‘‘நம்முடைய பிள்ளைகளைப் பார்த்து படிக்க உனக்குத் தகுதி உண்டா? உங்களுக்கெல்லாம் எதுக்குய்யா படிப்பு? உன் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டியதுதானே?’’ என்று பழைய ஆசிரியர்கள், உயர்ஜாதித் தனத்தைக் காட்டிக் கொண்டிருந்து, படிக்கவிடாத காலமிருந்தது!
அந்தக் காலத்தை முறித்ததுதான், பெரியார் சகாப்தம்!
அதை மாற்றியதுதான் திராவிட இயக்கம்!
இன்னமும் அந்தப் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது!
பெரம்பலூர், ஆக.1 நம்முடைய பிள்ளைகளைப் பார்த்து ‘‘படிக்க உனக்குத் தகுதி உண்டா? உனக்குப் படிக்க யோக்கியதை உண்டா? உங்களுக்கெல்லாம் எதுக்குய்யா படிப்பு? போய் ஏர் ஊழ வேண்டியதுதானே! உன் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டியதுதானே?’’ என்று பழைய ஆசிரியர்கள், உயர்ஜாதித் தனத்தைக் காட்டி கொண்டிருந்து, நம் பிள்ளைகளைப் படிக்கவிடாத காலமிருந்தது, அந்தக் காலத்தை முறித்ததுதான், பெரியார் சகாப்தம்! அதை மாற்றியதுதான் திராவிட இயக்கம்! இன்னமும் அந்தப் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
பெ.நடராசன் பணி ஓய்வு பாராட்டு விழா –
தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை
கடந்த 29.5.2026 அன்று பெரம்பலூரில், பெ.நடராசன் பணி நிறைவு பாராட்டு விழாவிற்குத் தலைமை வகித்து வாழ்த்துரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.
அவரது வாழ்த்துரை வருமாறு:
மூன்று குடும்பங்கள்
சந்திக்கின்ற விழா!
மிகுந்த மகிழ்ச்சிக்கும், நெகிழ்ச்சிக்கும் உரிய சிறப்பான அருமை நல்லாசிரியர், சீரிய பகுத்தறிவாளர், நல்ல ஆய்வார்ந்த பெரியார் தொண்டர், திராவிட இயக்க உணர்வாளரான பகுத்தறிவாளர் –அப்படிப்பட்ட பெருமைக்குரிய ஆசிரியர் நடராசன் அவர்களுடைய பணிநிறைவு பாராட்டு விழா என்ற சிறப்பான இந்த விழாவிற்கு முன்னிலை ஏற்றிருக்கக்கூடிய அகில இந்திய ஆசிரியர் சங்கத்தினுடைய பெருமைக்குரிய திராவிட கொள்கையாளர், சீரிய பகுத்தறிவாளர், எந்நாளும் எந்நிலையிலும் மாறாத ஒரு தோழர் என்றால் அவர்தான் தலைவர் அண்ணாமலை அவர்கள். இந்த அண்ணாமலை மாறவே மாட்டார். அதுதான் மிக முக்கியம். அதுமட்டுமல்ல, அவர் ஆசிரியராக இருந்து, என்றைக்கும் பிரம்பெடுத்தது இல்லை; சாட்டையிலேயும் அடித்துக் கொண்டதும் இல்லை. அப்படிப்பட்ட ஒரு நல்லாசிரியர். அவருடைய முன்னிலை சிறப்பானது. அதைவிட இந்த மாவட்டத்தை நீங்கள் நினைப்பீர்கள், யார் நினைத்தாலும், அப்போது சட்டென்று நம் மனதில் வருபவர் ஆ.இராசா அவர்கள். அவருக்குச் சிறப்புச் செய்தபோது, ‘‘எனக்குக் கூடவா சிறப்பு?’’ என்று கேட்டார். இரண்டு காரணத்தினால் நாங்கள் அவருக்குச் சிறப்பு செய்கிறோம். இது ஒரு நல்ல குடும்ப சந்திப்பு விழா – பாராட்டு விழா என்பதை விட, மூன்று குடும்பங்கள் சந்திக்கின்ற விழா!
என்ன அந்த மூன்று குடும்பங்கள் என்று நினைப்பீர்கள். ஒன்று கல்விக் குடும்பம். இன்னொன்று பகுத்தறிவுக் குடும்பம். மூன்றாவது குருதிக் குடும்பம். ஆகவே, எல்லா குடும்பங்களும் இணைத்திருக்கக்கூடிய, ஒரு முக்கொம்பு போன்ற, முத்தமிழ் போன்ற ஓர் அற்புதமான பாராட்டு விழா! நாடாளுமன்ற உறுப்பினர் நம்முடைய ஆ.இராசா அவர்கள், இங்கே வந்திருக்கிறார். ஆ.இராசா அவர்கள், ஓர் எடுத்துக்காட்டு. எதற்கு எடுத்துக்காட்டு? நெருப்பாற்றிலில், நீச்சல் அடித்துப் பரிசு பெறக்கூடிய, ஒரு சிறப்பான – பாடம் போதிக்கின்ற ஆசிரியராக அவர் இருக்கின்றார், எடுத்துக்காட்டாக என்பதற்கு அடையாளம், அது இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது; நாளைக்கும் தொடரும். ஏனென்றால், அவர் நாளைக்கும் கொள்கையாளர், போராளி, களப்போராளி. அந்தக் களப்போராளிகளுக்கெல்லாம் அதுதான் கிடைக்கிற பரிசு, நம்முடைய நாட்டில். அப்படிப்பட்ட அருமையான தோழர் அவர் என்பதற்கு அவைதான் அடிப்படையாகும்.
பெரம்பலூர் வரலாறுபற்றி
உங்களுக்கெல்லாம் தெரியும்!
இரண்டாவது, ஆசிரியர்களுக்குத் தெரியும்; ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் எல்லாம் இங்கே இருக்கிறார்கள். உங்களுக்கும் பெரம்பலூர் வரலாறு தெரியும்; உள்ளூர்காரரர்களுக்கு, வெளியூர்க்காரனாகிய நான் சொல்லவேண்டியதில்லை. ஆனால், எனக்கு ‘யாவும் ஊரே’, அதனால், நான் சொல்லப் போகிற விஷயம், உங்களுக்கு நினைவில் இருக்கும்.
இரண்டு மைல் போய் வரவேண்டும்!
ஒரு 50, 60 ஆண்டுகளுக்கு முன்னால், ஆசிரியர்களைத் தண்டிக்கவேண்டும் என்றால், எங்கே அனுப்புவார்கள் என்றால், இரண்டு இடங்களுக்குத்தான் எனக்குத் தெரிந்து. அப்படிப்பட்ட அந்தத் தண்டனைக்குரிய மாவட்டமாக இருந்த பெரம்பலூர் மாவட்டத்தை, இன்றைக்கு ஒரு சிறப்பான மாவட்டமாக, மாற்றிய பெருமை இந்த இராசாவுக்குத்தான் உண்டு. பெரம்பலூர் மாவட்டத்தைக் கேட்டு வாங்கி, தேர்ந்தெடுத்து அதிகாரிகள் இட மாறுதல் பெறுகிறார்கள். அதுதான் மிக முக்கியமாக எண்ணத்தக்கது. நான் சொல்வது ஒரு ஒப்பனை அல்ல; உண்மை அதுதான். அப்பொழுது இந்த ஊரில் ஒரு நல்ல உணவு விடுதி கூட கிடையாது. ஒரே ஒரு விடுதிதான் – அரசாங்க விடுதி இருந்தது. இரண்டு சாலைகளும் பிரியும் இடத்தில் இருக்கும் என்று உங்களுக்குத் தெரியும். இந்த ஊரில் அய்யா வந்து தங்கினால், அவருக்குக் காபி வாங்கி வரவேண்டும் என்றாலும்கூட, இரண்டு மைல் போய் வரவேண்டும்.
‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய
ஒப்பற்ற சாதனை!
அதே மாதிரி, தென்னார்க்காடு மாவட்டத்தில், யாரையாவது, ஆசிரியர்களை, அதிகாரிகளை மிரட்ட வேண்டும் என்றால், செஞ்சி பக்கம் மாற்றிவிடுவோம் என்று சொல்வார்கள். இந்த இரண்டு பகுதியும் இன்றைக்கு மாறி இருக்கிறது என்றால், ‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய ஒப்பற்ற சாதனை அது. காமராசர் ஆட்சியில் தொடங்கியது அது.
நீரை விட ரத்தம் கெட்டியானது, ரத்தத்தை விட கொள்கை உறவு கெட்டியானது!
ஆகவே, அப்படிப்பட்ட ஓர் அற்புதமான செயலை செய்து கொண்டிருக்கின்ற ஓர் அருமையான எதிர்நீச்சல் வீரர் இராசா அவர்களுக்குப் பாராட்டு என்று இருக்கிறதே, அதற்காகத்தான் பொன்னாடை அணிவித்தோம். என்றைக்கும் எங்களுடைய சகோதரர், கொள்கைக் குடும்பத்தினுடைய உறவு மாறவே மாறாது. அந்த உறவு என்றைக்கும் ரத்த உறவை விட சிறப்பானது. ‘‘blood is thicker than water’’ அதாவது, ‘‘நீரை விட ரத்தம் கெட்டியானது.’ ரத்தத்தை விட கொள்கை உறவு கெட்டியானது என்பதற்கு அடையாளம்தான் இந்தப் பாராட்டு. அப்படிப்பட்ட அருமை நண்பர் ஆ.இராசா அவர்கள். இதில் இன்னொரு தனிச் சிறப்பு என்னவென்றால், எல்லோரும் ஆசிரியர்கள். ஆனால், இந்தச் சிறப்புக்குச் சிறப்பு என்னவென்றால், தொடக்கப்பள்ளி கல்வித் துறை இயக்குநர் டாக்டர் நரேஷ் அவர்கள் சென்னையில் இருந்து வந்திருக்கிறார். அவருடைய, அன்புக்கும் பாராட்ட வேண்டும்; அவருடைய துணிவுக்கும் பாராட்ட வேண்டும்.
அன்பையும் பாராட்டும், துணிவையும் பாராட்டும், துணை நிற்கும்!
இந்த மேடை அன்பையும் பாராட்டும், துணிவையும் பாராட்டும், துணை நிற்கும். அதுபோல இங்கே சிறப்பாக இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டுள்ள பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் மோகன் அவர்கள், மாவட்டக் காப்பாளர், எங்களுடைய அருமைத் தோழர், பல்கலைக்கழகத் தோழர் அக்ரி ஆறுமுகம் அவர்கள். நான் என்ன வேண்டுகோள் இங்கே வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு வந்தேனோ, அந்த வேலையை அவர் முதலிலேயே செய்துவிட்டார். இருந்தாலும் நான், பின்பு தெளிவாகச் சொல்கிறேன். அப்படிப்பட்ட தோழர் அக்ரி ஆறுமுகம் அவர்களே, இப்பாராட்டு விழாவிற்கு வந்திருக்கின்ற அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அய்யா நடராசனுக்குத்தான் பணி ஓய்வே தவிர, அவரது வாழ்விணையருக்கு இல்லை!
இந்தக் குடும்பத்திலே, குருதிக் குடும்பத்திலே அய்யா நம்முடைய பெருமாள் நடராசன் அவர்களுக்கு வாழ்விணையரான முத்துக்கண்ணு அம்மையாரையும் பாராட்ட வேண்டும். ஏனென்றால், அடிக்கட்டுமானம் இல்லாமல் கோபுரத்துக்கு மரியாதை கிடையாது. அந்த அடிக்கட்டுமானமாக இப்பொழுதும் அவர்கள் பணிகளைச் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். இவருக்குத்தான் பணி ஓய்வே தவிர, அம்மையாருக்குப் பணி ஓய்வில்லை. ஆனால், ஒன்றே ஒன்று, இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிற பகுத்தறிவாளன்; பெருமை யாக இருக்கிறது. அவருக்குத் திருமணம் ஆயிற்று. நம்முடைய பிள்ளைகளைப் பார்த்து ‘‘படிக்க உனக்குத் தகுதி உண்டா? உனக்குப் படிக்க யோக்கியதை உண்டா? உங்களுக்கெல்லாம் எதுக்குய்யா படிப்பு? போய் ஏர் ஊழ வேண்டியதுதானே! உன் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டியதுதானே?’’ என்று பழைய ஆசிரியர்கள், உயர்ஜாதித் தனத்தைக் காட்டி கொண்டிருந்து, நம் பிள்ளைகளைப் படிக்கவிடாத காலமிருந்தது, அந்தக் காலத்தை முறித்ததுதான், பெரியார் சகாப்தம்! அதை மாற்றியதுதான் திராவிட இயக்கம்! இன்னமும் அந்தப் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட ஓர் அற்புதமான சூழ்நிலையில், அந்த அம்மையார் அவர்களும் நிறைய படித்து, ஆசிரியராக இருக்கிறார்கள். அது பெரிய வாய்ப்பு!
பகுத்தறிவாளன் அமெரிக்காவில் இருக்கிறார்!
அதே மாதிரி பாத்தீர்களேயானால், நம்முடைய ஊரில், உள்ளூரிலயே எளிய கிராமத்தில் பிறந்த, அவருடைய மகன், நல்ல பெயர் அவருக்கு, பகுத்தறிவாளன். அந்தப் பகுத்தறிவாளன் அமெரிக்காவில் இருக்கி றார். நாங்களெல்லாம் படிக்கும்போது, அமெ ரிக்காவை அட்லாஸ் வரைபடத்தில்தான் பார்ப்போம். அமெரிக்காவைப் பார்க்க முடியுமா? என்று தெரியாது அன்றைக்கு. ஆனால், இன்றைய காலகட்டத்தில் பார்த்தீர்களேயானால், ஏதோ திருச்சிக்கும் – பெரம்பலூ ருக்கும் போய்விட்டு வருவது மாதிரி, அமெரிக்காவில் எங்கள் பிள்ளைகள் இருக்கிறார்கள், அதனால் ‘‘அங்கே போய்விட்டு வருகிறோம்’’ என்று சாதாரணமாகச் சொல்கிறார்கள்.
‘‘முன் ஏறு எப்படிப் போகிறதோ,
அதே போன்று பின் ஏறு போகும்!’’
இப்பொழுது கூட, சில பெற்றோர், தம் பிள்ளைகள் அமெரிக்காவில் இருக்கிறார்கள் என்று சொல்வார்கள்; ஆனால், எந்த மாநிலத்தில் இருக்கிறார்கள் என்று கேட்டால், அவர்களுக்குச் சொல்லத் தெரியாது. அதாவது, அவர்களுக்கு அரிசோனாவும் தெரியாது; அரியானாவும் தெரியாது. ஆனால், வாரவாரம் பிள்ளை கூப்பிடுறார், தொலைப்பேசியில் என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட ஓர் அற்புதமான சூழல் இன்றைக்கு இருக்கிறது. பகுத்தறிவாளன் அவர்களுக்குத் திருமண மாயிற்று. அதே மாதிரி அவருடைய மருமகள், புது மணமகள் ம.யஸ்சஸ்வி. ஒரு நல்ல குடும்பம்; ஒரு குடும்பத்தில் படிக்க ஆரம்பித்தால், ‘‘முன் ஏறு எப்படிப் போகிறதோ, அதே போன்று பின் ஏறு போகும்’’ என்று விவசாயிகள் சொல்வார்கள். அப்படிப்பட்ட ஓர் அருமையான வாய்ப்பு இந்தக் குடும்பத்திற்கு.
(தொடரும்)
