கொளத்தூரில் தேர்தல் முறையாக நடக்கவில்லை மூன்று இயந்திரங்கள் சரியில்லை; நீதிமன்றத்தை நாடுவோம்! தி.மு.க.வின் மூத்த வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ தகவல்

3 Min Read

சென்னை, ஆக.2 கொளத்தூர் தொகுதியில் முறையாக தேர்தல் நடக்கவில்லை என திமுக தெரிவித்துள்ளது. ஆய்வு செய்த 8 இயந்திரங்களில் 3 இயந்திரங்கள் சரியாக இல்லை என்றும், பூத் எண் 57 இல் உள்ள இயந்திரங்களை ‘சீல்’ வைத்து பாதுகாப்பாக வைக்க வேண்டும் எனவும் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார். மு.க ஸ்டாலின் ஆலோசனைப்படி நீதி மன்றத்தை நாடுவோம் என தி.மு.க.வின் மூத்த  வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ கூறியுள்ளார்.

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உள்பட்ட 14 வாக்குச்சாவடிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் என தி.மு.க. தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தது. இதையடுத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) ஆய்வு செய்யும் பணி கடந்த 29 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது.

கொளத்தூர் தொகுதி

நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலை வருமான மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு இருந்தார். இவரை எதிர்த்து தவெக சார்பில் வி.எஸ்.பாபு போட்டியிட்டார். தேர்தல் முடிவில் வி.எஸ்.பாபு 8,795 வாக்கு கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தேர்தல் முடிவுகள் வெளியாகி 2 மாதங்களுக்கும் மேல் ஆகியுள்ள நிலையில், கொளத்தூர் தொகுதிக்கு உள்பட்ட 14 வாக்குச்சாவடிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தது. இதையடுத்து, சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த கொளத்தூர் தொகுதிக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரங்கள் கடந்த 29 ஆம் தேதி ஆய்வு செய்யப்பட்டன.

முறையாக தேர்தல் நடக்கவில்லை

மாநகராட்சி ஆணையர் சமீ ரன் முன்னிலையில் இந்த மின்னணு (இவிஎம்) இயந்தி ரங்கள் திறக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டன. தி.மு.க. சார்பில் மூத்த வழக்குரைஞர் என்.ஆர் இளங்கோ உள்ளிட்டோரும், த.வெ.க. சார்பில் வி.எஸ்.பாபுவின் பிரதிநிதிகள், வழக்குரைஞர்கள் பங்கேற்று இருந்தனர். ஒரு நாளைக்கு 2 வாக்குச்சாவடிகள் வீதம் மொத்தம் 14 வாக்குச்சாவடிகளுக்கு 7 நாள்களாக இந்த வாக்கு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று 4 ஆவது நாளாக வாக்கு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி நடந்தது.

இந்நிலையில் தி.மு.க. மூத்த வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறையாக நடைபெறவில்லை என கூறியுள்ளார். அவர் கூறுகையில், வாக்கு இயந்திரத்தில் 2 சீல்கள் இல்லை. புதிதாக முகவரிப் பதிவு (அட்ரஸ் டேக்) இருந்தது. எனவே, இந்த மொத்த தேர்தலிலேயுமே வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரியாக பாதுகாக்கப்படவில்லை. அல்லது சரியாக பாதுகாக்கப்படாததால் இந்த தேர்தல் முறையான தேர்தல் இல்லை என்பதை அறிவியல் பூர்வமாகவும், சட்டரீதியாகவும் தெரிந்துகொள்ள முடிந்தது.

மூன்று இயந்திரங்கள்
சரியாக இல்லை

இதனை மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் கடந்த 30 ஆம் தேதி 19 கேள்விகளை எழுப்பி கடிதம் கொடுத்து இருக்கிறோம். கடந்த 3 நாள்களாக நடந்த ஆய்வினை காட்சிப் பதிவு செய்து இருக்கிறோம். வாக்குச்சாவடி 57 இல் உள்ள இயந்திரத்தில் 2 சீல் இல்லை. எனவே, இதனை சீல் வைத்துப் பத்திரமாக பாதுகாக்க வேண்டும். ஆய்வு செய்த 8 இயந்திரங்களில் 3 இயந்திரங்கள் சரியாக இல்லை என்று குற்றம் சாட்டினார்.

முன்னதாக சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன், ‘‘உச்சநீதிமன்றம் கொடுத்த ஆணையின்படி, தேர்தல ஆணையம் வாக்கு இயந்திரங்கள் சரி பார்ப்புப் பணியினை செய்து வருகிறது. ஜூலை 30 ஆம் தேதியன்று நடந்த ஆய்வில், எந்தக் குளறுபடியும் இல்லை. நூறு சதவிகிதம் துல்லியமாக இருந்தது’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

உயர் நீதிமன்றத்தையோ, அல்லது
உச்ச நீதிமன்றத்தையோ நாடுவோம்!

மொத்தம் நடைமுறையிலேயே நம்பிக்கை இல்லை என்று தெரிவித்த  தி.மு.க.வின் மூத்த வழக்குரைஞர்
என்.ஆர்.இளங்கோ, ‘‘இதுவரை கிடைத்து இருக்கிற சாட்சியே போது மானது. இந்தத் தேர்தல் சரியான நடைமுறையில் நடக்கவில்லை என்பதற்கு. இது தொடர்பாக மு.க.ஸ்டாலினின் அறி வுரைப்படி உயர் நீதிமன்றத்தையோ, அல்லது உச்சநீதிமன்றத்தையோ நாடுவோம். பூத் எண் 57 இல் உள்ள இயந்திரங்களை சீல் வைத்துப் பாது காப்பாக வைக்க வேண்டும். ஏனென்றால் நாங்கள் நீதிமன்றத்தில் இதனை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்’’ என்று கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *