பெய்ரூட், ஆக. 12–- லெபனான் நாட்டில் மரண தண்டனை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மரண தண்டனையை ஒழித்து அதற்குப் பதிலாகக் கடுங்காவலுடன் கூடிய ஆயுள் தண்டனையைச் சட்டமாக்கிய முதல் அரபு நாடு என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை லெபனான் படைத்துள்ளது.
லெபனான் நாடாளுமன்றத்தில் இது தொடர்பான தீர்மானத்தின் மீது நேற்று (11.8.2026) வாக்கெடுப்பு நடைபெற்றது. லெபனான் நாடாளுமன்றத்தில் உள்ள மொத்தம் 128 உறுப்பினர்களில், ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தவிரப் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இப்புதிய சட்டத்தின்படி, இனி மரண தண்டனைக்கு பதிலாகக் குற்றவாளிகளுக்குக் கடுங்காவலுடன் கூடிய ஆயுள் தண்டனை வழங்கப்படும். லெபனானில் கடந்த 2004-ஆம் ஆண்டு முதலே மரண தண்டனை நிறைவேற்றுவது அதிகாரபூர்வமற்ற முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது . எனினும், சட்டப்பூர்வமாக அது ரத்து செய்யப்படாமல் இருந்தது.
தற்போது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தின் மூலம், லெபனானில் மரண தண்டனை முழுமையாக ஒழிக்கப்பட்டுச் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. மனித உரிமை அமைப்புகள் மற்றும் உலக நாடுகளின் மத்தியில் லெபனானின் இந்த நடவடிக்கைக்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
