குலசை விண்வெளி ஆய்வு மய்யத்தில் தனியார் மயமாக்கலா? ஒன்றிய பா.ஜ.க. அரசு தன் முடிவை மாற்றுமா?

சிறப்பு புத்தக சலுகைகள்

கி.இரா.

இந்திய நாட்டின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் 2ஆவது ராக்கெட் ஏவுதளம் தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் அமைக்கப் பட்டு வருகின்றது. இவ்வூரினை குலசை என்றும் மக்கள் அழைப்பர். இஸ்ரோவின் நிர்வாகத்தில் ஆந்திர மாநிலம் சிறீ ஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மய்யம் உள்ளது. அங்கு ஏற்கெனவே ஒரு ராக்கெட் ஏவுதளம் இருக்கின்றது. இங்கிருக்கின்ற எஸ்எஸ்எல்வி, பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி போன்ற ராக்கெட்டுகளைக் கொண்டு இந்தியாவின் செயற்கைக் கோள்கள் ஏவப்பட்டு வருகின்றன. இதர நாடுகளின் செயற்கைக் கோள்களும் ஏவப்பட்டுள்ளன.

ஒன்றிய அரசின் முடிவு

உலக அளவில் விண்வெளி ஆராய்ச்சித் துறை வளர்ச்சிப் பெற்று வருகின்ற வேகத்தைக் கண்டும், இஸ்ரோ விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் கிடைத்த முடிவுகளின்படியும் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதென ஒன்றிய அரசு ஒரு முடிவுக்கு வந்தது.

ஆனால் அவ்வாறு அந்த குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில் பல காரணங்களைச் சொல்லி ஒன்றிய அரசு காலம் கடத்தியது. தூத்துக்குடித் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி நாடாளுமன்றத்தில் இத்திட்டத்தினைப் பற்றி அழுத்தமாகக் குறிப்பிட்டுப் பேசி வந்தார். கோரிக்கையை வற்புறுத்திப் பிரதமர் மோடிக்கும், சம்பந்தப்பட்டவர்களுக்கும் கடிதங்கள் எழுதி வந்தும், கண்காணிப்புச் செய்தும் அக்கறை காட்டினார். தமிழ்நாட்டின் இதர நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது கவனத்தை இதில் செலுத்தி வந்தனர்.

‘திராவிட மாடல்’ ஆட்சியின் அக்கறை

தமிழ்நாடு – ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்குத் தேவையான நிலங்களைச் சீரமைத்துத் தருகின்ற பணியினைத் துரிதப்படுத்தினார். முழுமையான நிர்வாக உள்கட்டமைப்புக்குத் தேவையான ஆதரவினை வழங்கி, மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்ட அனுமதிகளை உடனுக்குடன் வழங்கினார். விண்வெளித் துறை சார்ந்த இந்த மாபெரும் திட்டம் தமிழ்நாட்டிற்கு வருவதை வரவேற்று, அதற்கானப் பணிகளுக்குத் தேவையான ஒத்துழைப்பு அத்தனையையும் ‘திராவிட மாடல்’ அரசு முழுமையாகத் தந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழர் தலைவர் ஆசிரியரின் உரிமைக் குரல்!

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டுதலில் தமிழர் உரிமைக்காக முதலில் களங் காணுகின்ற உரிமைப் பேரியக்கம்தான் திராவிடர் கழகம். குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப் படுவதற்குத் தொடர்ந்து குரல் கொடுத்தது. கழகப் பொதுக்குழு, கழக மாநாடுகளில் இத்திட்டத்தினை முன்னிலைப்படுத்தித் தீர்மானங்கள் நிறைவேற்றி வரப்பட்டன. பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இத்திட்டத்தின் அவசியம் பற்றிக் குரல் கொடுத்து வாதாடுவதற்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஆவன செய்து வந்தார்.

இதன்படி ராக்கெட் தளம் அமைக்கப்படுகின்ற குலசேகரன் பட்டினம் தூத்துக்குடியில் இருந்து 55ஆவது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது ஒரு கடற்கரைப்பட்டினம் ஆகும். ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகின்ற இந்தப் பகுதி பூமத்திய ரேகைக்கு மிகவும் அருகில் உள்ளது. மேலும் இப்பகுதி சூரியனின் சுற்றுப் பாதைக்கு ஒத்திசைந்து, ராக்கெட்டுகள் ஏவப்படுவதற்கு வாய்ப்பான மிகவும் அரிதான வழிப் பாதை ஒன்றைத் தருகின்றது.

விண்வெளி ஆய்வுக்கு உகந்த இடம்

இஸ்ரோவின் சிறீ ஹரிகோட்டாவிலிருந்து ஏவப்படுகின்ற ராக்கெட்டுகள் இலங்கையின் மீது பரப்பதைத் தவிர்ப்பதற்காக வளைந்து செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால், குலசேகரன்பட்டினத்திலிருந்து ஏவப்படுகின்ற ராக்கெட்டுகள், தெற்கு நோக்கிப் பயணிக்கும்போது, இந்தியப் பெருங்கடலுக்கு மேல் நேரடியாகச் செல்லக் கூடிய வாய்ப்பு உள்ளது. குறைந்த எரிபொருளில் ராக்கெட்டுகளைச் செலுத்தி செயற்கைக் கோள்களை ஏவுவதற்கு இது ஏதுவான பகுதியாகும். அத்தகைய ராக்கெட்டுகளில் சாதாரணமாக எடுத்துச் செல்வதை விட கூடுதல் எடையோடு அதிகப் பொருள்களை இவற்றில் எடுத்துச்செல்ல முடியும். இந்த ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுவதற்குத் குலசேகரன்பட்டினத்தில் 2,233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப் பட்டது. ரூ.986 கோடி செலவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2027 மார்ச் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு, சிறிய ரக செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன.

அடிக்கல் நாட்டியவர் பிரதமர் மோடி

கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பிரதமர் மோடி இத்திட்டத்தினைத் தொடங்கி வைத்தார். அடிக்கல்லும் நாட்டினார். அப்போது, இஸ்ரோ தயாரித்த ரோகினி ஆர் எச் என்ற சிறிய வகை ராக்கெட் விண்ணை நோக்கி ஏவப்பட்டது. வெற்றிகரமாக நிர்ணயிக்கப்பட்ட வழித்தடத்தில் பயணித்து இலக்கை அடைந்தது. இதற்காகப் பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.

அப்போது விஞ்ஞானி சோம்நாத் இஸ்ரோவின் தலைவர் பொறுப்பில் இருந்து வந்தார். அடிக்கல் நாட்டு விழாவில், அவர் பேசும்போது, “குலசேகரன்பட்டினத்தில் இருந்து ராக்கெட்டுகள் செலுத்தப்படுவதற்கு, சிறீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட்டுகள் செலுத்தும்போது ஆகின்ற செலவில் 10இல் 1 பங்கே ஆகின்றது. இதனால் பொருளாதாரம் மிச்சமாகின்றது. நேரமும் குறைகிறது. இது இந்த ராக்கெட் ஏவுதளத்தின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம்” என்றார். இந்த விண்வெளி ஆய்வு மய்யத்தின் அலுவலகம், ராக்கெட் ஏவுதளம், பராமரிப்புப் பணிமனை ஆகியன உலகத் தரத்தோடு உயரிய கட்டமைப்புடன் அமைக்கப்படுகின்றன. 3 ஹெலிகாப்டர்கள் ஒரே நேரத்தில் இங்கு தரையிரங்க முடியும். அதற்கென நவீன வகையில் ஹெலிபேட் தளங்கள் அமையும்.

அதிர்ச்சி தந்த அறிவிப்பு

இந்நிலையில்தான் தமிழ்நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் செய்தி வெளியானது. இந்திய தேசிய விண்வெளி அங்கீகாரம் மற்றும் மேம்பாட்டு மய்யம் (இன்-ஸ்பேஸ்) ஓர் அறிவிப்புச் செய்தது. இந்த ராக்கெட் தளத்தின் செயல்பாடு பராமரிப்பு நிர்வாகத்தினை தனியார் வசம் ஒப்படைப்பதற்கு ஒப்பந்தம் கோரியுள்ளது.

அவ்வாறு தனியார் வசம் ஒப்படைக்கும்போது, தனியார்கள் தங்களது ராக்கெட்டுகள், செயற்கைக் கோள்களை இந்த ராக்கெட் தளத்தில் ஏவுவதற்கு உரிய வசதிகளை எளிதில் பெறக்கூடும் என்று கூறுகின்றனர். அதனால் இஸ்ரோவின் வருமானம் நல்ல விதத்தில் உயரும் எனவும் கருதப்படுகின்றது.

இஸ்ரோ நிறுவனத்தின் முடிவு

கடந்த 18.7.2026 அன்று இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் – விக்ரம் சிறீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்டது. இந்த ராக்கெட் வெற்றி கரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர்.

தனியார் நிறுவனம் ராக்கெட்டுத் தளத்தில் பணிகளை மேற்கொள்ளும்போது, இதற்காக அந்நிறுவனங்களுக்குத் தேவையான தொழில்நுட்பம் மற்றும் செயல்பாட்டு ஆதரவை இஸ்ரோ நிறுவனம் வழங்க வேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. குலசேகரன்பட்டினம் ராக்கெட் தளத்தில் தனியார் மயமாக்கல் குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறுவது என்ன? ராக்கெட் தளத்தின் செயல்பாடும், நிர்வாகமும் மட்டுமே தனியார் வசம் எனக் கூறுகின்றனர். “மற்றைய நாடுகளைப் போன்று தனியார் நிறுவனங்கள் இந்தியாவிலும் அதிக அளவில் பங்கு பெறுவார்கள். ராக்கெட் ஏவுதளமோ, அதன் உரிமையோ தனியாரிடம் ஒப்படைக்கப்பட மாட்டாது” என்கின்றனர்.

பொதுமக்களின் எதிர்ப்பு

இருந்தும் அந்த ஊர் மக்கள் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். “இந்த ராக்கெட் ஏவு தளத்தைத் தனியாரிடம் ஒப்படைப்பது ஏற்புடையது அல்ல. இஸ்ரோ வேண்டுகோள்படி நிலம் வழங்கியவர்களுக்குத் தருவதாகச் சொன்ன உரிய வேலை வாய்ப்புகள் என்னாவது? இந்த அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பைக் கொடுக்கின்றபோது, எங்களுக்கு முன்னுரிமைத் தர வேண்டும்” என்கின்றனர்.

இஸ்ரோ விஞ்ஞானிகள் அதிருப்தி

இந்த திடீர் முடிவுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் – விண்வெளி ஆர்வலர்கள் மத்தியிலும் கூட, கடும் அதிருப்தியும், எதிர்ப்புகளும் ஏற்பட்டுள்ளனவாம். இஸ்ரோ நிறுவனத்திலிருந்து அண்மைக் காலத்தில் அதிக அளவு பதவி, பணி விலகல் போட்டிப் போட்டுக் கொண்டு நடந்ததும் கவனிக்கத்தக்கது. தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் அங்கு போதிய வேலைவாய்ப்பின்மையால் பிற மாவட்டங்களுக்கும், கேரளம் போன்ற அண்டை மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் செல்வது அதிகரித்து வந்த நிலையில்தான் – தென் மாவட்டங்களைத் தொழில் வளர்ச்சி பெற்றதாக ஆக்குவதற்கு ‘திராவிட மாடல்’ ஆட்சி புதிய தொழிற்பேட்டைகளை அங்கு ஏராளமான அளவில் ஏற்படுத்தியது. அடுக்கடுக்காகப் பல்வேறு திட்டங்கள் வரிசையாகக் கொண்டு வரப்பட்டன.

ஒன்றிய பா.ஜ.க. அரசு முடிவில் மாறுமா?

இதனால் பல ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று கருதப்படும் நிலையில்தான் – பா.ஜ.க. ஒன்றிய அரசு இப்படியொரு முடிவை எடுத்துள்ளது. இராம ஜென்ம பூமி என்று காலம் முழுதும் கூப்பாடு போட்டு வந்த பா.ஜ.க. அதைக் கட்டி முடித்தவுடன் ‘கிருஷ்ண ஜென்ம பூமி’ உள்பட பல கோயில்களைக் கொண்டு பிரச்சினைகளை ஏற்படுத்தி பா.ஜ.க. வாக்கு வங்கியைப் பெருக்கிக் கொள்வதில்தான் தீவிரம் காட்டுகின்றது.

நாட்டின் பெருமைமிக்கத் துறைகளில் ஒன்றாகத் திகழுகின்ற இஸ்ரோ, குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் போன்ற அதன் துணை நிறுவனப் பணிகளையும் தனியார் மயமாக்கத் துணிந்துள்ள ஒன்றிய பா.ஜ.க. அரசு, தமிழ்நாட்டு மக்களும், தமிழ்நாட்டின் உரிமைப் பேணுகின்ற தலைவர்களும், அனைத்துக் கட்சியினரும் காட்டுகின்ற எதிர்ப்புக்குப் பின்பாவது திருந்தி இந்த முடிவைக் கைவிடுவார்களா?

மனம் மாறுவார்களா? ஆவலோடு எதிர்பார்க்கின்றது தமிழ்நாடு!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *