செங்கல்பட்டு, ஆக.17- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2, 2ஏ முதல் நிலைப் போட்டித் தேர்வுக்கு செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்புகள் வரும் 18ஆம் தேதி தொடங்கப்படுகின்றன.
செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மய்யத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் பல்வேறு அரசு போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வுக்கு தயாராகும் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த போட்டித் தேர்வாளர்களுக்காக இந்தப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. வரும் 18ஆம் தேதி தொடங்கும் பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் காலை 10 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை நடைபெறும்.
இப்பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ள போட்டித் தேர்வர்கள் தங்களது ஒளிப்படம், ஆதார் அட்டை நகலுடன் செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்தின் தரைதளத்தில் உள்ள டி-பிளாக்க்கில் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மய்யத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம். மேலும், பயிற்சி வகுப்புகள் தொடர்பான விவரங்களுக்கு 044-27426020, 9499055895, 9486870577, 9344738148 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
