கோப்புகள் தேங்காமல் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்! அதிகாரிகளுக்கு சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அறிவுறுத்தல்!

சென்னை, மே 13- தமிழ்நாடு முதலமைச்சரின் தூய்மையான, வெளிப்படையான நிர்வாகத்தைப் பேணும் வகையில், திட்ட அனுமதி உள்ளிட்ட எந்த மனுக்கள் தொடர்பான கோப்புகளும் இனி காரணமின்றி மேசைகளில் தேங்கக்கூடாது என சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் பிரகாஷ் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் ஜி.பிரகாஷ் துறை அதிகாரிகளுக்கு விடுத்துள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாடு முதலமைச்சரின் பதவி யேற்பு விழாவின்போது வலியுறுத்தப்பட்ட தூய்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாக நடைமுறைகளை பேணும் வகையில், பொதுமக்களுக்கு சேவை வழங்கும் பணிகளில் எந்தவொரு தடை, தாமதமும் ஏற்படாமல் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் அனைத்து அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
அதன்படி, திட்ட அனுமதி, பணி நிறைவுச் சான்றிதழ், லே-அவுட் ஒப்புதல், மறு வகைப்பாடு உள்ளிட்ட மனுக்கள் குறித்த கோப்புகளை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும்.
தொழில்நுட்ப ரீதியிலான சிக்கல்கள், சட்டப் பிரச்சினைகள் அல்லது துறை ஒருங்கிணைப்பு சிரமங்கள் காரணமாக கோப்புகள் நிலுவையில் இருந்தால், அவற்றின் நிலை குறித்து திங்கள் கிழமைகளில் நடத்தப்படும் துறை ரீதியிலான ஆய்வுக் கூட்டங்களில் விளக்கமளித்து விரைந்து தீர்வு காண வேண்டும்.
இனி எந்த மனுவோ, கோப்புகளோ காரணமின்றி மேசைகளில் தேங்கக் கூடாது. சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்கள் நாள்தோறும் கோப்புகளை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, அதிகாரிகள் நேர்மையுடனும், பாரபட்சமின்றியும், வெளிப்படைத் தன்மையுடனும், லஞ்ச லாவண்யங்களுக்கு இடம் கொடுக்காமல் பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் செயல்பட வேண்டும்.
துறையின் எந்த நிலையிலும் தேவையற்ற கால விரயம், சுணக்கம், கோப்புகள் தேக்கம் இருக்கக்கூடாது. முறைகேடு மற்றும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தலில் ஈடுபடும் அதிகாரிகள், ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *