சட்டமன்றச் செய்திகள் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது!

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஆக. 12- தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தனித் தீர்மானம் இன்று (12.8.2026) நிறைவேற்றப்பட்டது.

ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையறை மசோதா ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் தோல்வியைச் சந்தித்த நிலையில், தற்போது மீண்டும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி நிறைவேற்ற வுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த மசோதாவால் தென் மாநிலங் களில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் நிலவி வரும் சூழலில், இதுகுறித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமை யில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் கடந்த 8.8.2026 அன்று எம்.பி.க்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டுவரப்படும் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்திருந்தார்.

அதன்படி, தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீர்மா னத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் 12.8.2026 அன்று சட்டப்பேரவையில் முன்மொழிந்தார்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்துக்கு பாஜக, பாமக, தேமுதிக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “தமிழ்நாட்டுக்கான பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படும் என்று உள் துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித் துள்ளார். மக்கள்தொகையின் அடிப்படையில் 7.18 சதவிகித விகிதா சார பிரதிநிதித்துவம் தொகுதி மறுவரை யறையில் குறைந்துவிடக்கூடாது என்பதே அதிமுகவின் நிலைப்பாடு.

நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கு எந்த அறிகுறியும் இல்லாத நிலையில், தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழக அரசு அரசியல் காரணங்களுக்காகவும், பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் அவசர, அவசரமாக தனித்தீர்மானம் கொண்டுவந்திருப்பதாகவும் நாங்கள் கருதுகிறோம்” எனத் தெரிவித்தார்.

இந்த தீர்மானத்துக்கு ஆதரவாகப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “தொகுதி மறுவரையறை மசோதாவின் நகலை எரித்து போராட்டம் நடத்தியது திமுகதான். திமுக காட்டிய எதிர்ப்புதான் நாடாளுமன்றத்தில் மசோதா தோற்கடிக்கப்பட்டதற்கு காரணம்.

33 சதவிகிதம் மகளிர் இடஒதுக்கீட்டை திமுக முழுமையாக ஆதரிக்கிறோம். 1971 மக்கள்தொகை அடிப்படையிலேயே மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு கொண்டு வந்த தீர்மானத்தை திமுக வரவேற்கிறது” என்றார்.

பிறகு தொகுதி மறுவரையறை தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இத்தீர்மானத்திற்கு ஆதரவாக தவெக, திமுக, காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சியின் உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகள் எதிர்த்து வாக்களித்தனர். பிறகு பேசிய பேரவைத் தலைவர் ‘இந்த தீர்மானம் சரியான தருணத்தில் கொண்டு வரப்பட்டுள்ளதாக கருதுகிறேன். இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் தமிழ்நாடு பல தீர்மானங்களை கொண்டுவந்துள்ளது’ என பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *