சென்னை, ஆக. 10- பயணிகளின் நலன் மற்றும் வசதியை மேம்படுத்தும் நோக்கில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் நீண்ட தூரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தரமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ், ரூ.10-க்கு “பயணி” குடிநீர் பாட்டில் வழங்கும் திட்டத்தை, போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், அறிமுகம் செய்து வைத்தார்.
நீண்ட தூரப் பயணங்களின் போது, பயணிகளுக்கு தரமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை குறைந்த விலையில் எளிதில் கிடைக்க செய்யும் நோக்கில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடந்த 2013ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் ‘அம்மா’ குடிநீர் பாட்டில் (ஒரு லிட்டர்) ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. அம்மா குடிநீர் முக்கிய பேருந்து நிலையங்களிலும் விற்பனை செய்யப்பட்டது.
பின்னர், இத்திட்டம் பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், தற்போது அரசு விரைவு பேருந்துகளில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘பயணி’ குடிநீர் பாட்டிலுக்கு பொதுமக்களிடம் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து முக்கிய பேருந்து நிலையங்களிலும் விற்பனை செய்யும் வகையில் விரிவாக்கம் செய்யப்படும் என்று போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு சட்ட ஆணையத் தலைவராக நீதிபதி டி.கிருஷ்ணகுமார் நியமனம்!
சென்னை, ஆக. 10- தமிழ்நாடு மாநில சட்ட ஆணையத்தின் தலைவராக நீதிபதி டி.கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் சட்டத்துறை செயலர் பி.சுமதி வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:
தமிழ்நாடு மாநில சட்ட ஆணையத்தை தமிழ்நாடு அரசு மாற்றியமைத்துள்ளது. அதன்படி, சட்ட ஆணையத்தின் தலைவராக மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் கூடுதல் தலைமைச் செயலர் டி.கே.ராமச்சந்திரன், சட்டத்துறை முன்னாள் செயலர் ஏ.அருணகிரி ஆகியோர் ஆணையத்தின் முழுநேர உறுப்பினர்களாகவும், முன்னாள் மாவட்ட நீதிபதிகள் பி.மோகன்தாஸ், ஆர்.கோவிந்தராஜன் ஆகியோர் பகுதிநேர உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்டத்துறையில் செயலர் தகுதியில் உள்ள அதிகாரி முழுநேர உறுப்பினர்-செயலராக செயல்படுவார்.
ஆணையத்தின் பணிகள்
மாநில சட்ட ஆணையம், தற்போது இருக்கின்ற சட்டங்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான ஆலோசனைகளை அரசுக்கு வழங்கும்.
சமூக பொருளாதார சட்ட நடவடிக்கைளையும் அரசுக்கு பரிந்துரை செய்யும். மேலும் மாநிலங்களுக்கு இடையிலான உறவுகளையும், ஒன்றிய-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளையும் மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பாகவும் ஆலோசனை வழங்கும். மாநில அரசு தொடர்புடைய ஒன்றிய அரசு சட்டங்களில் செய்ய வேண்டிய மாற்றங்கள் அல்லது திருத்தங்கள் தொடர்பாகவும் அரசுக்கு ஆலோசனை வழங்கும்.
பதவிக்காலம்
மாநில சட்ட ஆணையத்தின் தலைவர், முழுநேர மற்றும் பகுதிநேர உறுப்பினர்கள் ஆகியோரின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும். இந்த ஆணையம் சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டையில் உள்ள சிட்கோ கட்டடத்தின் 5ஆவது தளத்தில் செயல்படும். இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 8 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
தருமபுரி, ஆக. 10- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
நேற்று (9.8.2026) வினாடிக்கு 6,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, தற்போது வினாடிக்கு 8,000 கன அடியாக உயர்ந்துள்ளது.
ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பரிசல் சவாரிக்குத் தடை விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் விழிப்புணர்வோடு இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பொறியியல் துணை கலந்தாய்வு
ஆகஸ்ட் 17 முதல் விண்ணப்பிக்கலாம்!
தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவிப்பு!
சென்னை, ஆக. 10- தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான பொதுக் கலந்தாய்விற்கு இதுவரை விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் (DOTE) அறிவித்துள்ளது.
முக்கிய விவரங்கள் மற்றும் தேதிகள்:
விண்ணப்பப் பதிவு: ஆகஸ்ட் 17 முதல் ஆகஸ்ட் 31 வரை. துணை கலந்தாய்வு: செப்டம்பர் 3 முதல் செப்டம்பர் 7 வரை பொதுக் கலந்தாய்வில் பங்கேற்க இயலாத மாணவர்கள் மற்றும் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி tneaonline.org என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
