புதுடில்லி, ஆக.3- டில்லியில் அண்மையில் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’யினர் நடத்திய போராட்டத்தின் போது, மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் டில்லி காவல் ஆணையர் ஆகியோரே முழு பொறுப்பேற்க வேண்டும் என்று அகில இந்திய மாணவர் சங்கத்தின் தேசிய தலைவர் நேஹா போரா குற்றம் சாட்டியுள்ளார்.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியவதாவது:
“கடந்த ஜூலை 20ஆம் தேதி போராட்டம் நடத்திய அமைதியான மாணவர்கள் மீது பாதுகாப்பு படையினர் பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியது ஏன்? பாதுகாப்புப் படையினருக்கு இத்தகைய ஆயுதங்கள் வழங்கப்பட்டது யாருடைய உத்தரவின் பேரில்?”
“போராட்டக்காரர்களைக் காயப்படுத்தும் நோக்கில் ஆணிகள் பொருத்தப்பட்ட தடிகள் பயன் படுத்தப்பட்டது ஏன்?” “இந்தக் கொடூர நடவடிக்கைகள் மாஜிஸ்டிரேட் அல்லது உயர் அதிகாரிகளின் உத்தரவின்படி எடுக்கப்பட்டிருந்தாலும், அதற்கான இறுதி அரசியல் பொறுப்பு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையே சேரும். மாஜிஸ்டிரேட்டின் உத்தரவின் பேரில் இது நடந்திருந்தால், கட்டுப்பாடற்ற எத்தகைய உள்துறை அமைச்சராக அவர் செயல்படுகிறார்?”
“ஒருவேளை இது உள்துறை அமைச்சரின் நேரடி உத்தரவின்படி நடந்திருந்தால், சாதாரண பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மீது பெல்லட் துப்பாக்கிகளால் சுடக்கூடிய எத்தகைய குற்றவியல் ஆட்சியை அவர் நடத்துகிறார்?” மாணவர்கள் மீதான இந்தத் தாக்குதலுக்கு முழு முதற்காரணமான ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாக பதவியில் இருந்து விலகவேண்டும் என்றும், டில்லி காவல் ஆணையர் அனுராக் குமார் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் நேஹா போரா வலியுறுத்தினார்.
