வி.சி.வில்வம்
தமிழர்கள் என்கிற இனத்தை நூற்றுக் கணக்கான ஜாதிகளாகப் பிரித்தார்கள். அதன் காரணமாகவே நாம் இழந்த வரலாறுகள் அதிகம். அதேநேரம் தந்தை பெரியாரின் கடும் முயற்சியால் அத்தனை ஜாதிகளில் இருந்தும் முற்போக்காளர்கள் கிடைத்தார்கள். எத்தனை ஜாதிகள் இருக்கிறதோ அத்தனையில் இருந்தும் “பெரியாரிஸ்டுகள்” உருவானார்கள். இவ்வளவு ஏன் பார்ப்பன இனத்தில் இருந்து கூட வந்தார்கள்.
இதில் அடிப்படைக் கட்டுமானம் கலையாத ஜாதிகள் இன்னும் சில இருக்கின்றன. அதில் “நகரத்தார்” என்று சொல்கிற வகையினரும் உண்டு. எனினும் சுயமரியாதைத் திருமணங்கள், கைம்பெண் திருமணங்கள் என அங்கும் புரட்சிகள் நிகழ்ந்துதான் வந்துள்ளன. அப்படியான இடத்தில் இருந்து நமக்குக் கிடைத்த ஒரு பெரியார் தொண்டர் தான் வீ.முருகப்பன். அவரை இந்த வாரம் சந்திப்போம்!
வணக்கம்! சொந்த ஊர் தேவகோட்டை என்கிறீர்கள், ஆனால் உங்களை இந்த ஊரில் பார்த்ததே இல்லையே?
உண்மைதான்! நான் பிறந்தது தேவகோட்டை என்றாலும், சிறுவயது முதலே தஞ்சாவூர், மகர்நோன்பு சாவடியில் குடியிருந்தோம். எனது தந்தையார் பெயர் வீரப்பன், தாயார் மீனாட்சி. எனக்கு ஓர் அண்ணன், ஓர் அக்கா, ஒரு தம்பி, ஒரு தங்கை என எல்லா உறவும் உண்டு. எனது தந்தையாரிடம் 1920 ஆம் ஆண்டு ஒருவர் 9 ஆயிரம் ரூபாய் கடனாகப் பெற்றுள்ளார். அதைத் திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில், ஒரு கிராமம் அளவிற்கு உண்டான, இடங்களை எனது தந்தையாரிடம் ஒப்படைத்துள்ளார். அந்த இடம் தஞ்சாவூர் அருகே தலவாபாளையம் எனும் கிராமத்தில் இருந்தது.
அந்தக் காலத்தில் பத்திரப் பதிவுகள் இல்லாததால் வாய்மொழி உறுதி அல்லது தாளில் எழுதிக் கொள்ளும் நடைமுறையே இருந்தது. காலம் கடந்த நிலையில் அந்த இடங்களைப் பலரும் ஆக்ரமிப்பு செய்தனர். எனது தந்தையாரும் வழக்குத் தொடர்ந்தார். ஆனால் எங்களால் அந்த இடத்தை மீட்க முடியவில்லை. இதன் காரணமாகவே தஞ்சாவூரில் குடியிருந்தோம்.
தங்களின் கல்வித் தகுதி என்ன? எங்கு பணி செய்தீர்கள்?
அய்ந்தாம் வகுப்பு வரை தஞ்சையிலும், 6 முதல் 11 வரை தேவகோட்டை நகரத்தார் மேல்நிலைப் பள்ளியிலும் படித்தேன். பிறகு 1970 இல் தஞ்சையில் பியூசி முடித்து, சரபோஜி கல்லூரியில் இளங்கலை, முதுகலைக் கணிதம் படித்தேன். இந்த நிலையில் அஞ்சல் அலுவலகத்தில் வேலை கிடைத்தது. சென்னை, தியாகராயர் நகரில் 1978 முதல் 1982 வரை பணி செய்தேன். பிறகு 1982-1984 தஞ்சாவூரிலும், 1984-1986 மேட்டுப்பாளையத்திலும் என மொத்தமாக 7 ஆண்டுகள் அஞ்சலகத்தில் பணிபுரிந்தேன். இந்நிலையில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பி.எட்., படிப்பை அஞ்சல் வழியில் முடித்திருந்தேன். அதனால் ஆசிரியர் பணி எனக்குக் கிடைத்தது.
பட்டதாரி கணித ஆசிரியராக 1986 ஆம் ஆண்டு, ஈரோடு மாவட்டம், காவளிபாளையத்தில் பணியில் சேர்ந்தேன். அங்கு 4 ஆண்டுகள் பணி, பிறகு ஈரோடு புளியம்பட்டியில் 2 ஆண்டுகள், பனையம்பள்ளியில் ஓர் ஆண்டு, பட்டிமணியன்காரன் பாளையத்தில் 2 ஆண்டுகள் எனத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்திலேயே 25 ஆண்டுகள் இருந்துவிட்டேன். ஆக பிறந்தது தேவகோட்டை என்றாலும், பெரும்பாலும் வசித்தது தஞ்சாவூர் மற்றும் ஈரோட்டில்தான்!
பெரியார் கொள்கை தங்களுக்கு எப்போது அறிமுகமானது?
தஞ்சாவூரில் படிக்கும்போது நண்பர் அன்பானந்தம் என்பவர் மூலம் பெரியார் கொள்கை அறிமுகமானது. அவரின் மாமா மாயவரம் வடிவேல் என்பவரும் தஞ்சையில் வசித்தார். அவர் வீட்டிற்குப் போகும்போது ‘விடுதலை’ வாசிக்கத் தொடங்கினேன். பிறகு தஞ்சாவூர், கும்பகோணம் பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகள், மாநாடுகளிலும் பங்கேற்றேன். சக மாணவர்களிடமும் கருத்துப் பரிமாற்றம் செய்வேன். இதனிடையே வாசிப்புப் பழக்கமும் ஏற்பட்டது. முதன்முதலில் என்னைக் கவர்ந்தது “மரண சாசனம்” எனும் நூல்தான். தந்தை பெரியாருக்கு 92ஆவது வயதில், 92 ஆயிரம் செலவு செய்து, தஞ்சை திலகர் திடலில் பிரச்சார வாகனம் கொடுத்தார்கள். அந்தக் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்களை முதன்முதலில் பார்த்தேன்.
பிறகு சென்னை, தியாகராயர் நகர் அஞ்சல் அலுவல கத்திற்கு வேலைக்குச் சென்றதும், வாரம்தோறும் வியாழக்கிழமையில் நடைபெறும் பெரியார் நூலக வாசகர் வட்ட நிகழ்ச்சிக்குத் திடலுக்குச் செல்வேன். தொடர்ந்து 4 ஆண்டுகள் சென்றேன். அப்போது மாணிக்க சண்முகம் என்பவர் பொறுப்பெடுத்து நடத்தினார். திடலுக்குப் போன பிறகு, எனக்குப் புத்தகங்கள் நிறைய அறிமுகமாகின. கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களையும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றேன். ‘விடுதலை’யையும் தொடர்ந்து வாங்கத் தொடங்கினேன்.
ஆசிரியராகப் பொறுப்பேற்ற பிறகு, தங்களின் பகுத்தறிவுப் பணிகள் எப்படி இருந்தன?
ஈரோடு மாவட்டம், சிவகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில், ஆகஸ்ட் 15 சுதந்திர நாளன்று, “பெரியார் ஏன் சுதந்திர நாளைத் துக்கநாளாக அறிவித்தார்?” என விளக்கம் கொடுத்தேன். பள்ளியில் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் பாரதியார் கவிதைப் போட்டிகள் தான் நடத்துவார்கள். சில ஆசிரியர்கள் சேர்ந்து, பாரதிதாசன் கவிதைகளையும் இடம்பெறச் செய்தோம். பள்ளியில் மாணவர்கள் காலையில் கூடுவதற்குப் “பேரவைக் கூட்டம்” (Assembly Meeting) என்று பெயர். ஆனால் அதனை வழிபாட்டுக் கூட்டம் (Prayer Meeting) எனப் பெயர் மாற்றிவிட்டார்கள்.
2004ஆம் ஆண்டு, காஞ்சி சங்கராச்சாரி அவர்கள் கைது செய்யப்பட்ட நேரத்தில், “பசுத்தோல் போர்த்தியப் புலிகள்” எனும் பொருளில் பேரவைக் கூட்டத்தில் சிலேடையாகப் பேசினேன். வகுப்பறையில் நேரம் கிடைக்கும் போது, அறிவியல் ரீதியான கருத்துகளை எடுத்துக் கூறுவேன். ஆண்டு விழா மற்றும் இலக்கிய மன்றக் கூட்டங்களிலும் பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசுவேன்.
நான் பணியாற்றிய பள்ளி முகவரிக்கு, தனிப்பட்ட முறையில் எனக்கு “விடுதலை” வந்தது. அதற்குச் சிலர் எதிர்ப்புத் தெரிவித்ததால் வீட்டு முகவரிக்கு மாற்றினேன். ஈரோடு, பெரியார் மன்றத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பேன். இயக்கக் கூட்டங்கள் மற்றும் புத்தகக் கண்காட்சியிலும் பங்கேற்பேன்.
தங்களின் திருமண வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட கொள்கைச் செயல்பாடுகள் குறித்துக் கூறுங்கள்?
எங்களுக்கு 1982ஆம் ஆண்டு தேவகோட்டையில் திருமணம் நடைபெற்றது. இணையர் பெயர் செண்பகவள்ளி. அவர் எனது கடவுள் மறுப்புக் கொள்கையைத் தவிர்க்க முடியாமலும், மனக்கசப்போடும் எதிர்கொண்டவர். எங்களுக்கு ஒரே மகள். அவர் கோயம்புத்தூரில் வசிக்கிறார். என்னைப் பொறுத்தவரை, கொள்கைகளைச் செயல்படுத்துவதில் நேர்மையோடு நடந்து கொள்வேன். ‘நகரத்தார் குடும்பம்’ என்று சொல்லக் கூடிய நிலையில், தேவ கோட்டையில் மட்டும் சற்றொப்ப 5 ஆயிரம் குடும்பங்கள் இருக்கின்றன. சாஸ்திர, சம்பிரதாயங்களைக் கடைப்பிடிப்பதில் முன்னணியில் இருப்பவர்கள்.
நாத்திகச் சிந்தனையில் நான் 50 ஆண்டுகளாக இருந்து வருகிறேன். என்னைப் பார்ப்பதற்கு வெகு இயல்பாக, சாதாரணமாகவே இருப்பேன். ஆனால் கொள்கையில் கடுகளவும் சமரசம் செய்து கொள்ளமாட்டேன். எண்ணற்ற எதிர்ப்புகள், கோபங்கள், வெறுப்புகள், புறக்கணிப்புகளைச் சந்தித்திருக்கிறேன். ஆனாலும் எனது உறுதித்தன்மை மாறியதே இல்லை. எதிரில் இருந்தவர்கள் தான், நாளடைவில் கோபங்களைக் குறைத்துக் கொண்டனர்.
“எனது வாழ்வில் சடங்குகள் புறக்கணிக்கப்பட்டவை” என்பது தான் எனது தீர்மானம். எந்த மதப் பண்டிகையும் எனக்குக் கிடையாது. புதுத்துணி என்பதற்குப் பேச்சே இல்லை. எனது தாயார் மறைந்த நேரத்தில் கூட, சகோதரர்கள் இறுதிச் சடங்கு செய்தார்கள். நான் கருப்புச் சட்டை அணிந்து வெளியில் அமர்ந்து கொண்டேன். அதுதான் எனது அடையாளம்! அதுவே எனது கொள்கை!
ஓய்விற்குப் பிறகான உங்கள் வாழ்க்கை எப்படிப் போகிறது?
ஆசிரியர் பணியில் இருந்து 2011 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றேன். சற்றொப்ப 32 ஆண்டுகள் அரசுப் பணிகள் முடித்து, சொந்த ஊர் தேவகோட்டைக்கு வந்துவிட்டேன். எனது வாழ்க்கைப் பயணத்தில் ‘விடுதலை’ நாளிதழை நான் தவறவிட்டதே இல்லை. தேவகோட்டை வந்த பிறகு ‘விடுதலை’ வாயிலாகக் காரைக்குடி நிகழ்ச்சிகளை அறிந்து, அங்கு செல்லத் தொடங்கினேன். தோழர்கள் பலரும் அறிமுகமானார்கள். காரைக்குடி சாமி.திராவிடமணி, தேவகோட்டை கொ.மணிவண்ணன் இருவரிடமும் எப்போதும் தொடர்பில் இருப்பேன்.
அண்மைக்காலமாக இணையருக்கு உடல்நிலைச் சரியில்லாமல் மகள் வீட்டில் இருக்கிறார். அவ்வப்போது நானும் சென்று வருவேன். இங்கே வீடு மற்றும் நிர்வாகங்கள் இருக்கிறது. தேவகோட்டை வந்த போது ஆசிரியர் அவர்களைச் சந்தித்தேன். பயனாடை அணிவித்தார்கள். தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் மனதளவில் பாதித்துவிட்டது. இந்த நிலைக் கண்டிப்பாக மாறும்.
தனியாக வசிக்கிறீர்களே, உணவகத்தில் சாப்பிடுவீர்களா?
இல்லை, கடையில் சாப்பிடும் வழக்கமே எனக்குக் கிடையாது. நானே சமையல் செய்து சாப்பிடுவேன். அதுவும் விருப்பமாய் செய்வேன். காலை வேளைகளில் இட்லி, தோசை, இடியாப்பம், அடை, புட்டு, கொழுக்கட்டை என விதவிதமாகச் செய்து சாப்பிடுவேன். இதற்கான மாவும் வீட்டிலேயே அரைத்துக் கொள்வேன். மதியம் காய்கறிகள், கீரைகளுடன் உணவு தயார் செய்வேன். ஆரோக்கியத்தைப் பேணும் பொருட்டு குறைவான இனிப்பு, மசாலாக்கள் சேர்த்து, என்னை நானே பார்த்துக் கொள்வேன்”, எனப் பெரியாரியத் தொண்டருக்கே உரிய சிறப்புடன் வீ.முருகப்பன் கூறினார்.
