பிற இதழிலிருந்து

3 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

தேசியப் பாடல் இந்தியர்களை ஒன்றிணைக்க வேண்டுமே தவிர, அவர்களைப் பிரிக்கக்கூடாது!

இந்தியக் குடியரசை நிறுவியவர்களும், அரசியலமைப்புச் சட்டத்தை உரு வாக்கியவர்களும் இந்தியா தனது பன்முகத்தன்மையை அங்கீகரித்து ஊக்குவித்தால் மட்டுமே நிலைத்திருக்கவும் வெற்றிபெறவும் முடியும் என்பதில் மிகத் தெளிவாக இருந்தனர். அரசியலமைப்பின் முதல் பிரிவே இந்தக் கருத்தை உறு திப்படுத்துகிறது; அது ‘‘இந்தியா அதாவது பாரதம்’’ என்பதை ‘‘மாநிலங்களின் ஒன்றியம்’’ என்று வரையறுக்கிறது. ஒரே ஒரு ஒற்றை அமைப்பாக அல்லாமல், மாநிலங்களின் ஒன்றியமாக உருவாக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கற்பனை செய்த இந்த நாட்டிற்கு ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்கள் இருக்க வாய்ப்புள்ளது. இப்போது செய்ய வேண்டியது என்ன வென்றால், ஓர் உடன்பாடுடைய பரந்த கட்டமைப்புக்குள் உள்ள அனைத்து விதமான கருத்துகளையும் அங்கீகரித்து அவற்றைக் கொண்டாடுவதுதான்; மாறாக, ஒரு கருத்தை மட்டும் திணித்து மற்ற அனைத்தையும் நசுக்க முயல்வது அல்ல.

கெடுவாய்ப்பாக, தற்போது ஒன்றிய நிர்வாகத்தை நடத்துபவர்கள், வேறுபட்ட கருத்துகளைக் கொண்டுள்ளனர்; அத னால்தான் தேசியப் பாடலான ‘வந்தே மாதரத்தை முழுமையாகப் பாடுவதற்கு மாநிலங்களும் மக்களும் எதிர்ப்பு தெரிவிக்கும் செய்திகளை நாம் கேட்கிறோம். சுதந்திரப் போராட்டத்தை வழிநடத்திய மாபெரும் தலைவர்கள், இது நாட்டின் அனைத்து மக்களுக்கும் உரியதாக இருக்க வேண்டும் என்று விரும்பினர்; எனவே, மக்களின் பன்முகத்தன்மையைக் கொண்டாடி,  ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையிலான முழக்கங்களையும் குறியீடுகளையும் அவர்கள் தேர்ந்தெடுத்தனர்.

உண்மைதான், தற்போதைய அர சாங்கத்தை வழிநடத்தும் சங் பரிவார் அமைப்பு அக்காலத்தில் நாட்டைப் பற்றி வேறுபட்ட கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தது. அது ‘இரு தேசக் கொள்கையை’ (two-nation theory) நம்பிப் பரப்பியது; அந்தக் கொள்கை இறுதியில் வெற்றிபெற்றது. ஆனால், மத அடிப்படையில் நாடு பிரிக்கப்பட்ட போதிலும், இந்தியா மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசாகத் தொடரத் தீர்மானித்தது; அதேவேளையில், புதி தாக உருவான அதன் அண்டை நாடு (பாகிஸ்தான்) வேறுபட்ட கருத்துகளைக் கொண்டிருந்தது. இந்த முரண்பாடு பிளவுக்கான விதிகளைக் கொண்டிருந்தது; இருப்பினும், நாட்டின் தலைமை அந்தப் பிளவுகளை விரிவுபடுத்தாமல் கவனமாகச் செயல்பட்டது; மாறாக, அந்த இடைவெளிகளை இணைக்கவே அவர்கள் முயன்றனர். ஆனால், ஒன்றியத்தில் உள்ள பாஜக அரசு அக் காலத்தின் பிளவுபடுத்தும் சித்தாந்தத்தால் இயக்கப்படுகிறது; அதனால்தான் தேசியப் பாடலின் (வந்தே மாதரத்தின்) ஆறு சரணங்களையும் கட்டாயம் பாட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

மக்களின் உணர்வுகளை மதிப்பது ஒரு விஷயம், அவர்களைத் திருப்திப்படுத்த முற்படுவது (appeasement) முற்றிலும் வேறொரு விஷயம். பெரும்பான்மையினரின் முடிவைச் சிறுபான்மையினர் மீது திணிப்பது ஜனநாயகம் அல்ல; அப்படிச் செய்வதாக இருந்தால், இந்தியா ஜனநாயக ஆட்சி முறையைக் கொண்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை. மாறுபட்ட கருத்துகளைக் கொண்டவர்களும் பெரும்பான்மையினரைப் போலவே சம உரிமைகளைப் பெறும் வகையிலான ஒரு கட்டமைப்பிற்குள், கருத்து வேறு பாடுகளை மதிப்பதே ஜனநாயகம் ஆகும். இந்த ஏற்பாட்டைச் சீர்குலைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள், இந்தியக் குடியரசையே சிதைக்கும் முயற்சிகளாகவே அமையும்.

தேசியக் கொடியும் தேசிய கீதமும் அரசியலமைப்புச் சட்டத்தின் பாது காப்பைப் பெற்றுள்ளன; ஆனால் தேசியப் பாடலுக்கு அத்தகைய பாதுகாப்பு இல்லை. அரசியலமைப்புச் சபையால் அங்கீகரிக்கப்பட்ட தேசியப் பாடலுக்குச் சிறப்புப் பாதுகாப்பை அளிப்பது நியாயமான செயலாக இருக்கலாம்; ஆனால், அந்தப் பாதுகாப்பை அதன் இறுதிப் பகுதிக்கும் விரிவுபடுத்துவது, அப்பாடலை மற்ற தேசியச் சின்னங்களுக்கு இணையானதாகக் காட்டும் முயற்சியாகவே அமையும். இது எதிர்ப்பைச் சந்திக்கக்கூடும். காந்தியார், பண்டித ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ் மற்றும் சர்தார் வல்லபாய் படேல் உள்ளிட்ட தேசிய இயக்கத் தலைவர்கள் அப்பாடல் குறித்து ஒரு முடிவை எடுத்ததில் வலுவான காரணங்கள் இருந்தன. அந்த முடிவின் நோக்கத்திற்கு முரணாகச் செயல்படுவது, ஏற்கெனவே உள்ள கருத்து வேறுபாடுகளை மேலும் விரிவுபடுத்தி ஆழமாக்கவே செய்யும்.

சில மாநிலங்கள் தங்கள் சொந்த மாநிலப் பாடல்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றன; வேறு சில மாநிலங்கள் ஒன்றிய அரசின் முடிவை ஏற்காமல், அரசியலமைப்புச் சபையின் (Constituent Assembly) முடிவையே பின்பற்றுகின்றன. தங்கள் விருப்பத்தை மாநிலங்கள் மீது திணிக்கப் புதிய விதிகளையும் ஆணை களையும் உருவாக்குவதற்குப் பதிலாக, ஒன்றிய அரசு அம்மாநிலங்களின் முடிவு களை மதிக்கவேண்டும். மக்களை மேலும் பிளவுபடுத்தாமல், அவர்களை ஒன்றிணைப்பதற்கான வழிகளையும் கார ணங்களையும் அது கண்டறிய வேண்டும்.

‘டெக்கான் கிரானிக்கில்’, தலையங்கம் (13.08.2026)

தமிழில்: சமா.இளவரசன்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *