ரூ.100 கோடி மதிப்பிலான பழனி கோயில் நில மோசடி கைதானவர் சிறையில் உயிரிழப்பு!

மதுரை, ஆக.8- ரூ.100 கோடி மதிப்பிலான பழனி கோவில் நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்குரைஞர் அன்வர்தீன் என்பவர் உயிரிழந்தார்.

மோசடி பத்திரப்பதிவு

பழனி கோயில் அடிவாரம் பகுதியில் தண்டபாணி சாமிகள் மடத்தின் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் உள்ளது.

இந்த நிலம் கடந்த மாதம் 6-ஆம் தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில், தனி நபர்களுக்கு ரூ.2 கோடிக்கு கிரையமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு குறித்து சி.பி.சி.அய்.டி. காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த மோசடி தொடர்பாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் நிலத்தை விற்பனை செய்த விழுப்புரத்தைச் சேர்ந்த ஆசிரியர் முருகதாஸ், நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை (60), சேதுபதி (67) அவர்களுக்கு உதவிய பழனி கவுண்டன்குளம் பகுதியை சேர்ந்த வழக்குரைஞர் அன்வர்தீன் (65) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களை காவல் துறைக் காவலில் எடுத்து கடந்த 3 நாட்களாக சி.பி.சி.அய்.டி. காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

நேரில் விசாரணை

அதேநேரம் இந்த வழக்கில் நேற்று முன்தினம் (6.8.2026) கைது செய்யப்பட்ட சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் நெஞ்சுவலி காரணமாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதனால் அவரை நேற்று (7.8.2026) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியவில்லை. இதையடுத்து மாஜிஸ்திரேட் பாக்கியராஜ் அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து ஜஸ்டின் மணிகண்டனிடம் விசாரணை நடத்தினார். பின்னர் அவரை வருகிற 21-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுச்சென்றார்.

நீதிமன்ற காவல்

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ஜஸ்டின் மணிகண்டனுக்கு 2 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட இருக்கிறது. அதன் பிறகு அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டால் மதுரை சிறைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே ஆசிரியர் முருகதாஸ், சேதுபதி, அன்வர்தீன் ஆகியோர் தரப்பில் பிணை கேட்டு திண்டுக்கல் 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுக்களை தள்ளுபடி செய்து நேற்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து மாலையில் ஆசிரியர் முருகதாஸ் உள்பட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களை 12-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் பாக்கியராஜ் உத்தரவிட்டார். பின்னர் அவர்கள் மதுரை ஒன்றிய சிறையில் அடைக்கப்பட்டனர்.

உயிரிழப்பு

இந்நிலையில் பழனி கோவில் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்குரைஞர் அன்வர்தீன் என்பவர் உயிரிழந் துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மதுரை ஒன்றிய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது, வழியில் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *