சீனா, ஆக.16 சீனாவின் ஹுபே மாகாணத்தில் உள்ள டோங்ஃபு சோதனை மய்யத்தில் ‘மேக்லெவ்’ அதிவேக ரயிலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்தச் சோதனையின் முடிவில், சுமார் 1.1 மெட்ரிக் டன் எடை கொண்ட சோதனை வாக னம் வெறும் மணிக்கு 800 கி.மீ. வேகத்தை எட்டியதாக தெரிவிக் கப்பட்டுள்ளது. இது அதிவேக ரயில் தொழில்நுட்பத்தில் முக் கியமான சோதனைச் சாதனையாக பார்க்கப்படுகிறது.
பொதுவாக, பயணிகள் விமானங்களின் வேகம் மணிக்கு சுமார் 800 முதல் 900 கி.மீ. வரை இருக்கும். ஆனால், இந்த மேக்லெவ் தொழில்நுட்பத்தின் மூலம் தரையில் விமான வேகத்தில் பயணிக்கும் ரயிலை உருவாக்கும் நோக்கில் சீனா செயல்பட்டு வருகிறது. வழக்கமான ரயில்களைப் போல தண்டவாளத்தின் மீது சக்கரங்கள் உராய்ந்து செல்லாமல், சக்திவாய்ந்த மின்காந்த விசையைப் பயன்படுத்தி ரயில் தண்டவாளத்திலிருந்து சிறிது உயரத்தில் மிதந்தபடியே இயக்கப்படுகிறது. இதனால் ரயிலுக்கும் தண்டவாளத்துக்கும் இடையே நேரடி தொடர்பு ஏற்படாது. இதன் காரணமாகவே இது ‘பறக்கும் ரயில்’ என்று அழைக்கப்படுகிறது.
இந்த அதிவேக தொழில்நுட்பம் எதிர்காலத்தில் முழுமையான பயணிகள் போக்குவரத்துக்குப் பயன்பாட்டுக்கு வந்தால், பயண நேரங்கள் மிகப்பெரிய அளவில் குறையக்கூடும். உதாரணமாக, சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு வழக்கமான ரயில் அல்லது சாலைப் பயணத்தில் பல மணி நேரம் ஆகும் நிலையில், மணிக்கு 800 கி.மீ. வேகத்தில் இயங்கும் ரயில் நடைமுறைக்கு வந்தால், இந்தப் பயணத்தை சுமார் ஒரு மணி நேரத்திற்குள் மேற்கொள்ளும் வாய்ப்பு உருவாகலாம். தற்போது இது சோதனை மற்றும் ஆராய்ச்சி கட்டத்திலேயே உள்ளது. தொழில்நுட்பம் முழுமையாக மேம்படுத்தப்பட்டு, பாதுகாப்பு மற்றும் நடைமுறைச் சாத்தியக்கூறுகள் உறுதி செய்யப்பட்ட பின்னரே பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும். சீனாவில் உருவாக்கப்பட்டு வரும் இந்த அதிவேக மேக்லெவ் தொழில்நுட்பம் வெற்றிகரமாக நடைமுறைக்கு வந்தால், எதிர்காலத்தில் மற்ற நாடுகளுக்கும் பரவும் வாய்ப்பு உள்ளது. அப்போது விமானப் போக்குவரத்துக்கு மாற்றாக அதிவேக தரைவழிப் போக்குவரத்து உருவாகும் சூழல் ஏற்படலாம்.
