எதிர்நீச்சலில் வளரும் இயக்கம்!

3 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

தந்தை பெரியார் தந்த சுயமரியாதைக் கொள்கைகள் என்பவை, மனித நேயர்களுக்கு மிக எளிமையானது! இரண்டே சொற்களில் “அனைவருக்கும் அனைத்தும்” – அவ்வளவுதான்! அதற்கு எவற்றைக் கைக் கொள்ள வேண்டும் என்று இன்னும் கொஞ்சம் விரித்துச் சொன்னால் நான்கே சொற்களில் “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு” – அவ்வளவே! சரியாகத் தானே இருக்கிறது – இதில் யாருக்கு என்ன பிரச்சினை இருக்க முடியும்? என்றுதான், எல்லோருக்கும் தோன்றும்.

ஆனால், இவற்றை அடைவதற்கான பாதையில் தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும் கடந்து வந்திருக்கும் காட்டாறுகள் எவ்வளவு? நீந்திக் கடந்திருக்கும் நெருப்பாறுகள் எவ்வளவு? புரட்டிப் போட்டிருக்கும் பெரு மலைகள் எத்தனை எத்தனை? அப்பப்பா! எண்ணிப் பார்க்கப் பார்க்க மலைப்பே மிஞ்சுகிறது.

தந்தை பெரியாரின் பொது வாழ்க்கை தொடங்கிய நாளிலிருந்து, காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த தடைகளைத் தகர்த்தார்; காங்கிரஸ் கட்சிக்குள் இருந்தபடியே ‘‘இராமாயணத்தையும், மகாபாரதத்தையும் கொளுத்தினால் என்ன?’’ என்று முழக்கமிட்டார்; குருகுலத்தில் இருந்த பாரபட்சத்தை நொறுக்கினார்; வைக்கத்தில் கோயிலைச் சுற்றிய தெருக்களில் நடப்பதற்குக் கூட மறுக்கப்பட்டிருந்த உரிமைக்காக, மாநிலம் கடந்து போராடி மனித உரிமையைப் பெற்றுத் தந்தார்; சிறைப்பட்டாலும், போராட்டத்தை வெற்றி பெறவைத்தார். வகுப்புரிமையைத் தர காங்கிரஸ் பார்ப்பனர்கள் ஒப்ப மாட்டார்கள் என்பதுணர்ந்து அங்கிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டார்.

கட்டறுத்துக் கிளம்பிய அந்தப் பெரு நெருப்பு, மனித சமத்துவத்திற்குத் தடைகளாக இருந்த அத்தனையையும் சுட்டெரித்தது. கோயில் தெருக்களில் இருந்து போராட்டத்தை, கோயில் நுழைவை நோக்கி நகர்த்தினார். சுயமரியாதை இயக்கத்தினர் ஈரோடு கோயிலுக்குள்ளேயே மூன்று நாட்கள் சிறைவைக்கப்பட்டனர்; திருச்சி மலைக்கோட்டை படிகளில் உருட்டிவிடப்பட்டனர்; தாக்குதல்களுக்கு உள்ளாகினர்; வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்டனர். ஜாதி ஆதிக்கத்திற்கு எதிராகக் கருவறை வரை அவர் போராட்டம் நடந்தது. அரசோ, நீதிமன்றமோ, காலிகளோ, கூலிகளோ எவர் வரினும் கலங்கவில்லை பெரியார்!

அடிமைத் தனத்தையே பிறவிப் பயனாகக் கருதி வாழ்ந்து வந்த பெண்களுக்கு விடுதலை என்னும் மூச்சுக்காற்றை வழங்கினார். குழந்தைத் திருமணம், குடும்பச் சுமை, கற்பு, பிள்ளைப் பேறு, கைம்மைக் கொடுமை என்று வெந்துகொண்டிருந்த பெண்களுக்குத் தென்றலாய் இந்த பெரியாரின் பெரும்பணிகள், ஆணாதிக்க வாதிகளுக்கு அனலாய் வீசியது. விளைவு – செல்லுமிடமெல்லாம் எதிர்க் கூச்சல்; அவச் சொற்கள்; கல்வீச்சுகள்! எதிர் நின்று மேலும் முழங்கினார் பெரியார்!

’இந்தியச் சுதந்திரம்’ என்றும் ‘மண் விடுதலை’ என்னும் பெயரிலும் பார்ப்பனர் ஆதிக்கம் தொடர, பெரும் பிரச்சாரம் செய்யப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், மக்கள் விடுதலை இல்லாமல் மண் விடுதலை ஏது என்று முழங்கினார். தந்தை பெரியார் எழுப்பிய பொது உரிமைக்கான குரலை, இந்திய விடுதலைக்கு எதிரானது என்று திரித்தனர் ஆரியச் சூழ்ச்சிக்காரர்கள். கொஞ்சமும் மசியவில்லையே பெரியார்! அதனால் என்ன? சுயமரியாதை இல்லாவிட்டால் சுயராஜ்ஜியத்தால் என்ன பயன் என்று உச்சியைப் பிடித்திழுத்துக் கேட்டார்!

“என்னப்பா இது? சமூகத்தின் எல்லா நம்பிக்கைகளையும் எதிர்க்கிறார்; இறுகிப் போயிருந்த எல்லா கட்டமைப்புகளையும் உடைத்து நொறுக்குகிறார். எதிர்ப்புகளைக் கண்டும் அஞ்ச மறுக்கிறார்; அவதூறுகளையெல்லாம் புறங்கையால் ஒதுக்கி விட்டுப் பயணிக்கிறார். என்ன செய்வது?” என்று புரியாமல் பதறியது ஆரியம்.

எத்தனை எத்தனை ஊர்களில் கலவரம் செய்தார்கள்? சிறிதும், பெரிதுமாகப் பிரச்சினைகள் இல்லாமல் ஒரு காலத்தில் நடந்த கூட்டங்களை எண்ணிவிடலாம். சின்னாளப்பட்டி, திருநெல்வேலி, ராஜபாளையம், மதுரை, சிவகங்கை, திருநாகேசுவரம், புதுச்சேரி, கடலூர் என தற்போது “எதிர் நீச்சலில் வென்ற பெரியார்” என்ற தலைப்பில் பயணம் செய்கிறாரே திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் – அவையெல்லாம் சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே! தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் இப்படிக் கூட்டங்களை நடத்த முடியும்.

பெரியார் காலத்துடன் முடிந்ததா இந்த எதிர்நீச்சல்? அன்னை மணியம்மையார் தலைமையில் இயக்கம் நடந்த நான்காண்டுகளில் ‘இராவண லீலா’ முதல் ‘எமர்ஜென்சி’ வரை நொடிக்கு நொடி எதிர்நீச்சல் வரலாறுதானே!

அன்னையார் ஓய்ந்தார் என்று நினைத்தார்கள்; ஆசிரியர் புறப்பட்டார். அந்த வழியில் தான் ராஜபாளையம் மம்சாபுரம் வந்தது;  அந்த வழியில் தான் வடசென்னை ராயபுரம் வந்தது; சேலம் தம்மம்பட்டி வந்தது; திருப்பூர் வந்தது; திருச்சி வந்தது; விருத்தாசலம் வந்தது… பயணம் நிற்கவில்லை!

கைதுகள், சிறைகள், தடையாணைகள் எதுவும் இந்தப் பாதையில் திராவிடர் கழகத்தின் பயணத்தைத் தடுக்க இயலவில்லை; சட்டப்படியும், அறவழிப் படியும் தடைகளைத் தகர்த்துக் கொண்டே பயணிக்கிறது கழகம். அந்தப் பாதையில் இன்னும் பலரும் பயணித்துக் கொண்டுதான் இருக்கின்றனர் – இங்கு மட்டுமல்ல – இந்த நாடு முழுவதும்!

எதிர்நீச்சல் தான் இந்த இயக்கத்தின் வரலாறு – அதுவும் நெருப்பாற்றில் தான் அந்தப் பயணம்! அதற்கு என்றைக்கும் தீராத பெரியார் என்னும் பேராற்றல் தந்த விடுதலை உணர்ச்சிதான் உந்துசக்தி!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *