண்டுகள் நாட்டையே ஆண்ட செருப்பல்லவா?

சிவகங்கை, ஆக. 23 செருப்புகள் வீசப்பட்டாலும், சிறப்புகள் செய்யப்பட்டாலும் இரண்டும் ஒன்றுதான் என்ற தந்தை பெரியாரை அவமானப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு, சிவகங்கை மாவட்டத்தில் செருப்புத் தோரணம் கட்டி வரவேற்பு கொடுத்திருந்தனர் ஸநாதனிகள். அதுகுறித்துப் பெரியார் பேசும் போது, ‘வாழ்க்கையில் நான் பல வரவேற்புகளை பெற்றிருக்கிறேன். சிவகங்கை மாவட்டத்தில் பெற்றது சிறப்பான வரவேற்பு. இந்தச் செருப்பென்ன சாதாரண செருப்பா? 14 ஆண்டுகள் நாட்டையே ஆண்ட செருப்பல்லவா?’ என்று செருப்புத் தோரணம் கட்டிய, காலிகளை வெட்கித் தலைகுனியும்படிப் பேசிய, தந்தை பெரியாரின் தனித்தன்மையை, கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சுட்டிக்காட்டி எழுச்சி உரையாற்றினார்!

‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80 ஆம் ஆண்டு விழா – திறந்தவெளி மாநாடு’’

சிவகங்கை மாவட்ட கழகம் சார்பில், நேற்று (22.08.2026) மாலை 6 மணிக்கு, சண்முகராஜா கலையரங்கத்தில் சுயமரியாதைச் சுடரொளிகளான சிவகங்கை இரா.சண்முகநாதன், காரைக்குடி என்.ஆர்.சாமி ஆகியோர் நினைவாக அமைக்கப்பட்டிருந்த திறந்தவெளி அரங்கில், ‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80 ஆம் ஆண்டு விழா’’ திறந்தவெளி மாநாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை, மாநாட்டிற்குத் தலைமை தாங்கி சிறப்பிக்கும்படி மாவட்டச் செயலாளர் பெரு.இராசாராம் முன்மொழிய,  கழகச் சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா அதை வழி மொழிந்து உரையாற்றினார்.

தொடர்ந்து, மாவட்டத் தலைவர் ச.அனந்தவேல் அனைவரையும் வரவேற்றுச் சிறப்பித்தார். இராம நாதபுரம் மாவட்டத் தலைவர் கே.எம்.சிகாமணி, சிவ கங்கை தி.மு.க. வடக்கு ஒன்றியச் செயலாளர் திருமலை ஆ.முத்துராமலிங்கம், கழக பொதுக்குழு உறுப்பினர் மணிமேகலை சுப்பையா, மாவட்டக் காப்பாளர் வழக்கு ரைஞர் ச.இன்பலாதன் மாநாட்டை தொடங்கி வைத்தும், காரைக்குடி மாவட்ட காப்பாளர் சாமி.திராவிடமணி தந்தை பெரியார் அவர்களின் படத்தை திறந்து வைத்தும் உரையாற்றினர்.

காரைக்குடி மற்றும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 89 சுயமரியாதைச் சுடரொளிகளின் பட்டியல்!

மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் மாநாட்டை ஒருங்கிணைத்தும், இயக்கப் புத்தகங்களை அறிமுகம் செய்வித்தும், மாநாட்டில் ஒளிப்படங்களுடன் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த, காரைக்குடி மற்றும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 89 சுயமரியாதைச் சுடரொளிகளின் பட்டியலை வாசித்தும் சிறப்பித்தார்.

காரைக்குடி மாவட்டத் தலைவர் ம.கு.வைகறை, மாவட்டச் செயலாளர் சி.செல்வமணி, மாவட்டத் துணைத் தலைவர் ஜெ.தனபாலன், மானாமதுரை நகர தி.மு.க. செயலாளர் பொன்னுசாமி, இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் மண்டபம் முருகேசன், பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெயலட்சுமி திராவிடமணி, இரா.புகழேந்தி, காரைக்குடி மாவட்ட துணைத் தலைவர் தேவகோட்டை கொ.மணிவண்ணன், மாநாட்டில் கழகக் கொடியை ஏற்றி வைத்த பெரியார் பெருந்தொண்டர் வேம்பத்தூர் க.வீ.ஜெயராமன், மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் திருப்புவனம் ராசாங்கம் ஆகியோர் முன்னிலை வகித்துச் சிறப்பித்தனர்.

முன்னதாக நிகழ்விடத்துக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் எழுச்சிகரமான வரவேற்பு வழங்கப்பட்டது. தோழர்கள் புடை சூழ சுயமரியாதைச் சுடரொளிகளின் படங்கள் அடங்கிய பதாகையைப் பார்வையிட்டார். முன்னதாக, சுயமரியாதைச் சுட ரொளிகள் பதாகையை திறந்து வைத்த, கழகச் சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் உரையாற்றினார்.

தொடர்ந்து, மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் சார்பில் கழகத் தலைவருக்கு சிறப்புச் செய்யப்பட்டது மாநாட்டு ஏற்பாட்டாளர்கள், கழகப் பொறுப்பாளர்கள் பெரியார் பெருந்தொண்டர்கள் ஆகியோருக்குக் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மரியாதை செய்வித்தார்.  தொடர்ந்து உள்ளூர் பிரமுகர்கள் கழகத் தலைவருக்கு ஒன்றன்பின் ஒன்றாக வந்து மரியாதை செய்தனர். பொதுமக்கள் இயக்கப் புத்தகங்களை வாங்கிக் கொண்டு வந்து கழகத் தலைவரிடம் கையெழுத்து கேட்டு வாங்கிச் சென்றனர்.

முன்னதாக 1946 இல் தந்தை பெரியாருக்கு, சிவகங்கை மாவட்டத்தில் செருப்புத் தோரணம் கட்டி வரவேற்பு அளித்த அதே மதுரை முக்கில், இன்றைய கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு, மாவட்டக் கழகத்தின் சார்பில் மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து மாநாட்டு அரங்குக்கு வருகிற கடைவீதி சாலைகளின் இருபுறமும் கழகக் கொடிகள் கட்டப்பட்டு, கழகத் தலைவரை வரவேற்கும் விதமாக காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்தன. ஆங்காங்கு மாநாட்டை விளம்பரம் செய்யும் விதமாக பதாகைகளும் கட்டப்பட்டிருந்தன. நிகழ்வில், ஏராளமான காவல்துறையினரும் தங்கள் கடமையில் ஈடுபட்டிருந்தனர். நிறைவாக, இரவு 8.15 மணிக்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், தலைமை உரை வழங்கினார்.

கழகத் தலைவர் உரை

அவர் தமது உரையில், சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டி ருக்கும் சுயமரியாதைச் சுடரொளிகளின் பதாகையைச் சுட்டிக்காட்டி, ‘எதிர்ப்புகளை எல்லாம் துச்சமாக கருதி, தந்தை பெரியார் அவர்கள் எப்படியெல்லாம் பாடுபட்டார்கள்’ என்பதை பெருமிதத்துடன் நினைவு கூர்ந்தார். தொடர்ந்து அவர், ‘‘ஜாதிப்பட்டத்தை போட்டால் தான் பெருமை என்று கருதப்பட்ட காலத்தில், அதையெல்லாம் மாற்றுவதற்கு இந்தியாவிலேயே ஓர் இயக்கம் நடந்தது என்றால்… அது சுயமரியாதை இயக்கம் தான்! பெரியார் தான்!’’ என்று, பலத்த கைதட்டல்களுக்கிடையே அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்தார்.

நல்ல பெயர் எடுக்கணும்!

இப்போது இருக்கும் தமிழ்நாடு அரசு, கடந்த ‘திராவிட மாடல்’ அரசு மக்கள் நலத்திட்டங்களுக்கு வைத்த பெயர்களை மாற்றுகிறது என்று சொல்கி றார்கள். பெயர்களை மாற்றினால், எங்கள் தலைவர்கள், அய்யய்யோ… என்று தூக்கு மாட்டிக்கொண்டு சாகப் போகிறவர்கள் அல்ல. அதை அவமானமாகவும் கருத மாட்டார்கள். அதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன். எம்.ஜி.ஆர். வெற்றி பெற்றவுடன், கலைஞர் பெயரில் வைத்திருந்த திட்டங்களின் பெயர்களை மாற்றிவிட்டார். அப்போது, செய்தியாளர்கள் கலைஞரிடம் இதுபற்றிக் கேட்டனர். கலைஞர், கோபம் கொள்ளவில்லை. அவர் ஈரோட்டுக் குருகுலத்தில் படித்தவர். ஆகவே, சிரித்துக்கொண்டே சொன்னார். ‘பெயரை எடுத்துவிட்டார். அவ்வளவுதானே? எனது நண்பர் தான் எம்.ஜி.ஆர். அவர், வெற்றி பெற்றவுடன், ‘நான் எப்படி ஆட்சி செய்ய வேண்டும்’ என்று யாரையாவது கேட்டிருப்பார். ‘நல்ல பெயரை எடுக்கணும்’ என்று அவர்கள் சொல்லியிருப்பார்கள். இதை, எம்.ஜி.ஆர். தவறாகப் புரிந்து கொண்டுவிட்டார்’ என்று, கலைஞர் சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டார். அவ்வளவு தானே தவிர, வேறு ஒன்றும் இல்லை. காரணம், இது பெயருக்காக இருக்கிற இயக்கமல்ல! கொள்கைக்காக இருக்கிற இயக்கம்! எந்த தியாகத்துக்கும் தயாராக இருக்கிற இயக்கம்!
(சிவகங்கை மாநாட்டில்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், 22.08.2026)

அந்தக் காலத்திலிருந்து இந்த காலத்துக்கு வந்து, கடந்த ‘‘திராவிட மாடல்’’ ஆட்சியில், மேனாள் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களால், ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க, ஓய்வு பெற்ற நீதியரசர் கே.என்.பாட்ஷா அவர்கள் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது’’ என்பதைச் சுட்டிக்காட்டி, ‘‘இதன் வேர் எங்கே இருக்கிறது? என்றறொரு ஆழமான கேள்வியைக் கேட்டார். 1929 ஆம் ஆண்டில் நடைபெற்ற, ‘‘செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க முதல் மாகாண மாநாடு தான் அந்த வேர்’’ என்பதை உரத்த குரலில் பதிலாக சொன்னார். ‘‘அந்த மாநாட்டில், இதே சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராமச்சந்திரனார்தான் ஜாதி ஒழிப்புப் புரட்சிக்கு 97 ஆண்டுகளுக்கு முன்பு வித்திட்டவர்களுள் ஒருவர்’’ என்ற‌ அரிய‌ உண்மையைக் கோடிட்டுக் காட்டினார்.

தொடர்ந்து, ‘‘இராமச்சந்திரன் சேர்வை என்ற நான் இனிமேல், ராமச்சந்திரன்! ஈ.வெ.இராமசாமி நாயக்கர் என்ற நான் இனிமேல், ஈ.வெ.இராமசாமி! சவுந்தரபாண்டியன் நாடார் என்னும் நான் இனிமேல் சவுந்தர பாண்டியன்!’’ என்று, ஜாதியின் அடிவேரில் வெந்நீரை ஊற்றிய தந்தை பெரியாரின் புரட்சியை எடுத்துரைத்தார். தொடர்ந்து, ஜாதியின் கொடுமை எத்தகையது என்பதை இன்னமும் அழுத்தமாக குறிப்பிட விரும்பிய கழகத் தலைவர், மதுபோதை, பதவி போதை, சினிமா போதை, கைப்பேசி போதை ஆகியவை மிகவும் ஆபத்தானவை. அதைவிட ஆபத்தானவை ஜாதி, மத போதை என்று உவமித்துக் காட்டி, எளிமையாகயும், அதேசமயம் ஆழமாகவும் புரிய வைத்தார்.

திராவிடர் கழகம்

தொடர்ந்து பேசிய அவர் 1974 ஆம் ஆண்டில் சிவகங்கையில் கற்றறிந்த வழக்குரைஞர்கள் மத்தியி லேயே இரண்டு தண்ணீர் பானைகள் இருந்த ஜாதிக் கொடுமையை எடுத்துரைத்து,  சுயமரியாதை இயக்கத்தின் தொண்டராக இருந்த இராமச்சந்திரனார் (சேர்வை) அவர்களின் மகன் வழக்குரைஞர் இராமசுப்பிர மணியம் அவர்கள் வேதனையுடன் எழுதி இருப்பதை, வாசித்துக் காட்டி, ஜாதியின் கொடுமையைப் புரிய வைத்தார். மேலும் அவர், ‘‘இதே இரட்டை தண்ணீர் பானையை இன்றைக்கு வைத்தால் நாம் விட்டு விடுவோமா? இந்த மாற்றம் எப்படி நடந்தது? இங்கே தான் இருக்கிறார் பெரியார்! பெரியார்! பெரியார்!’’ என்று மும்முறை முழங்கி, மக்களை உணர்ச்சி வசப்பட வைத்தார்.

14 ஆண்டுகள் நாட்டையே ஆண்ட செருப்பல்லவா?

மேலும் அவர், ‘‘இதே சிவகங்கையில் 1946 இல், மதுரை முக்கு சாலையில் நடைபெற்ற மாநாட்டுக்கு, தந்தை பெரியார் – அறிஞர் அண்ணா ஆகியோரை சாரட் வண்டியில் ஏற்றி கொண்டு, தோழர்கள் வருகிறார்கள். அன்றைக்கு காங்கிரசில் இருந்த ஸநாதனிகள் சிலர் சாரட் வண்டியில் வருகிற பெரியாரின் தலையில் இடிக்குமாறு, பழைய செருப்புகளைத் தோரணமாகக் கட்டி தொங்கவிட்டிருந்தனர். கருஞ்சட்டைத் தோழர்கள் கொதித்துப் போய், அதை அகற்ற முற்பட்டபோது, தந்தை பெரியார் அமைதியாக அவர்களைத் தடுத்து விட்டார். பின்னர் அவர் தனது உரையில் அதைப்பற்றிக் குறிப்பிட்டார். அதாவது, ‘வாழ்க்கையில் நான் பல வரவேற்புகளை பெற்றிருக்கிறேன். சிவகங்கை மாவட்டத்தில் பெற்றது சிறப்பான வரவேற்பு! ஊரிலிருக்கும் பழைய செருப்புகளையெல்லாம் தேடித்தேடி எடுத்து வந்து, என்மீதுள்ள அக்கறையின் காரணமாக தோரணமாகக் கட்டியிருக்கிறார்கள். இந்தச் செருப்பென்ன சாதாரண செருப்பா? 14 ஆண்டுகள் நாட்டையே ஆண்ட செருப்பல்லவா?’’ என்று சொல்லி, அந்த ஸநாதனிகளை வெட்கி தலை குனிய வைத்த, புதுமை வரலாற்றை பெருமையுடன் குறிப்பிட்டார்.

‘‘இந்து மதம் எங்கே போகிறது?’’

அதைத் தொடர்ந்து, ‘நீட்’ தேர்வு மற்றும் உயர் ஜாதி ஏழைகளுக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு ஆகியவற்றைப் பற்றி பேசினார். அதற்குக் காரணமாக இருப்பதும் ஜாதி தான் என்பதை நினைவூட்டி, அந்த ஜாதியின் வேர் எங்கிருந்தது எங்கிருந்து வந்தது என்ப தைப் புரிய வைப்பதற்காக, அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய, ‘‘இந்து மதம் எங்கே போகிறது?’’ என்ற புத்தகத்தை வாசித்துக் காட்டி, ஆரியர்கள் வந்தேறிகளாக வந்தனர் என்பதையும், அவர்கள் வரும்போது மனுஸ்மிருதியை கையோடு கொண்டு வந்தனர் என்பதையும், அந்த மனுஸ்மிருதிதான் ஜாதிக்கட்டமைப்பை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறது என்பதையும், தரவுகளுடன் எடுத்துரைத்து, தமது உரையை நிறைவு செய்தார். நிறைவாக, காரைக்குடி மாவட்டச் செயலாளர் சி.செல்வமணி நன்றியுரை கூறி, நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

பங்கேற்றோர்

நிகழ்ச்சியில், பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் வைகை.பிரபாகரன், மாவட்டத் தொழிலாளர் அணித் தலைவர் மு.தமிழ்வாணன், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் ம.கோகுல், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மீனாட்சியம்மாள், பெரியார் பெருந்தொண்டர் மானாமதுரை மகேந்திரராசன், காரைக்குடி மாநகரத் தலைவர் ந.ஜெகதீசன், பகுத்தறி வாளர் கழக மாநில அமைப்பாளர் ஒ.முத்துக்குமார் உள்ளிட்ட ஏராளமான இயக்கத் தோழர்களும், பொது மக்களும் கலந்து கொண்டு, கழகத் தலைவர் ஆசிரியர் உரையைக் கேட்டு, பயன் பெற்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *