புதுடில்லி, ஆக.2- தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத் துக்கு ரூ.1,800 கோடி இழப்பு ஏற்படுத்திய விவகாரத்தில் அணில் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் கேபிட்டல் லிமிடெட் நிறுவனம் மீது சி.பி.அய். வழக்குப்பதிவு செய்துள்ளது.
கடன் பத்திரங்களில் முதலீடு
பிரபல தொழில் அதிபர் அணில் அம்பானி தலைவராக இருந்த ரிலையன்ஸ் கேபிட்டல் நிறுவனம் கடந்த 2013-2014ஆம் ஆண்டில் கடன் பத்திரங்களை வெளியிட்டது.
அதன் தொடர்ச்சியாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எப்.ஓ.) சார்பில் ரூ.2,500 கோடி அளவுக்கு ரிலையன்ஸ் கேபிட்டல் நிறுவனத் தின் பத்திரங்களில் முதலீடு செய்யப் பட்டது.
பின்னர் ரிலையன்ஸ் கேபிட்டல் நிறுவனத்தில் நடந்த தணிக்கை நடவடிக்கையில் கடந்த 2019 முதல் 2021ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஏராளமான சட்டவிரோத பரிவர்த்தனைகள் நடந்திருப்பது கண்டறியப்பட்டது.
ரூ.1,816 கோடி இழப்பு
குறிப்பாக முறையற்ற கடன் வழங்கல், நிதியை திசைதிருப்புதல், பிணைக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட முறைகேடுகள் நடந் திருப்பதை அமலாக்கத்துறை விசாரணையில் கண்டறியப்பட்டது.
இந்த முறைகேடுகளால் தொழி லாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்துக்கு ரூ.1,816.22 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
எனவே இந்த விவகாரத்தில் ஒன்றிய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் கடந்த மாதம் 21ஆம் தேதி புகார் அளித்தது. மோசடி, குற்றச்சதி மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பிற்கு இழப்பை ஏற்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகள் அந்த புகாரில் கூறப்பட்டு உள்ளன.
இந்தப் புகாரின் பேரில் ரிலையன்ஸ் கேபிட்டல் நிறுவனம் மற்றும் அதன் மேனாள் தலைவர் அணில் அம்பானி ஆகியோர் மீது சி.பி.அய். வழக்குப்பதிவு செய்துள்ளது.
அணில் அம்பானி மறுப்பு
அதேநேரம் இந்த குற்றச்சாட்டை அணில் அம்பானி மறுத்து உள்ளார்.
இது தொடர்பாக அவரது செய்தித் தொடர்பாளர் வெளி யிட்ட அறிக்கை ஒன்றில்,
‘சி.பி.அய். பதிவு செய்துள்ள வழக்கு ரிலையன்ஸ் கேபிட்டல் லிமிடெட் தொடர்பானது. இந்த நிறுவனத்தில் 2005 முதல் நவம்பர் 2021 வரை அணில் அம்பானி செயல்சாராத இயக்குநர் மற்றும் தலைவராக பணியாற்றினார். அப்போது இந்திய ரிசர்வ் வங்கி அந்த நிறுவனத்தின் இயக்குநர் குழுவை கலைத்துவிட்டு, ஒரு நிர்வாகியை நியமித்தது’ என கூறப்பட்டு இருந்தது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்பு தொடர்பாக அணில் அம்பானி மீது சி.பி.அய். வழக்குப்பதிவு செய்தி ருப்பது ரிலையன்ஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
