புதுடில்லி, ஜூலை 31 ‘வந்தே மாதரம்’ அவமதிப்பை குற்றமாக்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கு இடையே மக்களவையிலும் நேற்று (30.7.2026) நிறைவேற்றப்பட்டது.
மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு, மக்களவையில், ‘வந்தே மாதரம்’ சட்ட மசோதா கொண்டு வரப்பட்டு நேற்று (30.7.2026) விவாதம் நடைபெற்றது. இதில், நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தி ருந்தனர். ‘வந்தே மாதரம்’ பாடாவிட்டால் தேசத் துரோகிகளா? என்று திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பியிருந்தார்.
விவாதத்தைத் தொடர்ந்து, மக்களவையிலும் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பதை தண்டனைக்குரிய குற்றமாக்க வகை செய்யும் மசோதா நேற்று (30.7.2026) நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மக்களவை இன்று (31.7.2026) காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தேசிய கவுரவம் மீதான அவமதிப்புகள் தடுப்புச் சட்ட திருத்த மசோதா-2026 எனும் அந்த மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறை வேற்றப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் நேற்று (30.7.2026), பரிசீலனை மற்றும் நிறைவேற்றத்துக்காகப் பட்டியலிடப்பட்ட தேசிய கவுரவம் மீதான அவமதிப்புகள் தடுப்புச் சட்ட திருத்த மசோதா-2026 அய் விவாதத்துக்கு அனுமதிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலை யில், மாநிலங்களவையில் மசோதா நிறை வேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மூன்று ஆண்டுகள் வரை
சிறைத் தண்டனை
தேசிய கவுரவம் மீதான அவமதிப்புகள் தடுப்புச் சட்ட திருத்த மசோதா-2026–இன்படி, தேசிய சின்னங்களான தேசியக் கொடி, அரசமைப்புச் சட்டம், தேசிய கீதம் உள்ளிட்டவற்றுடன் தேசியப் பாடலான ‘வந்தே மாதரத்தை’ அவமதிப்பதையும் தண்டனைக்குரிய குற்றமாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தேசிய கீதத்துக்கு உள்ள அதே சட்டபூா்வ பாதுகாப்பை தேசியப் பாடலுக்கும் வழங்கும் புதிய மசோதாவின்படி, வந்தே மாதரம் பாடல் பாடுவதைத் தடுப்பது, இடையூறு விளைவிப்பது உள்ளிட்ட செயல்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
