சாம்ராஜ்நகர், ஆக.16 கருநாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் காவிரி வனவிலங்கு சரணாலயத்தின் ஷாக்யா வனப்பகுதியில் நடந்த என்கவுண்டரில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இறந்தவர்களின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்திய நிலையில், காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர்.
வனப்பகுதிக்குள் மான் வேட்டையாடி இறைச்சியைப் பிரித்துக் கொண்டிருந்த கும்பலை வனத்துறையினர் சுற்றி வளைத்ததாகவும், அப்போது அவர்கள் நாட்டுத் துப்பாக்கியால் வனத்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதால், தற்காப்புக்காக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்றும் கருநாடக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வனத்துறைக்கு எதிராக மக்கள் போராட்டம்
ஆனால், கருநாடகா வனத்துறையால் சுட்டுக் கொல்லப் பட்டவர்கள் வேட்டையாடச் செல்லவில்லை என்றும், காணாமல் போன மேய்ச்சல் மாடுகளை தேடிச் சென்றவர்கள் என்றும் இருட்டி விட்டதால் வனப்பகுதியில் தூங்கிக் கொண்டிருந்தார்கள் என்றும், அவர்களை என்கவுண்டரில் கொன்றுவிட்டதாகவும் கூறி அவர்களது உறவினர்களும், கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கருநாடகா வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட 3 பேரும் தமிழ்நாட்டை ஒட்டியுள்ள சாம்ராஜ்நகர் மாவட்டம் தோமையார்பாளையம், மாரியமங் கலம் பகுதியைச் சேர்ந்த தமிழர் கள். இறந்தவர்களின் உறவினர்கள் கொள்ளேகால், ஹனூர், தோமையார் பாளையம், ஜகன்னாத தொட்டி உள்ளிட்ட இடங்களில் உள்ள வனத்துறை அலுவலகங்களை அடித்து நொறுக்கினர்.
இந்த என்கவுண்டர் சம்பவத்தை கண்டித்து 100-க்கும் மேற்பட்டோர் மைசூர், மேட்டூர், சத்தியமங்கலம் ஆகிய இடங்களுக்கு செல்லும் சாலைகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
உரிய நியாயம் வேண்டும்
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், “கொல்லப்பட்ட 3 பேரும் மாடு மேய்க்கச் சென்றவர்கள். அவர்களை மான் வேட்டைக்கு சென்றதாக சந்தேகப்பட்டு வனத்துறையினர் நெஞ்சில் சுட்டு கொன்றிருக்கிறார்கள். உயிரிழந்த 3 பேருக்கும் உரிய நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் நடத்துவோம். சம்பந்தப்பட்ட வனத்துறையினரை பணி நீக்கம் செய்வதுடன், அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.
கருநாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார், “இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர்கள் நடத்திய தாக்குதலில் வனத்துறையை சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார். கொல்லப்பட்டவர்களிடம் இருந்து 2 நாட்டு துப்பாக்கிகள், மான் இறைச்சி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு சாம்ராஜ்நகர் மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்த் தெரிவித்துள்ளார்.
தடையடி நடத்திக் கலைத்தனர்
இந்நிலையில், ஹனூரில், வனத்துறை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மூவரின் உடல்களை வாங்க மறுத்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் நிலையத்தையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களை கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் கூறியும் அவர்கள் கலைந்து செல்லாததால் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்துள்ளனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
