சென்னை, ஆக. 7- சென்னை பள்ளி மாணவர்களிடம் நடத்தப் பட்ட ஆய்வில் அதிர்ச்சியூட்டும் தகவல் வந்துள்ளது. 17 ஆண்டுகளில் பல மடங்கு நீரிழிவு நோய் அறிகுறி அதிகரித்துள்ளது.
954 மாணவர்கள்
சென்னை கிண்டியில் உள்ள இந்திய நீரிழிவு ஆராய்ச்சி அறக் கட்டளை மற்றும் மருத்துவர் ஏ.ராமச் சந்திரன் நீரிழிவு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் நந்தீரா ராமச் சந்திரன், பிரிசில்லா சூசைராஜ், சதீஷ் கிருஷ்ணமூர்த்தி, வினிதா ராமச்சந்திரன், சினேகலதா சாமுக் குட்டன், அம்பாடி ராமச்சந்திரன் ஆகியோர் பள்ளி மாணவர்களிடம் 2023ஆம் ஆண்டு ஓர் ஆய்வை மேற்கொண்டனர்.
அதில் சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 8 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் 954 மாணவர்கள் பங் கேற்றனர். அவர்களில் 587 பேர் மாணவிகள், 367 பேர் மாணவர்கள். இந்த ஆய்வு முடிவுகள், கடந்த 2006ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகளுடன் ஒப்பிடப் பட்டன. தற்போது இந்த ஆய்வு முடிவுகள் மருத்துவ இதழில் வெளி யிடப்பட்டுள்ளன. அந்த ஆய்வில் கூறப்பட்டு இருப்பதாவது:-
26.4 சதவீதம் அதிகம்
2006ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 3.1 சதவீத மாணவிகளிடம் நீரிழிவு நோய் பாதிப்பு காணப் பட்டது. ஆனால் 2023ஆம் ஆண்டில் அது 28.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேபோன்று 2006ஆம் ஆண்டில் 3.5 சதவீத மாணவர்களிடம் காணப்பட்ட இந்த பாதிப்பு, 2023இல் ஆண்டில் 26.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2006ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2023ஆம் ஆண்டில் மாணவர்களின் உடல் நிறை குறியீடு, இடுப்புச் சுற்றளவு, ‘சிஸ்டாலிக்’ ரத்த அழுத்தம் மற்றும் வெறும் வயிற்றில் ரத்தச் சர்க்கரையின் சராசரி அளவு அதிகரித்துள்ளது. மாணவிகளை பொறுத்தவரை ரத்த சர்க்கரை பாதிப்பு உள்ளவர்களின் உடல் நிறை குறியீடும், இடுப்பு சுற்றளவும் பாதிப்பு இல்லாத மாணவர்களைவிட அதிகமாக இருந்தது.
இதுதுவிர நல்ல கொழுப்பு என்று அழைக்கப்படும் எச்.டி.எல். கொழுப்பு குறைவாக இருப்பது, டிரைகிளிரசைடு அதிகமாக இருப்பது, வெறும் வயிற்றில் ரத்த சர்க்கரை அதிகமாக இருப்பது, ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பது ஆகிய இதயம் மற்றும் வளர்ச்சி மாற்ற தொடர்பான அபாய காரணிகள் ஆய்வு செய்யப்பட்டன. 2023ஆம் ஆண்டு ஆய்வு செய்யப்பட்ட மாணவர்களில் 77.4 சதவீதம் பேரிடம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அபாய காரணிகள் காணப்பட்டன. 2006ஆம் ஆண்டில் இது 74.4 சதவீதமாக இருந்தது.
3 அல்லது அதற்கு மேற்பட்ட அபாய காரணிகள் இருந்த மாண வர்களின் எண்ணிக்கை 2006ஆம் ஆண்டில் 6 சதவீதமாக இருந்த நிலையில், 2023இல் ஆண்டில் 9 சதவீதமாக உயர்வது உயர்ந்தது. மாணவர்களிடம் இது 8 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக அதிகரித்தது.
கடந்த 17 ஆண்டுகளில் இளம் பருவப் பள்ளி மாணவர்களிடம் உடல் பருமன் அதிகரித்ததுடன், வெறும் வயிற்றில் ரத்த சர்க்கரை அதிகமாக இருக்கும் பாதிப்பும் பல மடங்கு உயர்ந்துள்ளது.
மாணவர்களைவிட மாணவிகள் அதிக அபாயத்தில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இளம்வயதிலேயே ஏற்படும் இது போன்ற வளர்ச்சி மாற்ற பாதிப்புகள், எதிர்காலத்தில் அவர்கள் பெரியவர்களாகும்போது நீரிழிவு நோய் மற்றும் இதய நோய்கள் ஏற்படுவதற்கான முன்னோட்டமாக இருக்கலாம்.
குறிப்பாக இளம் வயதினரி டையே ‘டைப்-2’ நீரிழிவு நோய் மேலும் அதிகரிப்பதற்கான ஆரம்ப அறிகுறியாக தற்போதைய நிலை இருக்கக்கூடும். எனவே பல பள்ளிகளிலேயே ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோருக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
