நியாயமே இல்லாத நீட் அதிர்ச்சித் தரவுகள்! (2)

6 Min Read

கட்டுரை

மூத்த பத்திரிகையாளர்
ஆர். விஜய்சங்கர்,
மேனாள் ஆசிரியர், ஃப்ரண்ட்லைன் (Frontline)

நேற்றைய (2.8.2026) தொடர்ச்சி….

பாகுபாடுகளை ஆழமாக்கும் “நீட்”

நாட்டிலிருக்கும் பள்ளிகளுக்கிடையே நிலவும் பாகுபாட்டை ”நீட்” மேலும் ஆழமாக்குகிறது. நீட்டின் கேள்வித்தாள்கள் சுமார் 30,000 சிபிஎஸ்ஈ (CBSE) பள்ளிகளும், 2500 அய்சிஎஸ்ஈ (ICSE) பள்ளிகளும் பின்பற்றும் பாடத்திட்டங்களை அடிப்படையாகக் கொண்டவை. மாநில கல்வி வாரியங்களின் பாடத்திட்டத்தில் பயின்று வரும் மாணவர்கள் இந்த ஒரே விஷயத்தில் கழித்துக் கட்டப்படுகின்றனர்.  (படம் 1)

மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு நீட் தேர்வுமுறையை ஆராய்வதற்காக நியமித்த நீதிபதி. ஏ.கே. ராஜன் ஆணையம் இந்தப் பாகுபாட்டையும் பாதிப்பையும் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறது.

2010-2011 கல்வியாண்டில் தமிழ்நாடு மாநில கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தில் படித்த 2,232 மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் இடம்பிடித்தனர்; 14 சிபிஎஸ்ஈ மாணவர்களுக்கு மட்டுமே இடம் கிடைத்தது.

2013இல் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு நிலைமை தலைகீழாக மாறியது.

2020-2021 கல்வியாண்டில் 1,604 சிபிஎஸ்ஈ மாணவர்கள் தேர்வுபெற்றனர்.

அதே போல, நீட் அறிமுகமாவதற்கு முன் பயின்ற 65.17% கிராமப்புற மாணவர்கள் தமிழ்நாடு அரசின் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடிந்தது.

2020-2021இல் இது 49.91% ஆகக் குறைந்தது.

இத்தகைய தரவுகளை முன்வைத்த ஏ.கே. ராஜன் ஆணையம் நீட் மாநில கல்வித் திட்டங்களில் பயின்றவர்களுக்கும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், தமிழ்வழி கல்வி பயின்றவர்களுக்கும், முதல் தலைமுறை பட்டதாரியாக முனைபவர்களுக்கும், குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும், பயிற்சி நிலையங்களுக்கு சென்று பயிலும் வசதியில்லாதவர்களுக்கும் எதிராக பாரபட்சம் காட்டுகிறது என்கிற உண்மையை தரவுகளுடன் நிறுவியது. மேலும் நீட் மேலும் சில ஆண்டுகளுக்கு தொடர்ந்தால் தமிழ்நாட்டின் பெருமைக்குரிய ஆரம்ப சுகாதார நிலையங்களுகுத் தேவையான அளவு மருத்துவர்கள் கிடைக்கமாட்டார்கள், அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான அளவு மருத்துவ வல்லுநர்களும் இருக்கமாட்டார்கள் என்று எச்சரித்திருக்கிறது.  நீட் தேர்வு தொடர்பாக வெளியாகியிருக்கும் புள்ளி விவரங்கள் அகில இந்திய அளவிலும் இத்தகைய பாதிப்புகளை உண்டாக்கும் என்று தெளிவாகக் காட்டுகின்றன. (படம் 2)

கட்டுரை கட்டுரை கட்டுரை

கொள்ளை லாபம் கொட்டி தரும் நீட்

ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வில் சுமார் 23 லட்சம் மாணவர்கள் பங்கேற்கிறார்கள். இவர்களில் சுமார் 11.5 லட்சம் பேர்தான் தேர்வு பெறுகிறார்கள்.

நாட்டில் இருக்கும் மொத்த மருத்துவக் கல்லூரி இடங்கள் 1,36,939.

இவற்றில் 63,296 இடங்கள் அரசுக் கல்லூரிகளிலும் 73,643 இடங்கள் தனியார் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் இருக்கின்றன.

இவற்றில் குறைந்தது 50%  இடங்கள் நிறுவன நிர்வாகத்திற்கும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் ஒதுக்கப்படுகின்றனர். இந்த ஒதுக்கீடுகளில் ரிசர் வேஷன், “மெரிட்” என்றெல்லாம் எதுவும் இல்லை.

பணம் என்பதுதான் ஒரே கடவுச் சொல். தோராயமான கணக்கீடுகளில் படி நிர்வாக ஒதுக்கீட்டில் வரும் ஒரு இடத்துக்கு ரூ.15 லட்சம் முதல் 25 லட்சம் வரை கட்டணம் – வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டில் ஒரு இடத்துக்கு ரூ. 25 லட்சம் முதல் ரூ. 40 லட்சம் வரை கட்டணம்.

இதனால் மேற்கூறிய நிறுவனங்கள் ரூ. 10,000 கோடி வரை கொள்ளையடிக்கின்றன. இதனுடன் விடுதிக் கட்டணம் போன்ற இதர செலவுகளும் சேரும்.

கட்டுரை கட்டுரை

’கரப்பான்’களின் கோபம் ஏன்?

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்திற்கு மாணவரிடையே  கிடைத்த மாபெரும் ஆதரவுக்கு மேற்கூறிய அமைப்புரீதியான பிரச்சினைகளின் நீண்டகாலத் திரட்சி காரணம் என்ற போதிலும் நீட் வினாத்தாள்கள் கசிந்து 23 லட்சம் மாணவர்கள் மீண்டும் தேர்வெழுத வேண்டிய துயரத்துக்கு ஆளாக்கபட்டனர் என்பது உடனடிக் காரணம்.

இலட்சக்கணக்கான மாணவர்களின் எதிர் காலத்தைத் தீர்மானிக்கும் நீட் தேர்வை நடத்தும் நேஷனல் டெஸ்டிங் ஏஜன்சி (NTA) என்பதை ஒன்றிய அரசு எவ்வளவு அலட்சியமாக நடத்தி வருகிறது என்கிற உண்மையும் இப்போது வெளியாகியிருக்கிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலங்களவை உறுப்பினர் வி. சிவதாசன் ஜுலை 22 அன்று எழுப்பிய கேள்விக்கு துணை கல்வி அமைச்சர் சுகந்த மஜூம்தார் அளித்த பதில்: இந்த முகமையின் நிர்வாகத்திற்கு அனுமதிக்கப்பட்ட அலுவலர்களின் எண்ணிக்கை 39. இதில் 15 இடங்கள் காலியாக இருக்கின்றன. மீதமிருக்கும் 24 பேரும் இந்த அமைப்புக்கென்றே தனியாக நியமிக்கப்பட்டவர்கள் அல்ல. அவர்கள் பல்வேறு அரசுத் துறைகளிலுருந்து தற்காலிகமாக அங்கு பணிக்கு அனுப்பப்பட்டவர்கள். இந்த  24 பேருக்கு உதவியாக 73 நபர்கள் ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இது தவிர, 124 வெளியாட்களும் அவுட்சோர்சிங் முறையில் பணியாற்றுகின்றனர்.

2018இல் நியமிக்கப்பட்ட இந்த அமைப்பு, மருத்துவம் மற்றும்  பொறியியல் படிப்புகளுக்கான் நுழைவுத் தேர்வுகள், பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் யூஜிசி-நெட் போன்ற 270 தேர்வுகளை இதுவரை நடத்தியுள்ளது. இதை நம்பி இதுவரை 6.6 கோடி மாணவர்கள் பல்வேறு தேர்வுகளை எழுதியிருக்கின்றனர் – கடந்த ஆண்டு மட்டும் 65 லட்சம் பேர். இதுவரை குறைந்தபட்சம் 5 முறை நீட் வினாத்தாள்கள் கசிந்திருப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கேள்வித்தாள்களின் தரமும் கேள்விக்குள்ளாகி யிருக்கிறது. வினாத்தாள் தயாரிப்பவர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் போன்றோர் பெரும்பாலும் கல்விப் புலத்தில் சிறப்பு பெற்றவர்கள் அல்ல என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. (படம் 3)

கட்டுரை கட்டுரை

‘வேலையின்மை’ எனும் கொடுமை

கல்வி, டியூஷன், கோச்சிங் ஆகியவற்றுக்கான செலவுகள் என்று பெரிய பொருளாதாரத் தடைகளையும், விவரிக்க இயலாத சிரமங்களையும் தாண்டி நுழைவுத் தேர்வுகளை லட்சக் கணக்கானோர் எழுதுவதற்கு ஒரு முக்கியக் காரணம் கண்ணியமான வேலை வாய்ப்புதான்.

நரேந்திர மோடி 2014இல் பிரதமரான போது ஆண்டுக்கு 2 கோடி வேலைகளை உருவாக்குவேன் என்று வாக்குறுதியளித்தார். ஆனால் 47 கோடி என்று மதிப்பிடப்பட்டிருக்கும் இந்திய உழைப்பாளர்களில் 82% பேர் முறைசாரா தொழில்களில் பணிப் பாதுகாப்பு, வருங்கால வைப்புநிதி, காப்பீடு, சமூகப் பாதுகாப்பு வசதிகளின்றிதான் இருக்கின்றனர்.

சுயதொழிலில் 58.2% பேரும், தற்காலிக வேலைகளில் (casual labour) 19.8% பேரும் இருக்கிறார்கள். முறையாக அமைக்கப்பட்ட ஆலைத் தொழிலாளர்களில் 42% பேர் பெரும்பாலும் பணி நிரந்தரமில்லாத ஒப்பந்த தொழிலாளர்கள். இந்த வகையிலான தொழிலாளர்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் 8% என்கிற அளவில் அதிகரித்து வருகிறது.

பொதுவான இந்தச் சூழலில்தான் 15 வயதிலிருந்து 26 வயது வரையிலான ஜென் இசட் தலைமுறையும், 27 வயது முதல் 42 வயது வரையிலான ஜென் ஒய் தலைமுறையும் தம் வாழ்க்கையைத் தேட வேண்டியிருக்கிறது. இந்த இரு பிரிவுகளையும் சேர்ந்த இளைஞர்களின் எண்ணிக்கை 37 கோடி என்று அய்க்கிய நாடுகளின் சபையின் 2025ஆம் ஆண்டிற்கான கணக்கெடுப்பு கூறுகிறது.. உலகிலேயே அதிக அளவு இளைஞர்களைக் கொண்டிருக்கும் இந்தியாவில் இவர்களின் உழைப்பு சக்தியைச் சரியாகப் பயன்படுத்தினால் வளர்ச்சி என்பது பேச்சளவில் இல்லாது நாம் உண்மையில் கண்ணால் காணக் கூடியதாக இருக்கும்.

ஆனால் அதற்கான கொள்கைகள் இல்லை. ஒன்றிய அரசின் புள்ளியியல் மற்றும் திட்டச் செயலாக்கத் துறை அவ்வபோது Periodic Labour Force Survey என்கிற கணக்கெடுப்பை நடத்துகிறது. 2023-2024 ஆண்டிற்கான கணக்கெடுப்பின் படி 29.94% ஜென் இசட் தலைமுறையினர் உழைப்பதற்குத் தயாரான வயதில் இருக்கிறார்கள். இவர்களில் 12.3% பேர் ஊதியமில்லாமல் குடும்பங்கள் நடத்தும் வேலைகளிலும், 12.3% பேர் தற்காலிக, முறைசாராப் பணிகளிலும் இருக்கின்றனர். 11.9% பேர் வேலையின்றி இருக்கின்றனர்.

இந்தச் சூழலில்தான் அதிகம் படித்தால் நல்ல வேலை கிடைக்குமென்கிற நம்பிக்கையில் இந்த இளைஞர் பட்டாளம் நம்பிக்கையுடன்  நுழைவுத் தேர்வுகள் எழுதுகின்றது.

ஏழு மலைகள், ஏழு கடல்கள் தாண்டி வருவது போல் பள்ளிப் படிப்பை முடித்து வரும் இளைஞர்களுக்கு நீட் தேர்வு போன்றவற்றில் நடைபெறும் முறைகேடுகளும், ஊழல்களும் ஏற்படுத்தியிருக்கும் அயர்ச்சியும், விரக்தியும் பெருகிப் பெருகி இன்று ஒரு மாபெரும் போராட்ட வடிவத்தை அடைந்திருக்கிறது.

நியாயமான நீட் என்கிற கோரிக்கையுடன் நடந்திருக்கும் போராட்டம் நோயின் அறிகுறியைக் குறிவைத்து நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு நீட் என்கிற நோயை முற்றிலும் ஒழிப்பதில்தான் இருக்கிறது.

ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கலாச்சாரம் என்று செயல்பட்டுவரும் ஒரு அரசின்  ஓர் அமைச்சரை நீக்குவதின் மூலம் மட்டும் அந்த நோயை ஒழித்துவிட முடியாது.

கல்வியை அரசியலமப்புச் சட்டத்தின்  மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது தீர்வுக்கான முதல் படி.  அது நடக்கும் வரை நீட்டிலிருந்து தமிழ் நாட்டிற்கு விலக்கு அளிப்பது மட்டுமே மாநிலத்தின் இளைஞர்களையும், மருத்துவக் கட்டமைப்பையும் காப்பாற்றுவதற்கு ஒரே வழி.

நிறைவு

நன்றி: மின்னம்பலம் இணையதளம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *