துணைவரை இழந்த தாயாக இருந்தாலும் மணவிழா நடக்கின்ற இடத்திற்கு வரக்கூடாது என்று சொன்னால், ஆத்திரப்படுகிறோம்!
தாய் மொழியான தமிழில் திருமணத்தைத் நடத்தக்கூடாது; புரியாத மொழியில் நடத்த வேண்டும் என்றால், அதைவிட கொடுமை உண்டா?
கோலார், ஆக. 7 துணைவரை இழந்த தாயாக இருந்தாலும் மணவிழா நடக்கின்ற இடத்திற்கு வரக்கூடாது என்று சொன்னால், தவறு என்று சொல்லக்கூடிய, ஆத்திரப்படக்கூடிய நீங்கள், தாய் மொழியை உள்ளே வரக்கூடாது என்று சொல்கிறான். திருமணத்தைத் தமிழில் நடத்தக்கூடாது. புரியாத மொழியில் நடத்த வேண்டும் என்று சொன்னால், அதைவிட கொடுமை உண்டா? என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
மணமக்கள்
த.கை.இளங்கதிரவன் – எ.மோனிசா எரிஜ்
கடந்த 24.4.2026 அன்று கோலார் தங்கவயலில் மணமக்கள் த.கை.இளங்கதிரவன் – எ.மோனிசா எரிஜ் ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவினை தலைமை தாங்கி நடத்தி வைத்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.
அவரது வாழ்த்துரை வருமாறு:
அய்யா கு.கைவல்யம் – தயாநிதி
பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய கோலார் தங்கவயல் சுயமரியாதைச் சுடரொளி அருமை அய்யா கு.கைவல்யம் – தயாநிதி ஆகியோருடைய அன்பு மகன் டாக்டர் இளங்கதிரவன் அவர்களுக்கும், அதேபோல எரிஜ்– உஷாவத்தி ஆகியோருடைய அன்பு மகள் மோனிசா எரிஜ் அவர்களுக்கும் நடைபெற்ற இந்த வாழ்க்கை துணைநல ஒப்பந்த விழாவிலே கலந்து கொண்டு, சிறப்பாக இங்கே மணமக்களுக்கு வாழ்த்துரை வழங்கிய அருமை நண்பர்களே, மணமக்களே, மணமக்களுடைய உற்றார், உறவினர்களே, தோழர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.
இந்த மணவிழாவைப் பொறுத்தவரையிலே மிக முக்கியமான ஒரு செய்தி என்னவென்று சொன்னால், முன்பே திருமணம் நடந்திருக்க வேண்டும் அவர்களுக்கு. ஆனால், நம்முடைய அறிவழகன் குடும்பத்தினர், குறிப்பாக என்னுடைய தலைமையிலேதான் இம்மணவிழாவினை நடத்த வேண்டும் என்பதற்காக அவர்கள் என்ைன வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள்.
இரத்த உறவை விட, கொள்கை உறவுதான் எப்போதும் நெருக்கமானது!
உங்களுக்கெல்லாம் தெரியும், தமிழ்நாட்டில் தேர்தல் நேற்றுதான் முடிந்தது. தேர்தல் சுற்றுப் பயணத்தில் தொடர்ந்து ஈடுபட்ட எங்க ளுக்கு அலைச்சல். ஆகவேதான், அந்தச் சுற்றுப்பயணத்தின் நடுவில், சில தேதிகளில் வர முடியவில்லை. அறிவழகன் அவர்கள் குடும்பத்தார்கள், எனது உறவுக் குடும்பம் மாதிரி, அவ்வளவு நெருக்கமானவர்கள். இரத்த உறவை விட, கொள்கை உறவுதான் எப்போதும் நெருக்கமானது. ஆகவே அந்த உறவுதான் எங்கள் எல்லோருக்கும். அறிவழகனும், அம்மாவும் இம்மணவிழாவிற்காகத் தேதி கேட்டார்கள். எனக்கு எந்தத் தேதியைக் கொடுப்பது என்று தெரியவி்லலை. தேர்தல் பிரச்சாரம் முடியட்டும், அதற்குப் பிறகு தேதி சொல்லலாம் என்றிருந்தேன்.
மணவிழா தேதியை அவர்களே
நிர்ணயம் செய்துவிட்டார்கள்!
கருநாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு இவர்கள் எல்லாருமே வந்தார்கள்; அப்போது, என்னிடம் கேட்காமல், திடீர்னு வந்து, என் கையில் ஓர் அழைப்பிதழைக் கொடுத்தார். 23 ஆம் தேதி தேர்தல் முடிந்துவிடும்; காலையில் ஓட்டுப் போட்டுவிட்டு, அன்றைக்கு இரவு புறப்பட்டு, விடியும்பொழுது இங்கே வந்துவிடுங்கள். அதனால், 24 ஆம் தேதி, மணவிழாவிற்கு ஏற்பாடு செய்துவிட்டோம். தள்ளிப் போடக்கூடாது என்பதற்காக என்று சொல்லி, அவர்களே இந்தத் தேதியை நிர்ணயம் செய்துவிட்டார்கள். நான் தேதி கொடுக்கவில்லை. தோழர்கள் எல்லாம் என்னிடம் சண்டை போட்டார்கள். இவ்வளவு நாள்களாகத் தொடர்ந்து பிரச்சாரம் செய்திருக்கிறீர்கள். தொண்டைக் கட்டிக்கொண்டிருக்கிறது. ஆகவே, ஒரு நாளாவது ஓய்வெடுக்கலாமே, தொடர்ச்சியாக சுற்றுப்பயணம் செய்திருக்கிறீர்களே என்றனர்.
அருமைச் சகோதரர் கிள்ளிவளவன்
எனக்குத் தெரியாது, மணவிழாவிற்கு ஏற்பாடு செய்துவிட்டார்கள். அதனைத் தட்ட முடியாது; கட்டாயமாகப் போக வேண்டும் என்று சொல்லி, இங்கே வந்தேன். உங்களையெல்லாம் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னாலே பார்ப்பது பெருத்த மகிழ்ச்சி. அனைவருக்கும் என்னுடைய அன்பார்ந்த வாழ்த்துகளையும், வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திருமணத்தில் என்ன சிறப்பு என்பதை, பெரியோர்கள், தாய்மார்கள் எல்லாம் சொன்னார்கள். தந்தை பெரியார் அவர்களாலே தொடங்கப்பெற்ற இந்தச் சுயமரியாதைத் திருமணத்தி னுடைய பெருமை என்ன என்பதை, மாட்சி என்ன என்பதை வழக்குரைஞர் அருமைச் சகோதரர் கிள்ளி வளவன் அவர்கள் சிறப்பாக எடுத்துச் சொன்னார். மற்றவர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த திருமணத்திற்குக் கட்டாயமாக நான் வர வேண்டும் என்று சொல்லி, பிள்ளைகள் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இரண்டு டாக்டர்களைப் பார்க்கும்போது, அவர்கள் மகிழ்ச்சியாகவும், உற்சாக மாகவும் இருக்கிறார்கள். பொருத்தம் பொருத்தம் என்று சொல்வார்கள்; இதைவிட நல்ல பொருத்தம் வேறு கிடையவே கிடையாது. ஆகவே, மகிழ்ச்சியோடு இந்த நிகழ்ச்சியில் இருக்கிறார்கள்.
கைவல்யம் – தயாநிதி மணவிழாவினை
1980 இல் நடத்தி வைத்தேன்!
உங்களுக்கு ஒன்றைச் சொல்லவேண்டும், இந்தத் திருமணத்தில் ஒரு பெரிய வாய்ப்பு என்னவென்றால், மணமகனின் தந்தையார் அவர்கள், அய்யா கைவல்யம் – தயாநிதி, அவரு டைய திருமணத்தை நான்தான் 1980 இல் நடத்தி வைத்தேன். இன்றைக்கு, மறுபடியும் அவருடைய பிள்ளை வளர்ந்து டாக்டர் ஆன பிற்பாடு, அதே திருமணத்தை நடத்தி வைத்துள்ளேன். நிறைய பேருக்குச் சந்தேகம்; சுயமரியாதைத் திருமணம் செய்கிறோமே, திராவிட இயக்கக் கொள்கையோடு செய்கிறோமே, பெரியார் கொள்கையைப் பின்பற்றுகிறோமே, சடங்கு, சம்பிரதாயம், மந்திரம் எல்லாம் இல்லாமல் இருக்கிறதே, என்ன ஆகுமோ? பிள்ளை பிறக்குமா? அப்படி பிறந்தாலும் நல்ல உடல்நலத்தோடு பிறக்குமா? என்று சந்தேகப்பட்டார்கள். அவை அத்தனையும் ஏற்க தகுந்தது அல்ல; நம்பத் தகுந்தது அல்ல; சிறப்பாக இருப்பார்கள் என்பதற்கு, இந்த வாழ்வி ணையர்கள் தான் எடுத்துக்காட்டு.
இவர்களுடைய பெயரன் திருமணத்தை நடத்தினாலும், நடத்தி வைப்பேன்!
இரண்டு பேரும் டாக்டர்கள்; அது மட்டுமல்ல, இதில் மிகச் சிறப்பு என்னவென்றால், அவர்களுடைய பெற்றோர்களுக்கும் நான் திருமணம் செய்து வைத்தேன்; இவர்களுடைய திருமணத்தையும் நான் செய்து வைக்கிறேன். அடுத்து, பெயரன் திருமணத்தை நடத்தினாலும், நடத்தி வைப்பேன். என்னடா, இவ ருக்கே இப்போது 93 வயது ஆகிறது; இவருக்கு இவ்வளவு ஆசையா? என்று நீங்கள் நினைக்கலாம்.
எதற்காக இப்படிச் சொல்கிறேன் என்றால், விஞ்ஞா னம், மருத்துவத் துறை அந்த அளவிற்கு வளர்ச்சி பெற்றி ருக்கிறது. இவர்களும் டாக்டர்கள்தான். இந்தியாவில், முன்னாளில் இருந்த சராசரி வயது என்ன? இப்போது இருக்கிற சராசரி வயது என்ன? முப்பத்து முக்கோடி தேவர்களால் வந்தது அல்ல; நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிகளால் வந்தது அல்ல. மருத்துவத்தால் வந்தது. இன்றைக்கு எல்லா வசதிகளும் இருக்கிறது. எல்லாம் தெளிவு இருக்கிறது; அறிவு இருக்கிறது. குழப்பம் இல்லை. ஆகவே, நல்ல வாழ்க்கை முறை இருக்கிறது. ஆகவேதான், இந்த மணவிழாவினை நான் நடத்தி வைத்துள்ளேன் என்று சொல்லும்போது, இந்தக் குடும்பம், கொள்கைக் குடும்பம் என்பது அதுதான். அந்தக் கொள்கைக் குடும்பத்தில் இவர்களுடைய திருமணம் எப்படி நடந்ததோ, அதே போலத்தான், அதே முறையில்தான் பிள்ளைகள் திருமணமும் நடக்கும் என்று சொல்வது இருக்கிறதே, அதற்காகத்தான் சுட்டிக்காட்டினேன். நான், தலைமை தாங்குகிறேன் என்பது முக்கியமல்ல; இந்தக் கொள்கையில் இருந்து, ஓரடி கூட பிறழாமல் இருக்கிறார்கள் என்றால், இதுதான் பெரியார் கொள்கை. அதை யாரும் அசைத்துவிட முடியாது. திராவிடத்தை யாராலும் அசைத்துவிட முடியாது. சில பேர் நினைக்கிறார்கள், ‘திராவிட மாடல்’ எல்லாம் போய்விடும்; திராவிடத்தை எல்லாம் தூக்கி எறிந்துவிடலாம் என்று. அது ஒருபோதும் உங்களால் முடியாது; அது மிகப்பெரிய அளவுக்கு, ‘ஆல்போல் தழைத்து அருகு போல் வேரோடி’ இருக்கின்ற ஒரு கொள்கை. ஆகவேதான், இந்தக் கொள்கையின் வழி நடக்கின்ற இந்தக் குடும்பம் மிகச் சிறப்பாக இருக்கிறது.
‘‘இந்து மதம் எங்கே போகிறது?’’
சுருக்கமாகச் சொல்கிறேன், தந்தை பெரியார் அவர்க ளால் உருவாக்கப்பட்டது சுயமரியாதைத் திருமணம். பழைய திருமணம், வைதீகத் திருமணம், அந்தச் சடங்குத் திருமணத்தின் மேல் நமக்கு ஒன்றும் கோபம் இல்லை. அது நம்முடைய பண்பாட்டுக்கு, தமிழ்ப் பண்பாட்டுக்கு, திராவிடப் பண்பாட்டிற்கு அறவே ஏற்றது அல்ல என்று சொல்வதுதான் இந்த மணமுறை. அது இடையிலே புகுந்தது; ஆதாரம் வேண்டுமானால், பெரியாரை நான் ஆதாரம் காட்டவில்லை. இந்தப் புத்தகம், ‘‘இந்து மதம் எங்கே போகிறது?’’ என்கிற புத்தகம். இந்தப் புத்தகத்தை யார் எழுதியது என்று சொன்னால், பெரியார் எழுதவில்லை; மு.க.ஸ்டாலின் எழுதவில்லை; வீரமணி எழுதவில்லை. முழுக்க முழுக்க எழுதியது அக்னி ேஹாத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார். இந்தப் புத்தகத்தில் தெளிவாகச் சொல்கிறார்.
தமிழ் நீஷ பாஷையாம்;
சமஸ்கிருதம் தேவ பாஷையாம்!
ஆரியர்கள் வந்த பிற்பாடுதான், இந்த மணமுறை என்பதை –அவர்களுடைய மண முறையை இங்கே திணித்துவிட்டார்கள். தமிழில் நடத்தக்கூடாது; அதற்குப் பதிலாக சமஸ்கிருதத்தில் மந்திரத்தைச் சொல் வேண்டும். ஆக, தமிழ் நீஷ பாஷை; சமஸ்கி ருதம் தேவ பாஷை. பாஷையிலேகூட பிரித்து வைத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, அரசி யலமைப்புச் சட்டத்திலேயே யாருக்கும் தெரியாமல், அம்பேத்கர் அவ்வளவு பாதுகாத்தும்கூட, தேவ பாஷை என்று உயர்த்திப் பிடித்து, சமஸ்கிருதத்தை தேவ பாஷை என்று வைத்திருக்கிறார்கள். அதற்கு உதாரணம் சொல்லவேண்டுமானால், ஹிந்தி பற்றி சொல்லும்போது அரசியலமைப்புச் சட்டத்திலே, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலே தமிழைக் கொச்சப்படுத்துவது மற்ற மொழிகளை எல்லாம்கூட கொச்சைப்படுத்துவது மாதிரி ஒரு வார்த்தை இருக்கிறது. என்ன வார்த்தை அது? வழக்குரைஞர்கள் நிறைய பேர் இங்கே இருக்கிறார்கள். அரசியலமைப்புச் சட்டத்தை எடுத்துப் பாருங்கள். Hindi Should be official Language என்கிற வார்த்தை இருக்கிறது. அந்த ‘அபிஷியல் லாங்குவேஜ்’ என்கிறபோது, ஹிந்தியில், பல ஹிந்தி இருக்கிறது. அதை அடையாளம் காட்டும்போது என்ன சொல்கிறார்கள்?
ஆரியர் மண முறையில் நம்முடைய மொழியை நாமே கொச்ைசப்படுத்துகிறோம்!
‘ஹிந்தி இன் தேவ்நகரி ஸ்கிரிப்ட்’ என்ற வார்த்தை இருக்கிறது. ‘தேவ்’ என்றால் என்ன? கடவுள்! கடவுள் உருவாக்கிய எழுத்துகளைக் கொண்ட, சமஸ்கிருதத்தில் இருக்கிற அந்த ஸ்கிரிப்ட் படிதான், அந்த ஹிந்திதான் இங்கே வரவேண்டும். இந்துஸ்தானி வரக்கூடாது; உருது கலப்பு இருக்கிறது. அது வரக்கூடாது என்று சொல்லக்கூடிய ஒரு தத்துவம்தான் – அந்த அடிப்படை யில் இருக்கிறது. இதிலிருந்து மொழியில் வேற்றுமை. ஆகவேதான், ஆரியர் மண முறையில் நம்முடைய மொழியை நாமே கொச்ைசப்படுத்துகிறோம்.
இங்கே ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்; பெரியோர்கள், தாய்மார்கள் எல்லாம் இங்கே இருக்கி றீர்கள். மணமகனாக இருக்கக்கூடிய நம்முடைய இளங்கதிரவன் அவர்களிடம், ‘‘திருமணம் செய்து கொள்’’ என்று அவர்களுடைய பெற்றோர், குடும்பத்தார் கேட்கும்போது, அவர் சொல்கிறார்; ‘‘நான் திருமணம் செய்து கொள்கிறேன். ஆனால், ஒரே ஒரு நிபந்தனை. அந்த நிபந்தனையை நீங்கள் நிறைவேற்றினால், நான் திருமணம் செய்து கொள்கிறேன்’’ என்று சொல்கிறார்.
‘என்னப்பா, அந்த நிபந்தனை?’ என்று கேட்கிறார்கள்.
‘திருமணம் நடக்கும் மண்டபத்திற்குள் என் தாய் வரக்கூடாது’ என்கிறார்.
இதைவிட வேறு கொடுமை உண்டா?
இதை யாராவது ஏற்பீர்களா? தாய் இல்லாமல், இவர் எப்படி வந்தார்? என்று கேட்க மாட்டீர்களா? ‘‘இந்தப் பிள்ளைக்கு ஏன் இப்படி புத்தி போகுது’’ என்று கோபப்பட மாட்டீர்களா? தாயை திருமண மண்டபத்திலே, திருமணம் நடைபெறும் இடத்திற்கு துணைவரை இழந்தவர், தாயாக இருந்தாலும் மணவிழா நடக்கின்ற உள்ளே வரக்கூடாது என்று சொன்னால், தவறு என்று சொல்லக்கூடிய, ஆத்திரப்படக்கூடிய நீங்கள், தாய் மொழியை உள்ளே வரக்கூடாது என்று சொல்கிறான். திருமணத்தைத் தமிழில் நடத்தக்கூடாது. புரியாத மொழியில் நடத்த வேண்டும் என்று சொன்னால், தாய் மொழி உள்ளே வரக்கூடாது என்று சொன்னால், அதைவிட கொடுமை உண்டா? எம்மொழி செம்மொழி; கலைஞருடைய தயவினால், அவருடைய அரசாங்கம் எடுத்த முயற்சியினால் தமிழ் செம்மொழி ஆனது.
அந்த செம்மொழித் தமிழில் திருமணம் நடத்தாமல், வேறு மந்திரம் சொல்கிறார்கள். அந்த மந்திரத்தில் என்ன இருக்கிறது? பெண்களைக் கொச்சைப்படுத்துவது, அந்தத் திருமணத்தையே கொச்சைப்படுத்துவது. ஆதாரத்தோடு அப்படிச் சொல்கிறேன். ஏதோ இவர்கள் எல்லாம் ஒரு தவறான கருத்துகளைப் பரப்புகிறவர்கள் அல்லது துவேஷத்தை உண்டாக்கிறவர்கள் என்று தவறாகத் திட்டமிட்டு பிரச்சாரம் செய்கின்ற தோழர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.
வைதீக மணவிழாவின்போது சொல்லப்படும் சமஸ்கிருத மந்திரத்தின் அர்த்தம் தெரியுமா?
ஆன்மிகத் திருமணங்களில், பார்ப்பனர் மந்திரம் சொல்கிறார், புரோகிதர் மந்திரம் சொல்கிறார்; புரோகி தருக்கு நமக்கும் எந்தவிதமான வருத்தமும் கிடையாது. புரோகிதருக்கு நாம் ஒன்றும் போட்டியில்லை. நாம் ஒன்றும் தொழில் நடத்தவில்லை. புரோகிதர் செய்வதற்குப் பதிலாக நாங்கள் நடத்துகிறோம் என்று சொல்லவில்லை.
‘‘சோமோ ப்ரதமோ விவேத கந்தர்வோ விவேத உத்தர
த்ருதியோ அக்னிஷ்டே பதிஸ்துரியஸ்தே மனுஷ்யஜா’’
நமக்கு சமஸ்கிருதம் தெரியவில்லை என்பதால், அந்த மந்திரத்தினுடைய அர்த்தம் நமக்குத் தெரியாது. ஆனால், தமிழில் பேசினால், நான் தவறாகப் பேசினால், நீங்கள் புரிந்துகொண்டு, திருத்துவீர்கள்.
திருமணத்தின்போது, புரோகிதர் தாலியை எடுத்து, மணமகன் கையில் கொடுக்கும்போது, பக்கத்தில் நிற்கும் புதுப் பணக்காரன், ‘‘சாமி, மந்திரத்தை ஸ்ட்ராங்கா சொல்லுங்கோ’’ என்பான்.
அந்த மந்திரத்தின் பொருள் யாருக்கும் தெரியாத தினால், இப்படிச் சொல்கிறார்கள்.
சோமன் (சந்திரன்): மணமகளுக்கு முதன்முதலில் சோமன் என்ற தெய்வம் உரியவன் ஆவான்.
கந்தர்வன்: இரண்டாவதாக கந்தர்வன் உரியவன் ஆவான்.
அக்னி: மூன்றாவதாக அக்னி பகவான் உரியவன் ஆவான்.
மனிதன்: நான்காவதாக மனிதப் பிறவியான கணவன் உனக்கு உரியவன் ஆவான் என்பதுதான் அந்த மந்திரத்தினுடைய பொருளாகும்.
இப்படிப்பட்ட ஒரு ஆபாசமான, அருவருப்பான அந்த மந்திரங்களை சமஸ்கிருதத்தில் குறிப்பிட்டு, தமிழில் அர்த்தம் எழுதி இருக்கிறார். இந்த புத்தகத்தை வாங்கிப் படித்தீர்களேயானால், உங்களுக்குத் தெரியும். நேரத்தின் நெருக்கடியினால், நான் முழுவதுமாகப் படிக்கவி்லலை.
அந்தக் கொடுமையை ஒழித்தவர்தான்
தந்தை பெரியார்!
ஆகவே, அப்படிப்பட்ட ஒரு கொடுமையை ஒழித்தவர்தான் அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள். தந்தை பெரியார் தான் இந்த மணமுறையை எளிதாக்கினார்; சுயமரியாதைத் திருமணம் என்று ஆக்கினார். இங்கே மணமக்கள் மகிழ்ச்சியோடு அமர்ந்திருக்கிறார்கள். ஆனால், புரோகிதத் திருமணம் என்றால், இங்கே மாஞ்சுள்ளியைப் போட்டு, அதைக் கொளுத்தி, நெய்யை ஊற்றுவார்கள். அதிலிருந்து வரும் புகையினால், மணமக்கள் இரண்டு பேரும் கண்களைக் கசக்க, ‘‘என்னய்யா, மணமகளின் கண்களில் நீர் வருதே’’ என்று அங்கே ஒருவர் பேச, இந்த அபத்தம் எல்லாம் இல்லை, சுயமரியாதைத் திருமண முறையில்.
உலையில் போடும் அரிசியை
தலையில் போடலாமா?
இம்மணமுறையில், தனிப்பட்ட முறையில் எந்தச் சடங்கும் இல்லை. ஆனால், வைதீக மணமுறையில், ஒரு தட்டில் நிறைய அரிசியைப் போட்டு, அதில் மஞ்சளை போட்டுக் கலக்கி, அந்தத் தட்டை எடுத்துக் கொண்டு, கடைசியில் அமர்ந்திருப்பவர் வரையில் சென்று, ‘‘எடுத்துக்குங்க, எடுத்துக்குங்க, அட்சதை எடுத்துக்குங்க’’ என்று சொல்லுவார்கள். எல்லோரும் அதைக் கையில் எடுத்துக்கொண்டு, தயாராக இருப்பார்கள். தாலி கட்டுகின்ற நேரம், ‘‘கெட்டி மேளம், கெட்டி மேளம்’’ என்று புரோகிதர் சொல்லி, மந்திரத்தைச் சொல்லுவார். அப்போது கைகளில் வைத்திருக்கும் அரிசியை எல்லோரும் மணமேடையை நோக்கித் தூக்கிப் போடுவார்கள். அரிசி எதற்கு? சாப்பிடுவதற்கு. அரிசி உணவு, அரிசி முக்கியம். அது இல்லாமல் செத்துக் கொண்டிருக்கிற குழந்தைகள் ஏராளம். அந்த அரிசியைத் தூக்கிப் போட்டால், அது என்ன ஏவுகணயா? நேராக மேடையில் அமர்ந்திருக்கும் மணமக்களின் தலையில் விழுவதற்கு? இடையில் அமர்ந்திருக்கும் அனைவரின் தலையிலும் விழும்; மணவிழா முடிந்து போகும்போது, எல்லோரும் தலையைத் தட்டிவிட்டுக் கொண்டே போவார்கள்.
பெரியார்தான் கேட்டார், ‘‘ஏம்பா, அந்த ஒன்றரைக் கிலோ அரிசியை உலையில் போட்டால், அது சோறாகும். சோறானால், பசியைத் தீர்க்கும். உலையில் போட வேண்டிய அரிசியைக் கொண்டு போய், அவன் தலையிலே போடலாமா?’’ என்று கேட்டார். இதுதான் சுயமரியாதைத் திருமணம்.
பருப்பிலே ஊற்றவேண்டிய நெய்யை,
நெருப்பிலே ஊற்றலமா?
புரோகிதத் திருமணத்தில், நெருப்பில் ஊற்றுவ தற்காக நெய் இருக்கிறதா? என்று புரோகிதர் கேட்பார். அசல் நெய்யைக் கொண்டு வந்து, நெருப்பில் ஊற்றுவார்கள்.
தந்தை பெரியார் கேட்டார், ‘‘பருப்பிலே ஊற்றிச் சாப்பிட வேண்டிய நெய்யை, நெருப்பில் ஊற்றலாமா?’’ என்று கேட்டார். இதுதான் சுயமரியாதைத் திருமணம்.
இந்தச் சடங்குகள், அர்த்தமற்ற சடங்குகள். இவை அத்தனையும் இல்லாத அளவுக்குதான், இந்தத் திரு மணத்தை எளிதாக்கினார் தந்தை பெரியார் அவர்கள்.
அன்றைக்கு இந்தத் திருமணத்தை எதித்தார்கள். நூறு ஆண்டுகள் ஆகிறது; சுயமரியாதை முறையில் நடைபெற்ற முதல் திருமணம் செல்லாது என்று பார்ப்பன நீதிபதிகள் இரண்டு பேர் தீர்ப்புக் கொடுத்தார்கள். ஆனால், அதைப்பற்றி யாரும் கவலைப்படவில்லை. ஏராளமான திருமணங்களை திராவிடர் கழகத் தோழர்கள் செய்தனர்.
சுயமரியாதைத் திருமண முறைக்குச் சட்டம் வடிவம் கொடுத்தவர் அறிஞர் அண்ணா!
1967 இல், பேரறிஞர் அண்ணா அவர்களின் திராவிட ஆட்சி வந்தவுடனே, ‘‘தந்தை பெரியாருக்கு இந்த ஆட்சி காணிக்கை’’ என்று சொன்னது மட்டுமல்ல; முதல் சட்டமாக, ‘‘சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடி ஆகும்’’ என்று அவர்கள் அறிவித்து, நடந்த திருமணங்கள் மட்டுமல்ல, நடக்கக்கூடிய, இனி வரக்கூடிய திருமணங்களும் செல்லுபடியாகும் என்று சொன்னார். ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.
சில ஆண்டுகளுக்கு முன்புகூட மறுபடியும் நீதிமன்றத்திற்குப் போனார்கள் உயர்ஜாதிக்காரர்கள், பார்ப்பனர்கள். ஆனால், நீதிமன்றத்தாலேயே சுயமரி யாதைத் திருமணச் சட்டம் சரியான சட்டம் என்று சொல்லப்பட்டது.
சுயமரியாதைத் திருமண முறையைப் பார்த்து வியந்த தேவராஜ் அர்ஸ்!
கருநாடகத்தைச் சேர்ந்த பெருமதிப்பிற்குரிய சமூக நீதிக் காவலர் தேவராஜ் அர்ஸ் அவர்கள், சுயமரி யாதைத் திருமணத்தை பார்த்ததில்லை. அவர் அப்பொழுது கருநாடக மாநில முதலமைச்சராக இல்லை. கருநாடக மாநிலத்தில், திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் கதிரவன் இல்லத் திருமணம் என்னுடைய தலைமையிலே நடைபெற்றது. அப்பொழுது சுயமரியாதைத் திருமண முறையைப் பார்த்த தேவராஜ் அர்சு, ‘இவ்வளவு எளிமையாகப் பெரியார் ஆக்கியிருக்கிறாரே திருமணத்தை –எனக்கு முதலிலேயே தெரிந்திருந்தால், தமிழ்நாட்டில் அண்ணா செய்தது மாதிரி, நானும் சட்டம் கொண்டு வந்திருப்பேன்’’ என்றார்.
ஆகவேதான், தோழர்களே, தாய்மார்களே, பெரி யோர்களே, நண்பர்களே நீங்கள் எல்லோரும் இந்த மணமக்களை மகிழ்ச்சியாக வாழ்த்தியிருக்கிறீர்கள்.
மணமக்களே, பெற்றோருடைய விருப்பத்தை நிறைவேற்றுங்கள்!
பொதுவாக மணமக்களுக்கு நான் அறிவுரை சொல்வதில்லை. அவர்கள் தெளிவானவர்கள். ஆகவே தான், அவர்களுக்கு வேண்டுகோளாக சொல்வது என்னவென்றால், உங்கள் தாய், தந்தை – பெற்றோர்தான் உங்களை ஆளாக்கி இருக்கிறார்கள். அதற்கு எவ்வளவோ தியாகம் செய்திருக்கிறார்கள். எனவே, தயவுசெய்து என்றென்றைக்கும் பெற்றோரிடம் நீங்கள் அன்பு காட்டுங்கள்; பெற்றோருடைய உதவியை மறக்காதீர்கள். பெற்றோருடைய விருப்பத்தை நிறைவேற்றுங்கள். பகுத்தறிவாளர்களாக வாழுங்கள்.
கடைசியாக ஒன்றைச் சொல்கிறேன், நீங்கள் வெற்றிபெற வேண்டும் என்றால், மூட நம்பிக்கையற்ற, தன்னம்பிக்கை உள்ள ஒரு வாழ்க்கையை வாழுங்கள். உங்கள் இருவருக்குள் தன்முனைப்பு இருக்கக்கூடாது; ‘ஈகோ’ இல்லையென்றால், உங்களுடைய வாழ்க்கை வெற்றி அடையும். அண்ணா சொன்னார், ‘‘விட்டு கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை; கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை’’ இதுதான் வாழ்க்கை.
கருநாடக மாநிலத்திலும்
தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும்!
ஆகவே, மணமக்களே நீங்கள் சிறப்பாக வாழுங்கள்! இந்தக் குடும்பம் நம்முடைய கொள்கைக் குடும்பம், சிறப்பாக இருக்க வேண்டும். சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா நடந்தது; அதில்கூட தீர்மானத்தை வைத்தோம். கருநாடகத்தில் உள்ள, ஒரு முற்போக்கு அரசுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கின்றோம். தமிழ்நாட்டில் எப்படி சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்று ஆக்கினார்களோ, அதைப் பின்பற்றி, பாண்டிச்சேரி அரசும் செய்திருக்கிறது, தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது. அதே மாதிரி, கரு நாடக மாநிலத்திலும் சுயமரியாதைத் திருமணங்கள் சட்டபூர்வமாக செல்லுபடியாவதற்குத் தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.
காரணம், தந்தை பெரியார் சொன்னபடி, ‘‘மானமும் அறிவும் மனிதருக்கு அழகு.’’ ஆகவேதான், இதிலே கட்சி இல்லை, ஜாதி இல்லை, மாநில எல்லை இல்லை, மானிடம் தழுவிய ஒன்று என்று கூறி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன்.
வாழ்க மணமக்கள்! வளர்க பகுத்தறிவு! நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.
