பெரம்பலூர், ஆக. 12- ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூரில் புதிய பேருந்து நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் இரா.முத்தரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன உரையாற்றப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் முத்தரசன் பேசுகையில், ஒன்றிய அரசு விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வந்த 4 சட்ட மசோதாக்களை திரும்ப பெற வேண்டும். விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும். வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதை பிரதமர் குறைத்து கொண்டு, மக்கள் பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டும்.
நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பிரதமர் பதிலளிக்க மறுக்கிறார். இதுவரை உள்ள பிரதமர்களில் இவரை போல், நாடாளுமன்றத்தை புறக்கணித்தவர்கள் யாரும் இல்லை.
கருநாடக மாநிலத்தில் மேகதாது அணை கட்ட, காங்கிரஸ் அரசு முயற்சிக்கிறது. ஒன்றிய அரசு மேகேதாட்டு அணை கட்டுவதற்கு அனுமதி வழங்கக்கூடாது. நீட் தேர்வு முறைகேட்டிற்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலகியதுபோல், ஒன்றிய உள்துறை அமைச்சரும் பதவி விலக வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தமிழ்நாட்டில் தொடரும்.
தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது வரவேற்கத்தக்கது. அதேபோல அரசு விழாக்கள், பள்ளி, கல்லூரிகளில் தமிழ்தாய் பாடல் முதலில் இடம் பெறும் என்பது நல்ல தீர்மானம். அதேபோல காவிரி நீரை தமிழ்நாட்டிற்குக் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒன்றிய அரசு நடுவர் மன்ற தீர்ப்பு, உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு மதிப்பளித்து, தமிழ்நாட்டிற்கு உரிய நீரை பெற்றுத்தர வேண்டும். மேகேதாட்டு அணை விவகாரத்தில், கருநாடகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் ஒன்றுபடுகின்றன. ஆனால், தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் முரண்பட்டு செயல்படுகிறது.
தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி, காவிரி நீர் விவகாரத்தில் உரிய சட்ட போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும். விவசாய கடன்களை முழுமையாக ரத்து செய்வதாக முதலமைச்சர் விஜய், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், முழு கடன் தள்ளுபடி இல்லை என்று அறிவித்திருப்பது கவலை அளிக்கிறது. விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதால் முழு பயிர்கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
125 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில், 60 சதவீதம் ஒன்றிய அரசும், 40 சதவீதம் தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு நிதி சுமையை காரணம் காட்டாமல், உடனே நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
