சாலை வசதி இல்லாததால் தொட்டில் கட்டி மருத்துவப் பயனாளிகளை ஒரு கி.மீ. தூரம் சுமந்து செல்லும் மக்கள்

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

கோத்தகிரி, ஜூலை 30- நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகராட்சிக்கு உட்பட்ட இடுகொரை அருள்நகர் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதியையொட்டி இந்த கிராமம் அமைந்து உள்ளதால், இங்கு வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. கோத்தகிரியில் இருந்து கிராமத்துக்கு செல்ல இடுகொரை ஹட்டி வரை தார் சாலை அமைக்கப்பட்டு உள்ளது.

அங்கிருந்து இடுகொரை அருள்நகர் செல்வதற்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் 6 அடி அகலத்தில் கான்கிரீட் நடைபாதை அமைக்கப்பட்டது. இந்த வழியாக கிராம மக்கள் நடந்து சென்று வந்தனர். ஆனால், அந்த நடைபாதை புதுப்பிக்கப்படாததால் பழுதடைந்து குண்டும், குழியுமாக இருப்பதோடு, ஒற்றையடி பாதையாக மாறியது. இதனால் கிராம மக்களில் யாருக்கேனும் உடல் நலக்குறைவு ஏற்பட்டால், சிகிச்சைக்காக கோத்தகிரியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சாலை வசதி இல்லை.

இதன் காரணமாக கிராம மக்கள் தொட்டில் கட்டி மருத்துவப் பயனாளிகளை தோளில் சுமந்து, 1 கி.மீ. தொலைவில் உள்ள இடுகொரை ஹட்டிக்கு சென்று அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்று வருகின்றனர். அவ்வாறு தேயிலை தோட்டத்திற்கு நடுவே செல்லும்போது, வனவிலங்குகள் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே, பழுதடைந்த நடைபாதையை சற்று அகலப்படுத்தி ஆம்புலன்ஸ் சென்று வரும் வகையில் தார் சாலையாக மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இடுகொரை அருள்நகரை சேர்ந்த ஞானபிரகாஷ் (வயது 53) என்பவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பின்னர் தொட்டில் கட்டி, அவரை சிகிச்சைக்காக கிராம இளைஞர்கள் தோளில் சுமந்து சென்றனர். மருத்துவமனையில் சிகிச்சை அளித்து விட்டு, மீண்டும் அவரது வீட்டுக்கு சுமந்து சென்றனர். இதற்கிடையே சமீபத்தில் சிகிச்சை பலனின்றி ஞானபிரகாஷ் இறந்தார்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், வனவிலங்குகள் நட மாட்டம் அதிகம் உள்ள இடுகொரை அருள்நகர் கிராமத்திற்கு சாலை வசதி இல்லை. இதனால் தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் அன்றாடம் 1 கி.மீ. தொலைவிற்கு வனப்பகுதி வழியாக வனவிலங்குகள் தாக்கி விடுமோ என அச்சத்துடன் கரடு, முரடான ஒற்றையடி பாதை வழியாக நடந்து சென்று வருகின்றனர்.

அவசர சிகிச்சைக்கு மருத்துவப் பயனாளிகளைத் தொட்டில் கட்டி சுமந்து செல்ல வேண்டிய சிரமமான நிலை உள்ளது. இவ்வாறு மருத்துவப் பயனாளிகள், வனவிலங்கு தாக்குதலுக்கு உள்ளானவர்களை தொட்டில் கட்டி சிகிச்சைக்காக கொண்டு செல்லும்போது சில சமயங்களில் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, கிராமத்திற்கு 108 ஆம்புலன்ஸ், வாகனங்கள் வந்து செல்லும் வகையில் தார் சாலை வசதி ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *