தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்…! பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வெளிநடப்பு!

3 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஆக.11 நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அரசினர் தனித் தீர்மானம்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (11.8.2026) 2026-2027 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான 3 ஆவது நாள் விவாதம் நடந்தது. அதனைத் தொடர்ந்து, மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கோ.க.அருண்ராஜ், அரசினர் தனித் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பயிற்சி மய்யங்கள்
பெருக வழிவகுக்கும்

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) முறை சமூக நீதி, சமத்துவம் மற்றும் மாநிலங்களின் உரிமைகளுக்கு எதிரானது என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலி யுறுத்தி வருகிறது. தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்கள், கிராமப்புற மற்றும் சமூகப் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் ஆகியோரின் மருத்துவக் கல்வி வாய்ப்புகளை இத்தேர்வு முறை பெரிதும் பாதிக்கிறது.

நீட் தேர்வானது வரம்பின்றி அதிக அளவில் கட்டணம் வசூ லிக்கும் பயிற்சி மய்யங்கள் பெரு குவதற்கு வழிவகுத்துள்ளது. மாண வர்களின் கவனத்தை பள்ளிப் பாடத்திட்டத்தைப் பயில்வதில் இருந்து திசைதிருப்பி, நீட் பயிற்சியில் மட்டுமே முழுக்கவனத்தையும் செலுத்த கட்டாயப்படுத்துகிறது.

குடியரசுத் தலைவர் நிறுத்திவைப்பு

12 ஆண்டுகால பள்ளிக் கல்வியை புறந்தள்ளி ஒரு நாள் நுழைவுத் தேர்வே மாணவர்களின் உயர் கல்வியைத் தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வில் இருந்து மாநிலத்திற்கு விலக்கு அளிக்கும் வகையில் 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டமுன்வடிவை (சட்ட முன்வடிவு எண் 43/2021) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஒருமனதாக நிறைவேற்றியிருந்தும், குடியரசுத் தலைவரால் அச்சட்ட முன்வடிவுக்கு ஏற்பிசைவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு முறை
அகற்றப்பட வேண்டும்

தொடர் வினாத்தாள் கசிவுகள் மற்றும் முறைகேடுகளால் நீட் (இளநிலை) 2026 தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு நடத்தப்பட்ட நிலையில், லட்சக்கணக்கான மாணவர்களுக்குச் சொல்லொணாத் துயரமும், இளம் மாணவர்கள் உயிரிழப்பும் ஏற்பட்டு, நாடு முழுவதும் உள்ள மாணவர்களின் நம்பிக்கையை இத்தேர்வு முறை முற்றி லும் இழந்துள்ளது. எனவே, இத்தேர்வு முறை அகற்றப்பட வேண்டும்.

நீட் தேர்வுகளில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் முறைகேடுகளைக் கருத்தில் கொண்டு, நீட் நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்யும் வகையில், 2019 ஆம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் (மய்யச் சட்டம் 30/2019), 2020 ஆம் ஆண்டு இந்திய மருத்துவ முறைகளுக்கான தேசிய ஆணையச் சட்டம் (மய்யச் சட்டம் 14/2020) 2020 ஆம் ஆண்டு ஹோமியோபதிக்கான தேசிய ஆணையச் சட்டம், (மய்யச் சட்டம் 15/2020) மற்றும் தொடர்புடைய பிற மய்யச் சட்டங்களில் தேவையான திருத்தங்களை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஒரு மனதாக வலியுறுத்துகிறது. இதன் மூலம் மாணவர்கள் 12 ஆம் வகுப்புத் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மாநிலத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள இயலும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த தனித்தீர்மானத்தை எதிர்த்து பாஜக சட்டமன்ற உறுப்பினர் வெளிநடப்பு செய்தார். மற்ற கட்சிகள் இந்த அரசினர் தனித்தீர்மானத்துக்கு வரவேற்பு தெரிவித்தனர். இதையடுத்து நீட் தேர்வுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட அரசினர் தனித்தீர்மானம் சட்டமன்றத்தின் முடிவுக்கு விடப்பட்டது. மறுப்போரே இல்லை என்பதால் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *