கடந்த பத்தாண்டுகளில் 94,000 அரசுப் பள்ளிகள் மூடல் நிதி ஆயோக் மற்றும் அரசுத் தரவுகள் அதிர்ச்சித் தகவல்!

3 Min Read

மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் ‘பகுத்தறிவுப்படுத்தல்’ நடவடிக்கைகளின் காரணமாக, கடந்த பத்தாண்டுகளில் சுமார் 94,000 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக நிதி ஆயோக்கின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. இது சராசரியாக நாளொன்றுக்கு 25 பள்ளிகள் மூடப்படுவதைக் காட்டுகிறது.

இதன் விளைவாக, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 2.26 கோடி வரை குறைந்துள்ளது. மொத்த மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளிகளின் பங்கு 2005இல் 71% ஆக இருந்தது, தற்போது 2024-2025இல் 49.24% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. அதேவேளையில், தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை 2.88 லட்சத்திலிருந்து 3.31 லட்சமாக உயர்ந்துள்ளது.

மாநிலங்களில் நிலவும் மோசமான சூழல்

பள்ளிகள் மூடப்படும் அல்லது இணைக்கப்படும் நடவடிக்கைகளால் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

மத்தியப் பிரதேசம்: 11.38 லட்சம் குழந்தைகள் “டிராப் பாக்ஸ்” (Drop Box) பிரிவில் (பள்ளியிலிருந்து விலகும் அபாயத்தில்) உள்ளனர்.

1.23 லட்சம் குழந்தைகள் ஏற்கனவே பள்ளியை விட்டு விலகியுள்ளனர்; 1.55 லட்சம் பேர் குடும்ப இடப்பெயர்வால் படிப்பைக் கைவிட்டுள்ளனர்.

7.37 லட்சம் குழந்தைகளுக்கு
எந்தப் பள்ளிப் பதிவும் இல்லை.

மாநிலத்தில் உள்ள 55 மாவட்டங்களில், 3,500-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் புதிய சேர்க்கை ஏதும் நடைபெறவில்லை.

அரசின் “ஸ்கூல் சலென் ஹம்” மற்றும் “ஹோம் கான்டாக்ட் கேம்பெய்ன்” ஆகிய திட்டங்கள் இருந்தும், 7.5 லட்சம் குழந்தைகளை இத்திட்டங்களால் சென்றடைய முடியவில்லை என மாநில தணிக்கையில் தெரியவந்துள்ளது.

உத்தரப் பிரதேசம்: 2018-2019 காலகட்டத்தில் ஒரே ஆண்டில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 1.63 லட்சத்திலிருந்து 1.38 லட்சமாகக் குறைந்தது (25,000-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடல்).

ஜம்மு-காஷ்மீர்: பகுத்தறிவுப்படுத்தல் திட்டத்தின் கீழ் 4,300-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டன அல்லது இணைக்கப்பட்டன.

இதனால் குழந்தைகள் நாள்தோறும் 4 முதல் 6 கி.மீ. தூரம் பயணம் செய்து பள்ளிக்குச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மேலும், மாநிலத்தில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி உரிமைச் சட்டத்திற்கு (RTE) நேர்ந்துள்ள சவால்

தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 பகுத்தறிவுப்படுத்தலை ஆதரித்தாலும், ‘அண்டைப் பள்ளி’ (Neighbourhood School) என்ற கருத்துக்குப் பாதிப்பு வரக்கூடாது எனக் குறிப்பிடுகிறது. ஆனால், தற்போதைய சூழ்நிலை கல்வி உரிமைச் சட்டத்தை (RTE) மீறும் வகையில் உள்ளது.

பெண்களுக்குப் பாதிப்பு: பள்ளி அமையும் இடம் வெகுதொலைவுக்குச் செல்லும்போது, முதலில் கல்வியை இழப்பவர்கள் பெண் குழந்தைகளே.

ஏழை மற்றும் பின்தங்கிய வகுப்பினர்: அரசுப் பள்ளிகள் பெரும்பாலும் பட்டியல் சாதியினர்  பட்டியல் பழங்குடியினர் (ST), பிற்படுத்தப்பட்டோர் மற்றும் முஸ்லிம் சமூகங்களின் ஏழைக் குழந்தைகளாலேயே நிரம்புகின்றன. பள்ளிகள் மூடப்படுவதால் இவர்கள் இலவசக் கல்வியை இழக்கின்றனர்.

கற்பித்தல் தரம் குறைவு: பள்ளிகள் ஒருங்கிணைக்கப்படும் போது, ஒரு ஆசிரியரே ஐந்து வகுப்புகளை ஒரே நேரத்தில் கவனிக்கும் சூழல் உருவாகிறது.

கல்வி என்பது ‘பொதுப் பட்டியலில்’ இருப்பதால், இந்தப் போக்குக்கான முழுப் பொறுப்பும் மாநிலங்களையே சாரும் என மத்திய அரசு லோக்சபாவில் தெரிவித்‌துள்ளது. இருப்பினும், கட்டாயக்கல்வி உரிமை என்பது சட்டமாகும். பள்ளிகளை உறுதி செய்வதும், என்.பி.இ அமலாக்கத்துடன் நிதியை இணைக்கும் மத்திய அரசு இதில் தலையிடவும் வாய்ப்புகள் உள்ளன.

நடைமுறையில், கட்டாயக் கல்விச் சட்டம் ஏழைப் பெற்றோர்களுக்குத் தேவையான சட்டப் பலத்தையோ, முறையான குரல் கொடுக்கும் அதிகாரத்தையோ வழங்கவில்லை. பள்ளிகளில் பெற்றோர்-சமூகப் பங்கேற்பை உறுதி செய்ய வேண்டிய ‘பள்ளி மேலாண்மைக் குழுக்கள்’ பெரும்பாலும் கூட்டப்படுவதே இல்லை என்பதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *