திருச்சி, ஆக. 6- தவெக முதல் நிதிநிலை அறிக்கை குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் விமர்சனங் களை முன்வைத்து வரும் நிலையில், பள்ளிக் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருப்பதாக திமுக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி சுட்டிக்காட்டியுள்ளார்.
திராவிட மாடல் ஆட்சியின் போது கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வந்ததை சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய தவெக அரசின் நிதிநிலை அறிக்கையில் நிதி குறைக்கப்பட்டிருப்பது குறித்து தனது ‘எக்ஸ்’ (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அன்பில் மகேஸ் தனது பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது: “கல்வி மட்டுமே யாராலும் பறிக்க முடியாத சொத்து” என உரக்கச் சொல்லும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில், பள்ளிக்கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு ஒவ்வொரு ஆண்டும் ஏறுமுகத்திலேயே இருந்தது. திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறைக்கு 2025-2026ஆம் நிதியாண்டில் ரூ.46,767 கோடியும், 2026-2027 நிதியாண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ரூ.48,534 கோடியும் ஒதுக்கப்பட்டது. ஆனால், கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டதைக் காட்டிலும் குறைவான நிதியே தற்போதைய தவெக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது. கடந்த 2025-2026ஆம் நிதியாண்டை ஒப்பிடுகையில் இது ரூ.2,240 கோடி குறைவாகும்.
மேலும், “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்ற பெருமை என்றென்றும் தொடர்வதை உறுதி செய்ய வேண்டியது தற்போதைய தவெக அரசின் முக்கியக் கடமை என்பதை மறந்துவிடக் கூடாது என்றும் அவர் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
